ஈல்கானரசு

மத்திய கிழக்கை ஆண்ட ஒரு மங்கோலியக் கானரசு From Wikipedia, the free encyclopedia

ஈல்கானரசு
Remove ads

ஈல்கானரசு என்பது மங்கோலியப் பேரரசின் தென்மேற்குப் பகுதியாக நிறுவப்பட்ட ஒரு கானரசு ஆகும். இக்கானரசு மங்கோலியர்களால் குலாகு உளூஸ் என்றும், அலுவல் ரீதியாக ஈரான்ஜமீன் என்றும் அழைக்கப்பட்டது. ஈரான்ஜமீன் என்பதன் பொருள் ஈரானின் நிலம் ஆகும். இது மங்கோலிய குலாகுவின் குடும்பத்தால் ஆட்சி செய்யப்பட்டது. குலாகு என்பவர் செங்கிஸ் கானின் பேரனும் டொலுயின் மகனும் ஆவார். 1260இல் தன் அண்ணன் மேங்கே கான் இறந்த பிறகு மங்கோலியப் பேரரசின் மத்திய கிழக்குப் பகுதியை குலாகு பெற்றார். இக்கானரசின் முதன்மைப் பகுதியானது தற்போது ஈரான், அசர்பைஜான், மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பகுதிகளாக உள்ளது. இதன் அதிகபட்ச பரப்பளவின் போது ஈல்கானரசானது ஈராக்கு, சிரியா, ஆர்மீனியா, சியார்சியா, ஆப்கானித்தான், துருக்மெனிஸ்தான், பாக்கித்தான், தற்கால தாகெஸ்தானின் பகுதி, மற்றும் தற்கால தஜிகிஸ்தானின் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. 1295இல் காசனில் தொடங்கி பிந்தைய ஈல்கானரசு ஆட்சியாளர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற ஆரம்பித்தனர். 1330களில் ஈல்கானரசானது கறுப்புச் சவால் அழிவைச் சந்தித்தது. 1335ஆம் ஆண்டு கடைசி கானாகிய அபு சயித் மற்றும் அவரது மகன்கள் பிளேக் நோய் தாக்கி இறந்தனர். அவரது இறப்பிற்குப் பிறகு இக்கானரசானது சிதறுண்டு போனது. ஈல்கானரசின் ஆட்சியாளர்கள் ஈரானியப் பூர்வீகத்தைக் கொண்டவர்களாக இல்லாதிருந்த போதிலும், ஈரானிய வரலாற்றுடன் தங்களை இணைத்துக் கொள்ள முயற்சித்தனர். இதன் மூலம் தங்களது ஆட்சியின் உரிமையை நிலை நிறுத்த முயற்சித்தனர். இஸ்லாமுக்கு முந்தைய ஈரானின் சாசானியப் பேரரசின் வாரிசுகளாகத் தங்களைக் காட்டிக் கொள்வதற்காக மங்கோலியர்கள் வரலாற்றாளர்களைப் பணிக்கு அமர்த்தினார்.[6]

விரைவான உண்மைகள் ஈல்கானரசுایلخانان, நிலை ...
Remove ads

விளக்கம்

வரலாற்றாளர் ரசீத்தல்தீன் அமாதனியின் கூற்றுப்படி, அரிக் போகேயைத் தோற்கடித்த பிறகு ஈல்கான் என்ற பட்டத்தை குலாகுவுக்குக் குப்லாய் கான் வழங்கினார். ஈல்கான் என்ற சொல்லுக்கு "பழங்குடியினத்தின் கான், நாட்டின் கான்" என்று பொருள். மங்கோலியப் பேரரசின் மோங்கே கான் மற்றும் அவரது வழிவந்த பெரிய கான்களில் இருந்து வேறுபடுத்தி அறிவதற்காக இந்தத் தாழ்வான "கான்" பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. "ஈல்கான்" என்ற பட்டம் குலாகுவின் வழித்தோன்றல்கள் மற்றும் பிற்காலத்தின் பிற போர்சிசின் இளவரசர்களால் பாரசீகத்தில் பின்பற்றப்பட்டது. ஆனால் 1260க்கு முந்தைய நூல்களில் இந்தப் பெயர் பொருள்வயமாக்கப்படவில்லை.[7]

Remove ads

வரலாறு

தோற்றம்

குவாரசமியாவின் இரண்டாம் முகமது மங்கோலியர்களால் அனுப்பப்பட்ட வணிகக் குழுவை கொன்றபோது 1219இல் குவாரசமிய அரசமரபின் மீது செங்கிஸ் கான் போரை அறிவித்தார். 1219 மற்றும் 1221க்கு இடையில் மங்கோலியர்கள் எளிதாக பேரரசை வென்றனர். முக்கிய நகரங்கள் மற்றும் மக்கள்தொகை மிகுந்த மையங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். செபே மற்றும் சுபுதை தலைமையில் மங்கோலியப் படையானது பாரசீகத்தை சூறையாடியது. அப்பகுதிகளை நாசமாக்கி சென்றது. இந்த படையெடுப்புக்குப் பிறகு திரான்சாக்சியானா மங்கோலிய கட்டுப்பாட்டுக்குள் வந்தது. திரான்சோக்சியானாவின் மேற்கே இருந்த பிரிக்கப்படாத பகுதி செங்கிஸ் கானின் போர்சிசின் குடும்பத்தின் பரம்பரை பகுதியானது.[8]

முகமதுவின் மகன் சலாலத்தீன் மிங்புர்னு இந்தியாவிலிருந்து ஈரானுக்கு அண். 1224இல் திரும்பினார். அவரது தந்தையின் பேரரசில் இருந்து எஞ்சிய எதிரி துருக்கிய அரசுகள் சீக்கிரமே சலாலத்தீனுடன் தங்களது கூட்டணியை அறிவித்தன. நடு பாரசீகத்தை வெல்வதற்காக நடந்த முதல் மங்கோலிய முயற்சியை அவர் முறியடித்தார். எனினும் 1231இல் பெரிய கான் ஒகோடி அனுப்பிய சோர்மகனின் இராணுவம் சலாலத்தீனை தோற்கடித்தது. இந்த மங்கோலிய படையெடுப்பின்போது அசர்பைஜான், மற்றும் பாருசு மற்றும் கெர்மான் மாகாணங்களில் இருந்த தெற்கு பாரசீக அரசமரபுகள் தாங்களாக முன்வந்து மங்கோலியர்களிடம் அடிபணிந்து அவர்களுக்குத் திறை செலுத்த ஒப்புக்கொண்டன.[9] மேற்கில் அமாதான் மற்றும் எஞ்சிய பாரசீகப் பகுதிகள் சோர்மகனின் பாதுகாப்புக்குள் வந்தன. மங்கோலியர்கள் ஆர்மீனியா மற்றும் சார்சியா மீது 1234 அல்லது 1236இல் படையெடுத்தனர். 1238இல் சார்சியா இராச்சியத்தை வென்றனர். அடுத்த வருடமே செல்யூக்குகள் கட்டுப்பாட்டில் இருந்த பெரிய ஆர்மீனியாவின் மேற்குப் பகுதிகளை அவர்கள் தாக்கினர். 1237ஆம் ஆண்டு அப்பாசிய ஈராக்கு மற்றும் இசுமாயிலி பகுதிகள் தவிர பெரும்பாலான பாரசீகம், ஆர்மீனியா, சார்சியா, ஆப்கானித்தான் மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளை மங்கோலியப் பேரரசு அடிபணிய வைத்தது.[10] 1243ஆம் ஆண்டு நடந்த கோசு தக்கு யுத்தத்திற்கு பிறகு பைசு தலைமையிலான மங்கோலியர்கள் அனத்தோலியாவை ஆக்கிரமித்தனர். ரும்மின் செல்யூக் சுல்தானகம் மற்றும் திரேபிசோந்து பேரரசு ஆகியவை மங்கோலியர்களுக்குக் கப்பம் கட்ட ஒப்புக்கொண்டன.[11]

1236ஆம் ஆண்டு குராசான் நிர்மாணிக்கப்பட்ட வேண்டும் மற்றும் ஹெறாத் நகரத்தில் மீண்டும் மக்கள் வாழவைக்கப்பட வேண்டுமென ஒகோடி ஆணையிட்டார். மங்கோலிய இராணுவ ஆளுநர்கள் பெரும்பாலும் தற்போதைய அசர்பைஜானின் முகான் சமவெளியில் முகாம் அமைத்தனர். மங்கோலியர்களால் ஆபத்து ஏற்படலாம் என்பதை உணர்ந்த மோசுல் மற்றும் சிசிலிய ஆர்மீனியாவின் ஆட்சியாளர்கள் பெரிய கானிடம் அடிபணிந்தனர். சோர்மகன் திரான்சுகாக்கேசியா பகுதியை மூன்று மாவட்டங்களாக மங்கோலிய இராணுவ முறையை அடிப்படையாகக் கொண்டு பிரித்தார்.[12] சார்சியாவில் மக்கள் தற்காலிகமாக 8 தியுமன்களாகப் பிரிக்கப்பட்டனர்.[13] 1244ஆம் ஆண்டு பாரசீகத்தில் இருந்த மாவட்டங்களிலிருந்து வரி வருவாயைப் பெறுவதைக் கூட குயுக் கான் நிறுத்தினார். மற்ற இடங்களுக்கும் வரிவிலக்கு அளித்தார்.[14] ஆளுநர் அர்குன் அண்ணன் கொடுத்த புகாரை அடிப்படையாகக் கொண்டு மோங்கே கான் ‘’ஓர்டோக்’’ வணிகர்கள்[15][16] மற்றும் உயர்குடியினர், யாம் நிலையங்கள் மற்றும் குடிமக்களுக்குத் தொந்தரவு கொடுப்பதை 1251ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாகத் தடைசெய்தார். ஓர்டோக்குகள் என்பவர்கள் மங்கோலிய ஒப்பந்த முஸ்லிம் வணிகர்கள் ஆவர்.[17] மத்திய கிழக்கில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆணையிட்டார். மங்கோலிய ஆட்சிக்கு உட்பட்ட மத்திய கிழக்கில் உள்ள ஒவ்வொரு மனிதனும் அவர்களது சொத்து அளவிற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டார். அர்குனுக்குக் கீழ் பாரசீகமானது நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. ஹெறாத், சம், புசாங், கோர், கய்சர், பிருசுகுக், கர்சிசுத்தான், பரா, சிசுதான், காபூல், திரா, மற்றும் ஆப்கானித்தான் ஆகிய பகுதிகளின் மேல் ஆட்சி செய்ய கர்டிட்டுகளுக்கு மோங்கே கான் உரிமை வழங்கினார்.[18]

குலாகு கான்

Thumb
ஈல்கானரசைத் தோற்றுவித்த குலாகு தன் கிறித்தவ ராணி தோகுஸ் கதுனுடன்
Thumb
13ஆம் நூற்றாண்டின் ஒரு மங்கோலிய வில்லாளர்.

செங்கிஸ் கானின் பேரன், டொலுயின் மூன்றாவது மகன், மோங்கே மற்றும் குப்லாயின் தம்பியாகிய குலாகு தான் ஈல்கானரசின் முதல் கான் ஆவார். தனது அண்ணன் மோங்கே 1251ஆம் ஆண்டு பெரிய கானாகப் பதவியேற்றவுடன் வடக்கு சீனாவின் நிர்வாகியாகக் குலாகு நியமிக்கப்பட்டார். எனினும் அடுத்த ஆண்டு வடக்கு சீனாவானது குப்லாயிடம் வழங்கப்பட்டது. குலாகுவுக்கு அப்பாசியக் கலீபகத்தை வெல்லும் பணி வழங்கப்பட்டது. இந்தப் படையெடுப்புக்காக மொத்த மங்கோலிய இராணுவத்தில் 5இல் 1 பங்கு வீரர்கள் குலாகுவுக்கு வழங்கப்பட்டனர். தனது மகன்கள் அபகா மற்றும் எசுமுத்தையும் தன்னுடன் குலாகு அழைத்துச் சென்றார். தன்னுடன் ஏராளமான சீன அறிஞர்கள் மற்றும் வானியலாளர்களையும் அழைத்துச் சென்றார். அவர்களிடம் இருந்து தான் புகழ்பெற்ற பாரசீக வானியலாளரான நசீருத்தீன் அத்தூசீ சீனக் கணிப்பு அட்டவணைகளைப் பற்றி அறிந்துகொண்டார்.[19] ஒரு வானிலை ஆய்வுக்கூடமானது மரகே நகரின் ஒரு குன்றின் மீது அமைக்கப்பட்டது. பைசுவிடமிருந்து 1255ஆம் ஆண்டு பொறுப்பைப் பெற்ற குலாகு திரான்சாக்சியானா முதல் சிரியா வரை மங்கோலிய ஆட்சியை அமைத்தார். 1256 மற்றும் 1258ஆம் ஆண்டுகளில் முறையே நிசாரி இசுமாயிலி அரசு மற்றும் அப்பாசியக் கலீபகத்தை குலாகு அழித்தார். 1258ஆம் ஆண்டு குலாகு தன்னை ஈல்கானாக அறிவித்துக் கொண்டார். இதற்குப் பிறகு காசா வரை முன்னேறினார். சீக்கிரமே 1260ஆம் ஆண்டு அய்யூப்பிய சிரியா மற்றும் அலெப்போவைக் கைப்பற்றினார். மோங்கேயின் இறப்பானது அடுத்த கானைத் தேர்ந்தெடுக்க மங்கோலியாவில் நடக்கும் குறுல்த்தாய்க்குச் செல்ல வேண்டிய கட்டாய நிலைக்குக் குலாகுவைத் தள்ளியது. பாலஸ்தீனத்தில் சுமார் 10,000 பேரைக் கொண்ட சிறிய படையை குலாகு விட்டுச் சென்றார். இந்தச் சிறிய படையை எகிப்திய அடிமை வம்சத்தினர் ஐன் ஜலுட் யுத்தத்தில் தோற்கடித்தனர்.[20]

குலாகுவிடம் சேவை செய்த மூன்று சூச்சி குடும்ப இளவரசர்கள் மர்மமான முறையில் இறந்தனர். இதன் காரணமாக 1262ஆம் ஆண்டு குலாகுவுக்கு எதிராக தங்க நாடோடிக் கூட்டத்தின் கானாகிய பெர்கே போரை அறிவித்தார். எகிப்திய அடிமை வம்ச வரலாற்றாளர்களின் கூற்றுப்படி, பெர்கேயின் துருப்புக்களைக் குலாகு படுகொலை செய்திருக்கலாம். தனக்கு போரில் கிடைத்த பொருட்களை பெர்கேயுடன் பகிர்ந்து கொள்ள மறுத்திருக்கலாம். எகிப்திய அடிமை வம்சத்துடன் பெர்கே கூட்டணி வைத்தார். எகிப்திய அடிமை வம்சச் சுல்தான் பய்பர்சுடன் இணைந்து குலாகுவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த கோரிக்கை வைத்தார். ஈல்கானரசு மீது தாக்குதல் நடத்த தங்க நாடோடிக் கூட்டமானது இளவயது இளவரசனான நோகையை அனுப்பியது. ஆனால் அந்தத் தாக்குதலை 1262ஆம் ஆண்டு குலாகு முறியடித்தார். ஈல்கானரசு இராணுவமானது தெரெக் ஆற்றைக் கடந்து ஆட்களற்ற ஒரு வெற்று சூச்சி குடும்ப முகாமைக் கைப்பற்றியது. ஆனால் நோகையின் படைகளால் பதுங்கியிருந்து திடீர்த் தாக்குதல் நடத்தித் தோற்கடிக்கப்பட்டது. உறைந்திருந்த தெரெக் ஆற்றின் மீதிருந்த பனிக்கட்டிகள் உடைந்ததால் ஈல்கானரசு இராணுவத்தினர் பலர் நீரில் மூழ்கினர்.[21][22]

1262ஆம் ஆண்டு பெரிய குராசான் மற்றும் மாசாந்தரானை அபகாவுக்கும், வடக்கு அசர்பைஜானை எசுமுத்திற்கும் குலாகு கொடுத்தார். தெற்கு அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவில் ஒரு நாடோடியாக வாழ்ந்து தனது காலத்தைக் குலாகு கழித்தார். இவரது ஆரம்பகால ஆட்சியின்போது, செல்யூக் வழித்தோன்றல்கள், அனத்தோலியா மற்றும் மர்டினிலிருந்த அர்துகிடுகள் தவிர அனைத்து தரப்பு குடிமக்களும் ஈல்கானரசில் மொத்தமாகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1262ஆம் ஆண்டிற்குப் பிறகு சம்சல்தீன் சுவய்னி உயரதிகாரியாக நியமிக்கப்பட்ட பிறகே, பிரச்சினைகள் அமைதியாகின. நீடித்த நிர்வாகமானது செயல்படுத்தப்பட்டது.[23]

பல நாட்கள் விருந்து மற்றும் வேட்டைக்குப் பிறகு 1265ஆம் ஆண்டு குலாகுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி குலாகு இறந்தார். குலாகுவுக்குப் பிறகு அவரது மகன் அபகா கோடை காலத்தில் ஆட்சிக்கு வந்தார்.[23]

நடுக் காலம் (1265–1291)

அபகா கான் ஆட்சிக்கு வந்தவுடனேயே அவர் தங்க நாடோடிக் கூட்டத்தின் கானாகிய பெர்கேயின் படையெடுப்பை எதிர் கொண்டார். திபிலீசியில் பெர்கே இறந்த நிகழ்வுடன் இப்போர் முடிவுக்கு வந்தது. 1270ஆம் ஆண்டு சகதாயி கானரசின் கானாகிய கியாசுதீன் பரக் தொடுத்த படையெடுப்பை அபகா முறியடித்தார். இதற்குப் பதிலடியாக அபகாவின் தம்பி தேகுதர் புகாரா நகரத்தைச் சூறையாடினர். 1277ஆம் ஆண்டு எகிப்திய அடிமை வம்சத்தினர் அனத்தோலியா மீது படையெடுத்தனர். எல்பிசுதான் யுத்தத்தில் மங்கோலியர்களைத் தோற்கடித்தனர். இந்தத் தோல்வியால் கடும் வலியை உணர்ந்த அபகா, உள்ளூர் பிரதிநிதியான முயினதீன் பெர்வானை மரண தண்டனைக்கு உட்படுத்தினார். அவருக்குப் பதிலாக மங்கோலிய இளவரசன் கோங்கோர்த்தையை பதவியில் அமர்த்தினார். 1281ஆம் ஆண்டு எகிப்திய அடிமை வம்சத்தவர்களுக்கு எதிராக மோங்கே தெமூரை அபகா அனுப்பினார். ஆனால் அவரும் கோம்சு யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டார்.[24]

1282ஆம் ஆண்டு அபகாவின் இறப்பிற்குப் பிறகு யார் கானாக வருவது என்ற போட்டி அவரது மகன் அர்குன் மற்றும் அவரது தம்பி தேகுதர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டது. அர்குனுக்குக் கரவுனாக்களும், தேகுதருக்கு செங்கிஸ் கான் வழிவந்த உயர்குடியினரும் ஆதரவளித்தனர். செங்கிஸ் கான் வழிவந்த உயர் குடியினரின் ஆதரவைக் கொண்டு தேகுதர் அடுத்த கானாகப் பதவியில் அமர்ந்தார். ஈல்கானரசின் முதல் முஸ்லிம் ஆட்சியாளர் தேகுதர் தான். ஆனால் அவர் மற்றவர்களை மத மாற்றம் செய்யவோ அல்லது தன் நாட்டில் மத மாற்றத்தை ஊக்குவிக்குவோ இல்லை. எனினும் மங்கோலிய அரசியல் பாரம்பரியங்களுக்குப் பதிலாக இஸ்லாமியப் பழக்கவழக்கங்களை புகுத்த அவர் முயற்சித்தார். இதன் காரணமாக இராணுவத்திடமிருந்து கிடைத்த ஆதரவை அவர் இழந்தார். தேகுதரின் மதத்தை அவருக்கு எதிராகப் பயன்படுத்தி முஸ்லிம் அல்லாதவர்களின் ஆதரவை அர்குன் பெற்றார். இதை அறிந்த தேகுதர், அர்குனின் ஆதரவாளர்கள் பலரை மரணதண்டனைக்கு உட்படுத்தினார். அர்குனைக் கைது செய்தார். தேகுதரின் வளர்ப்பு மகனான புவக் அர்குனை விடுதலை செய்தார். தேகுதரைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்தார். 1286ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அர்குன் தான் ஈல்கான் எனக் குப்லாய் கான் உறுதிப்படுத்தினார்.[24]

அர்குனின் ஆட்சியின்போது, அவர் இஸ்லாமிய செல்வாக்கிற்கு எதிராக, எகிப்திய அடிமை வம்சத்தினர் மற்றும் குராசானில் இருந்த முஸ்லிம் மங்கோலிய அமீரான நவ்ருசு ஆகிய இருவருக்கு எதிராகவும் சண்டையிட்டார். தன் படையெடுப்புகளுக்கு பண உதவி செய்ய தன்னுடைய உயரதிகாரிகள் புகா மற்றும் சத்வுத்தவ்லா ஆகிய இருவரையும் செலவீனங்களை மையப்படுத்த அர்குன் அனுமதித்தார். ஆனால் இச்செயலானது மிகுந்த பிரபலமற்றதாக இருந்தது. இதன் காரணமாக அர்குனின் முன்னாள் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராகத் திரும்பினர். இரண்டு உயரதிகாரிகளும் கொல்லப்பட்டனர். 1291ஆம் ஆண்டு அர்குன் கொலை செய்யப்பட்டார்.[24]

மதமாற்றம் (1291–1316)

Thumb
குர்ஆனைப் படித்துக் கொண்டிருக்கும் மங்கோலிய ஆட்சியாளர் கசன்.

அர்குனின் தம்பி கய்கடுவின் ஆட்சியின் போது ஈல்கானரசானது வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. பெரும்பாலான மங்கோலியர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். அதேநேரத்தில் மங்கோலிய அவையிலிருந்தவர்கள் தொடர்ந்து பௌத்த மதத்தையே பின்பற்றினர். கய்கடு தன்னுடைய ஆதரவாளர்களிடம் இருந்து ஆதரவை வாங்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக அரசின் நிதிநிலைமை பாழாகியது. இவரது உயர் அதிகாரியான சத்துருத்தீன் சஞ்சானி அரசின் நிதி நிலைமையைச் சீராக்க காகிதப் பணத்தை யுவான் அரசமரபிலிருந்து பின்பற்றினார். இச்செயல் மோசமான விளைவுகளையே கொடுத்தது. கய்கடு ஒரு சிறுவனுடன் தகாத உறவில் இருந்ததாக அவர் மீது ஆதாரமற்ற பழி சுமத்தப்பட்டது. இதன் காரணமாக மங்கோலியப் பெரியவர்கள் அவரிடமிருந்து விலகினர். 1295ஆம் ஆண்டு கய்கடு ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். அவருக்குப் பிறகு அவரது உறவினர் பய்டு ஆட்சிக்கு வந்தார். ஒரு ஆண்டுக்கும் குறைவான காலத்திற்கே பய்டு ஆட்சி புரிந்தார். பய்டுவை கய்கடுவின் மகனான கசன் ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தார்.[24]

குலாகுவின் வழித்தோன்றல்கள் அடுத்த 80 ஆண்டுகளுக்குப் பாரசீகத்தை ஆண்டனர். ஷாமன் மதம், பௌத்தம் மற்றும் கிறித்தவம் உள்ளிட்ட அனைத்து மதங்களிடமும் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டனர். இறுதியாக 1295ஆம் ஆண்டு அரசின் அதிகாரப்பூர்வ மதமாக இஸ்லாம் மதத்தை கடைபிடிக்க ஆரம்பித்தனர். எனினும் இந்த மதமாற்றம் நடைபெற்றிருந்த போதிலும், ஈல்கான்கள் எகிப்திய அடிமை வம்சத்தவர்களுக்கு எதிராகவே இருந்தனர். மங்கோலியப் படையெடுப்பாளர்கள் மற்றும் சிலுவைப்போர் வீரர்கள் ஆகிய இருவரையுமே எகிப்திய அடிமை வம்சத்தவர்கள் தோற்கடித்து இருந்தனர். ஈல்கான்கள் சிரியா மீது பலமுறை படையெடுத்தனர். ஆனால் எகிப்திய அடிமை வம்சத்தவர்களுக்கு எதிராக நிலப் பகுதிகளை கைப்பற்றவோ அல்லது கைப்பற்றி தொடர்ந்து வைத்திருக்கவோ அவர்களால் முடியவில்லை. இறுதியாக மங்கோலியர்கள் சிரியாவை வெல்லும் தங்களது எண்ணத்தை கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். கப்பம் கட்டிக் கொண்டிருந்த ரும் சுல்தானகம் மற்றும் சிலிசியாவின் ஆர்மீனிய இராச்சியம் ஆகியவற்றிற்கு மேலிருந்த மங்கோலியர்களின் செல்வாக்கும் சரிந்து போனது. இதற்கு முக்கியக் காரணம் மங்கோலியப் பேரரசில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் ஆகும். ஈல்கானரசுக்கு வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் இருந்த கானரசுகள் ஈல்கானரசுக்கு எதிராகச் சண்டையிட்டன. மொகுலிசுதானில் இருந்த சகதாயி கானரசு திரான்சாக்சியானாவிலும், தங்க நாடோடிக் கூட்டம் காக்கேசியாவிலும் ஈல்கானரசுக்கு அச்சுறுத்தலாக விளங்கின. இதன் காரணமாக மேற்குநோக்கி ஈல்கானரசால் விரிவடைய முடியவில்லை. குலாகுவின் ஆட்சியின்போதே உருசியப் புல்வெளிகளில் இருந்த மங்கோலியர்களுடன் காக்கேசியாவில் ஈல்கானரசானது வெளிப்படையாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தது. மற்றொருபுறம் சீனாவிலிருந்த யுவான் அரசமரபானது ஈல்கானரசுக்குக் கூட்டாளியாக விளங்கியது. பல தசாப்தங்களுக்கு பெயரளவுக்கு ஈல்கானரசின் பெரிய கான் என்ற பட்டத்தை தக்க வைத்திருந்தது.[25]

நவ்ரூஸின் அறிவுரையின் பேரில், கசன் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறினார். நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக இஸ்லாமைக் கொண்டுவந்தார். கிறித்தவ மற்றும் யூத குடிமக்கள் தங்களது சமநிலையை இழந்தனர். ஜிஸ்யா பாதுகாப்பு வரியைச் செலுத்த வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர். பௌத்த மதத்தினர் மதம் மாற வேண்டும் அல்லது நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்ற கடுமையான வழியைக் கசன் அளித்தார். பௌத்த மடாலயங்கள் அழிக்கப்பட ஆணையிட்டார். எனினும் பிற்காலத்தில் தனது கடுமையைக் குறைத்துக் கொண்டார்.[26] 1297ஆம் ஆண்டு நவ்ரூஸ் பதவியில் இருந்து இறக்கப்பட்டு கொல்லப்பட்ட பிறகு மத வெறுப்பைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கசன் அறிவித்தார். முஸ்லிம் அல்லாதவர்களுடன் தனது தொடர்பை மீண்டும் உருவாக்க முயற்சித்தார்.[27][28]

ஈல்கானரசானது இஸ்லாம் மதத்திற்கு மாறினாலும், அயல் நாட்டு உறவுகளைப் பொறுத்தவரையில், மற்ற முஸ்லிம் நாடுகளின் மீதான ஈல்கானரசின் எதிர்ப்பின் மீது சிறிதளவோ அல்லது முழுவதுமாகவோ மாற்றத்தை ஏற்படுத்தாமல் தொடர்ந்தது. சிரியாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக எகிப்திய அடிமை வம்சத்தவர்களுடன் சண்டையைத் தொடர்ந்து. வாடி அல்-கசனதர் யுத்தத்தில் அடிமை வம்சத்தவர்களுக்கு எதிராக மங்கோலியர்கள் பெற்ற ஒரே பெரிய வெற்றியின் காரணமாகச் சிரியா மீதான கட்டுப்பாட்டை அடிமை வம்சத்தவர்கள் சில மாதங்களுக்கு இழந்தனர். பெரும்பாலும், கசனின் கொள்கைகள் அவரது தம்பி ஒல்ஜைடுவின் ஆட்சியின் கீழ் தொடர்ந்தன. சியா இறையியலாளர்கள் அல்-இல்லி மற்றும் மைதம் அல் பகுரானி ஆகியவர்களின் செல்வாக்கின் கீழ் ஒல்ஜைடு வந்தபோது, அவர் இஸ்லாமின் ஒரு பிரிவான சியா இஸ்லாமுக்கு ஆதரவளிக்கலாம் என்ற கருத்துக்கள் ஏற்பட்டபோதும், இவ்வாறாகக் கசனின் கொள்கைகள் தொடர்ந்தன.[29]

குழந்தையாக இருந்த பொழுது, கிறித்தவ மதத்தின் திருமுழுக்கு பெற்ற ஒல்ஜைடு, பௌத்த மதத்துடன் பிணக்குகளைக் கொண்டிருந்தார். அவர் பிறகு அனாபி சன்னி இஸ்லாமைப் பின்பற்றியவராக மாறினார். இருந்தும் ஷாமன் மதத்தின் எஞ்சிய சில பழக்க வழக்கங்களையும் கொண்டிருந்தார். 1309-10ஆம் ஆண்டு அவர் ஷியா முஸ்லிமாக மாறினார்.[30] 1304ஆம் ஆண்டின் ஒரு ஆர்மீனிய எழுத்தரின் குறிப்பின்படி, "அன்பும், ஆதரவும் உடைய மற்றும் எளிமையான" கசனின் இறப்பிற்குப் பிறகு, அவரது தம்பி கர்பண்டா ஒல்ஜைடு ஆட்சிக்கு வந்தார். "அவரும் கூட ஒவ்வொருவர் மீதும் நல்ல எண்ணம் கொண்டிருந்தார்". 1306ஆம் ஆண்டின், ஒரு நூலின் அறிமுகப்ப பகுதியிலுள்ள தகவல்களின்படி, மங்கோலியர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். "மற்றவர்களையும் மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தினர். மதம் மாறாதவர்கள் துன்புறுத்தப்பட்டனர்".[31] கசனின் தாக்குதலில் தப்பிய சில பௌத்த மதத்தினர் ஒல்ஜைடுவை மீண்டும் தருமத்திற்குக் கொண்டு வர முயற்சித்துத் தோல்வியடைந்தனர். ஈல்கானரசில் அவர்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பாட்டில் இருந்தனர் என இது நமக்குக் காட்டுகிறது.[32]

மங்கோலியர்கள் மதம் மாறிய நிகழ்வானது ஒரு மேலோட்டமான நிகழ்வாகவே இருந்தது. இஸ்லாம் மங்கோலியர்கள் மத்தியில் நிறுவப்பட்ட நிகழ்வு உடனே நடந்து விடவில்லை. ஒல்ஜைடுவின் வரலாற்றாளர் கசானியின் பதிவுகளின் படி, அனாபிக்கள் மற்றும் சாபிக்களுக்கு இடையேயான ஒரு பிரச்சனையின் மீது பொறுமை இழந்த குத்லுக் ஷா, மங்கோலியர்கள் இஸ்லாமைக் கைவிட்டுவிட்டுச் செங்கிஸ் கானின் வழிகளுக்குத் திரும்ப வேண்டும் எனத் தன் கருத்தைத் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கசானி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஒல்ஜைடு உண்மையிலேயே ஒரு குறுகிய காலத்திற்கு இஸ்லாமிலிருந்து மதம் மாறி இருந்தார். முஸ்லிம்களாக மங்கோலியர்கள் சூபித்துவத்திற்குத் தனி ஆதரவு அளித்தனர். சூபித் துறவிகளான சபியதீன் அர்தபிலி போன்றோர் அடிக்கடி மரியாதையுடனும் ஆதரவுடனும் நடத்தப்பட்டனர்.[33]

சிதைவு (1316–1357)

Thumb
அபு சயித்தின் இறப்பிற்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 1345ல் மத்திய கிழக்கு. சலயிர் சுல்தானகம், சோபனிடுகள், முசாபரிடுகள், இஞ்சுயிடுகள், சர்பதர்கள், மற்றும் கர்டிடுகள் ஆகியோர் ஈரானில் முதன்மை சக்திகளாக ஈல்கானரசின் இடத்தை எடுத்துக் கொண்டனர்.

ஒல்ஜைடுவின் மகன் அபு சயித் பகதூர் கான் கடைசி ஈல்கானாக 1316ஆம் ஆண்டு அரியணையேறினார். 1318ஆம் ஆண்டு சகதாயிகள் மற்றும் குராசானிலிருந்த கரவுனாக்கள் ஆகியோர் கலகத்திலும், மற்றும் தங்க நாடோடிக் கூட்டமானது படையெடுப்பிலும் ஈடுபட்டு இவரை எதிர்த்தன. அனத்தோலியாவில் இருந்த இரேன்சின் என்ற அமீரும் கலகத்தில் ஈடுபட்டார். 13 சூலை 1319ஆம் ஆண்டு சஞ்சன் ரூத் யுத்தத்தில் தாய்சியுடுகளின் சுபனால் இரேன்சின் நொறுக்கப்பட்டார். சுபனின் செல்வாக்கின் கீழ் ஈல்கானரசானது சகதாயிகளுடன் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டது. சகதாயி கிளர்ச்சி மற்றும் எகிப்திய அடிமை வம்சத்தவர்களை நொறுக்குவதற்குச் சுபன் உதவி செய்தார். 1327ஆம் சுபனுக்குப் பதிலாகப் "பெரிய" அசனை அபு சயித் பதவியில் அமர்த்தினார்.[34] கானை அரசியல் கொலை செய்ய முயற்சித்ததாக அசன் மீது குற்றம் சாட்டப்பட்டது. 1332ஆம் ஆண்டு அசன் அனத்தோலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மங்கோலியரல்லாத அமீர்களான சரபுதீன் மகமுத் ஷா மற்றும் கியாசுதீன் முகமது ஆகியோர் அதற்கு முன் யாரும் பெற்றிராத அளவுக்கு இராணுவ அதிகாரங்களைப் பெற்றனர். இது மங்கோலிய அமீர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது. 1330களில் கறுப்புச் சாவின் தொடக்கமானது ஈல்கானரசைப் பாழ்படுத்தியது. அபு சயித் மற்றும் அவரது மகன்கள் 1335ஆம் ஆண்டு பிளேக்கால் இறந்தனர்.[35] அரிக் போகேயின் வழித்தோன்றலான அர்பா கேவுன் என்பவரைக் கியாசுதீன் அரியணையில் அமர்த்தினார். தொடர்ச்சியாகக் குறுகிய காலமே பதவியில் இருந்த கான்களின் ஆட்சியானது தொடர்ந்தது. இறுதியாக 1338ஆம் ஆண்டு அசர்பைஜானைச் "சிறிய" அசன் கைப்பற்றும் வரை இது தொடர்ந்தது. 1357ஆம் ஆண்டு தங்க நாடோடிக் கூட்டத்தின் ஜானி பெக், சுபனிடுகள் வைத்திருந்த தப்ரீசை ஒரு ஆண்டுக்கு வென்றார். இவ்வாறாக ஈல்கானரசின் எஞ்சிய பகுதிகள் ஜானி பெக்கால் முடித்து வைக்கப்பட்டன.[36]

Remove ads

பிராங்கோ-மங்கோலிய உடன்பாடு

Thumb
ஒல்ஜைடுவின் மடல்.
Thumb
அர்குன் பிரான்சு மன்னருக்கு அனுப்பிய மடல்.

மேற்கு ஐரோப்பாவிலிருந்த அரசவைகள் மங்கோலியர்களுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்தப் பல முயற்சிகளை மேற்கொண்டன. அவர்கள் முதன்மையாக ஈல்கானரசுடன் கூட்டணியை ஏற்படுத்த ஏழாவது சிலுவைப்போர் காலத்தில் தொடங்கி 13 மற்றும் 14ஆம் நூற்றாண்டுகளில் முயற்சித்தனர். முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது எதிர்ப்பில் அவர்கள் ஒன்றிணைந்த்திருந்தனர். முதன்மையாக எகிப்திய அடிமை வம்சத்தவர்களுக்கு எதிராக அவர்கள் ஒன்றிணைந்த்திருந்தனர். எனினும் ஈல்கானரசு மற்றும் ஐரோப்பியர்களால் தங்களது பொதுவான எதிரிக்கு எதிராக தங்களது படைகளை ஒன்றிணைக்க முடியவில்லை.[37]

அரசாங்கம்

உயர் அதிகாரம் கொண்ட அலுவலகங்களின் கட்டுப்பாட்டை உள்ளூர் மக்களிடம் அளிப்பதைத் தவிர்த்த சீனாவை அடிப்படையாகக் கொண்ட யுவான் அரசமரபிலிருந்து மாறுபட்டு, ஈல்கானரசானது தமது நாட்டை நடு ஆசியப் பாரசீக ("தஜிக்") நிர்வாகத்தினரை, துருக்கிய-மங்கோலிய இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து ஆட்சி செய்ய வைத்தது. அனைத்து பாரசீக நிர்வாகிகளும் முஸ்லிம்களாகவோ, அல்லது செல்யூக்கள் மற்றும் குவாரசமியர்களுக்குப் பணியாற்றிய பாரம்பரியக் குடும்பங்களிலிருந்து வந்த உறுப்பினர்களாகவோ (எ. கா. ஜுவய்னி குடும்பம்) இல்லை. உதாரணமாக 1288 முதல் 1291 வரை ஈல்கானரசின் உயரதிகாரியாக இருந்த சாதல்-தவ்லா ஒரு யூதராவார். அதே நேரத்தில் புகழ்பெற்ற உயர் அதிகாரி மற்றும் வரலாற்றாளரான ரசீத்தல்தீன் அமாதனி யூத மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியவராவார்.[38]

ஈல்கானரசு மங்கோலியர்கள் தமது வாழ்க்கை முறையில் நாடோடிகளாகவே அரசமரபு முடிவுக்கு வரும் வரையில் இருந்தனர். அவர்களது நாடோடி வழிகள் நடு ஈராக்கு, வடமேற்கு ஈரான், அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவை உள்ளடக்கியதாக இருந்தது. மங்கோலியர்கள் ஈராக்கு, காக்கேசியா, மற்றும் மேற்கு மற்றும் தெற்கு ஈரானை நேரடியாக ஆட்சி செய்தனர். சியார்சியா, மர்தினின் அர்துகிடு சுல்தான், மற்றும் கூபா மற்றும் உலுரித்தான் மாகாணம் ஆகியவை இதில் விதிவிலக்குகள் ஆகும். கரவுனா மங்கோலியர்கள் குராசானைத் தன்னாட்சிப் பகுதியாக ஆட்சி செய்தனர். அவர்கள் வரி செலுத்தவில்லை. ஹெறாத் நகரத்தின் உள்ளூர் ஆட்சியாளர்களான கர்டு அரசமரபும் தன்னாட்சியாக தொடர்ந்தது. ஈல்கானரசின் செல்வச்செழிப்பு மிகுந்த மாகாணமாக அனத்தோலியா திகழ்ந்தது. அரசின் வருவாயில் கால் பங்கு அனத்தோலியாவில் இருந்து கிடைத்தது. அதே நேரத்தில் ஈராக்கு மற்றும் தியர்பக்கீர் ஆகிய பகுதிகள் இணைந்து மொத்தம் 35% வருவாயைக் கொடுத்தன.[39]

1330ஆம் ஆண்டில் அப்காசியா இணைத்துக்கொள்ளப்பட்ட நிகழ்வானது சியார்சியா ராச்சியத்தின் மறு ஒன்றிணைப்புக்கு இட்டுச் சென்றது. எனினும் போர்கள் மற்றும் பஞ்சங்கள் காரணமாக 1336 மற்றும் 1350ஆம் ஆண்டுக்கு இடையில் சியார்சியாவிலிருந்து ஈல்கான்கள் பெற்ற காணிக்கையானது முக்கால் பங்கு குறைந்து போனது.[40]

Remove ads

மரபு

Thumb
குலாகுவின் புரவில் கட்டப்பட்ட மரகா வானிலை ஆய்வுக் கூடம். அந்நேரத்தில் ஐரோவாசியாவிலேயே மிகவும் முன்னேறிய அறிவியல் நிறுவனமாக இது திகழ்ந்தது.

ஈல்கானரசின் உருவாக்கமானது மத்திய கிழக்குப் பகுதியில் ஒரு முக்கியமான வரலாற்றுத் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒன்றிணைந்த மங்கோலியப் பேரரசின் நிறுவலானது ஆசியா முழுவதும் வணிகத்தை மிக எளிதாக்கியது. ஈல்கானரசு மற்றும் சீனாவில் தலைமையகத்தைக் கொண்டிருந்த யுவான் அரசமரபு ஆகிய அரசுகளுக்கு இடையேயான தொலைத் தொடர்பானது இந்த வளர்ச்சியை ஊக்குவித்தது.[41][42] ஏகாதிபத்திய சீனாவின் டிராகன் ஆடை வடிவமைப்புகள் ஈல்கான்களால் பயன்படுத்தப்பட்டன. மங்கோலியர்கள் மீது சீன அரசியலமைப்பின் அதிகப்படியான தாக்கம் காரணமாக ஈல் கான்கள் சீன குவாங்டி (பேரரசன்) பட்டத்தைப் பயன்படுத்தினர். ஈல்கான்கள் யுவான் அரசமரபிலிருந்து சீன அரசாங்க அமைப்பு குறித்த தகவல்களைக் கொண்ட முத்திரைகளைப் பெற்றான்ர். இது தவிர ஈல்கான்கள் தாமே சீன எழுத்துக்களைக்கொண்ட முத்திரைகளை உருவாக்கினர்.[43]

பிற்கால சபாவித்து அரசமரபு நாட்டிற்கு ஈல்கானரசு வழியமைத்து உதவியது. இவ்வாறாகத் தற்போதைய நாடான ஈரானின் உருவாக்கத்திற்கும் இது வழிவகுத்தது. குலாகுவின் வெற்றிகள் கிழக்கிலிருந்த சீனச் செல்வாக்கிற்கு ஈரானைத் திறந்துவிட்டன. இது மற்றும் இவரது வழித்தோன்றல்களின் புரவு ஆகியவை ஈரானின் தனித்துவமான கட்டடக் கலை நிபுணத்தை வளர்ச்சியடைய வைத்தன. ஈல்கான்களின் ஆட்சியின் கீழ் ஈரானிய வரலாற்றாளர்கள் அரபி மொழியில் எழுதுவதிலிருந்து தங்களது பூர்வீகமான பாரசீக மொழியில் எழுத ஆரம்பித்தனர்.[44]

Thumb
ஒல்ஜைடுவின் சமாதி, சுல்தானியா, உலகப் பாரம்பரியக் களம்.

ஈல்கானரசில் இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறையின் முதல் பயன்பாடுகள் காணப்பட்டன. பிறகு இதே போன்ற முறை உதுமானியப் பேரரசால் பயன்படுத்தப்பட்டது. இந்த முறைகள் ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்ட கணக்கு முறைகளிலிருந்து சுதந்திரமாக உருவாக்கப்பட்டிருந்தன.[45] 1295 முதல் 1304ஆம் ஆண்டு வரை கசன் கான் ஏற்படுத்திய விவசாய மற்றும் நிதி சீரமைப்புகள் உருவாக்கத்தால் ஏற்பட்ட சமூகப் பொருளாதாரத் தேவைகளின் காரணமாக இந்தக் கணக்கு வைப்பு முறையானது முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது.

19/20ஆம் நூற்றாண்டு ஈரானில் பழங்குடியினப் பட்டமாக ஈல்கான்

ஈல்கான் பட்டமானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தெற்கு ஈரானின் கசுகை நாடோடிகளின் மத்தியில் மீண்டும் தோன்றியது. 1818/19 முதல் ஜான் முகமது கான் இப்பட்டத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தார். இப்பட்டமானது தொடர்ந்து வந்த அனைத்து கசுகை தலைவர்களாலும் பயன்படுத்தப்பட்டது. கடைசி ஈல்கான் நசீர் கான் ஆவார். மொசதேக்கிற்கு ஆதரவு அளித்ததற்காக 1954ஆம் ஆண்டு இவர் நாடு கடத்தப்பட்டார். 1979ல் இஸ்லாமியப் புரட்சியின் போது இவர் திரும்பி வந்தபோது தன்னுடைய முந்தைய பதவியை இவரால் திரும்பப் பெற முடியவில்லை. 1984ஆம் ஆண்டு கசுகையின் கடைசி ஈல்கானாக இவர் இறந்தார்.[46]

Remove ads

ஈல்கான்கள்

குலாகு குடும்பம் (1256–1335; ஈல்கானரசு மங்கோலிய மன்னர்கள்)

ஈல்கானரசுக்குப் பிறகு, அதன் சிதைவின் போது நிறுவப்பட்ட பிராந்திய அரசுகள் தங்களது சொந்த தேர்வர்களை அரச பதவிக்கு உரிமை கோர வைத்தன.

அரிக் போகேயின் குடும்பம்

குலாகு குடும்பம் (1336–1357)

  • மூசா (1336–1337) (பகுதாதுவின் அலி பாட்ஷாவின் கைப்பாவை)
  • முகம்மது (1336–1338) (சலயிர்களின் கைப்பாவை)
  • சதி பெக் (1338–1339) (சோபனிடுகளின் கைப்பாவை)
  • சுலைமான் (1339–1343) (சோபனிடுகளின் கைப்பாவை, 1341–1343ல் சர்பதர்களால் அங்கீகரிக்கப்பட்டார்)
  • ஜஹான் தெமூர் (1339–1340) (சலயிர்களின் கைப்பாவை)
  • அனுஷிர்வான் (1343–1356) (சோபனிடுகளின் கைப்பாவை)
  • இரண்டாம் கசன் (1356–1357) (நாணயங்கள் மூலம் மட்டும் அறியப்படுகிறார்)

கசர் குடும்பம்

கிழக்குப் பாரசீகத்திலிருந்த (குராசான்) உரிமை கோரியவர்கள்:

  • தோகா தெமூர் (அண். 1338–1353) (1338–1349ல் கர்டிடுகளால் அங்கீகரிக்கப்பட்டார்; 1338–1339, 1340–1344ல் சலயிர்களால் அங்கீகரிக்கப்பட்டார்; 1338–1341, 1344, 1353ல் சர்பதர்களால் அங்கீகரிக்கப்பட்டார்)
  • லுக்மன் (1353–1388) (தோகா தெமூரின் மகன் மற்றும் தைமூரின் அடைக்கலவாசி)
Remove ads

குடும்பத்தவர்

மேலும் காண்க

உசாத்துணை

நூல்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads