எகிப்து

வட ஆப்ரிக்க நாடு From Wikipedia, the free encyclopedia

எகிப்து
Remove ads

எகிப்து வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு. கெய்ரோ இந்நாட்டின் தலைநகர் ஆகும். இது உலகின் 15வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும். மேற்கே லிபியாவையும், தெற்கே சூடானையும், கிழக்கே காசாக் கரை மற்றும் இஸ்ரேலையும் எல்லையாகக் கொண்ட எகிப்தின் பரப்பளவு சுமார் 1,001,450 சதுர கி.மீ. வடக்குக் கரையில் மத்தியதரைக் கடலும் கிழக்குக் கரையில் செங்கடலும் எகிப்தின் எல்லைகளாக உள்ளன. எகிப்தின் சினாய் தீபகற்பம் தென்மேற்கு ஆசியாவில் உள்ளதால், இந்நாடு இருகண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. எகிப்தின் ஜீவ நதியாக நைல் நதி பாய்கிறது. நைல் நதிக் கரையிலிருக்கும் விவசாய நிலங்களைத் தவிர பெரும்பாலான நிலங்கள் பாலைவனங்களாகவே உள்ளன. ஆப்பிரிக்காவிலும் மையக் கிழக்கிலும் உள்ள நாடுகளுள் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளுள் எகிப்தும் ஒன்று. 82.2 மில்லியன்[2] மக்களைக் கொண்ட இந்நாட்டின் பெரும்பாலானவர்கள், நைல் நதிக்கரையில் இருக்கும் 40,000 சதுர கிலோமீட்டர் (15,000 சதுர மைல்) பரப்பளவு கொண்ட நிலப்பகுதியிலேயே வாழ்கின்றனர். இப்பகுதிகளிலேயே வேளாண்மை செய்யக்கூடிய நிலங்கள் காணப்படுவதுடன் கெய்ரோ, அலெக்சாந்திரியா, அல்-உக்சுர் போன்ற பெரிய நகரங்களும் அடங்குகின்றன. மிகப் பெரிய சகாராப் பாலைவனப் பகுதிகளில் குறைவான மக்களே வாழ்கின்றனர். எகிப்தில் வாழ்பவர்களுள் ஏறத்தாழ அரைப் பங்கினர் நகர்ப்புறப் பகுதிகளிலேயே வாழ்கின்றனர்.

விரைவான உண்மைகள் எகிப்து அரபுக் குடியரசு جمهورية مصر العربية ஜும்ஹூரியாத் மிசர் அல்-ஆரபியா, தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...

இந்நாட்டுக்கு விடுதலை 1922இல் வழங்கப்பட்டு, 1953இல் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. பண்டைக் காலத்தில் சிறப்புற்று விளங்கிய எகிப்தின் பழங்காலத்து மன்னர்களால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பிரமிடுகள் உலகப்புகழ் பெற்றவை. எகிப்தில் உள்ள நினைவுச் சின்னங்களான கிசா பிரமிடு வளாகம், பெரிய ஸ்பிங்க்ஸ் என்பன பண்டை எகிப்து நாகரிகக் காலத்தைச் சேர்ந்தவை. மெம்பிசு, தீபை, கர்னாக் போன்ற இடங்களில் உள்ள பண்டைய அழிபாடுகளும், லூக்சூருக்கு வெளியே உள்ள மன்னர்களின் சமவெளிப் பகுதிகளும் பெருமளவில் தொல்லியல் ஆய்வாளர்களின் கவனத்தைக் கவர்பவை.

மையக்கிழக்கில் எகிப்தின் பொருளாதாரமே மிகக் கூடிய பல்வகைத்தன்மை கொண்டது. இந்நாட்டில் சுற்றுலாத்துறை, வேளாண்மை, தொழிற்றுறை, சேவைத்துறை என்பன ஏறத்தாழ ஒரேயளவு உற்பத்தி அளவைக் கொண்டவை.

Remove ads

வரலாறு

வரலாற்றுக்கு முந்திய காலம் (கிமு 6,000 முதல் கிமு 3150)

நைல் ஆற்றங்கரைப் பகுதிகளிலும், பாலைவனச் சோலைகளிலும் வரலாற்றுக்கு முந்திய காலப் பாறைச் செதுக்கற் சான்றுகள் உள்ளன. கிமு 10 ஆவது ஆயிரவாண்டில் வேடுவர்-உணவுசேகரிப்போர், மீன்பிடிப்போர் பண்பாடுகள் உருவாயின. காலநிலை மாற்றத்தால் அல்லது அளவு மீறிய மேய்ச்சல் நிலப் பயன்பாட்டினால், அல்லது இரண்டினாலும், கிமு 8000 ஆண்டளவில் மேய்ச்சல் நிலங்கள் பாலவனங்களாக மாறத் தொடங்கிச் சகாராப் பாலைவனம் உருவானது. தொடக்ககால இனக்குழுக்கள் நைல் ஆற்றங்கரைகளை அண்டி இடம் பெயர்ந்து, நிலையான வேளாண்மைப் பொருளாதாரத்தையும், மையப்பட்ட சமூகத்தையும் உருவாக்கினர்.[3]

ஏறத்தாழ கிமு 6000 ஆண்டளவில், நைல் ஆற்றங்கரையில் புதிய கற்காலப் பண்பாடு உருவானது.[4] புதியகற்காலத்தில், மேல் எகிப்திலும், கீழ் எகிப்திலும், பல வம்சங்களுக்கு முற்பட்ட பண்பாடுகள் தனித்தனியாக வளர்ச்சியடைந்தன. பாடேரியப் பண்பாடும், நக்காடா பண்பாடும், எகிப்தின் துவக்க கால அரசமரபுகளுக்கு முன்னோடிகள் எனக்கருதப்படுகின்றன. கீழ் எகிப்தின் மிகப் பழைய களமான மெரிம்டா, பாடேரியப் பண்பாட்டுக்கு 700 ஆண்டுகள் முந்தியது. ஒரேகாலக் கீழ் எகிப்தியப் பண்பாடுகளைச் சேர்ந்தோர் தமது தெற்கு எகிப்திய அயலவர்களுடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது. தனித்துவமான பண்பாடுகளைக் கொண்ட இவர்கள் வணிகம் மூலமான தொடர்புகளைக் கொண்டிருந்தனர். மிகவும் பழைய எகிப்தியப் படவெழுத்துக்கள், கிமு 3200 ஆண்டுக் காலப் பகுதியைச் சேர்ந்த, வம்சங்களுக்கு முற்பட்ட மூன்றாம் நக்காடாக் கால மட்பாண்டங்களில் காணப்படுகின்றன.[5]

பண்டைய எகிப்தின் வரலாற்று காலம் (கிமு 3150 முதல்

Thumb
மன்னர் நார்மெர் கற்பலகை
Thumb
கிசா பிரமிடுகள்

முதல் வம்ச மன்னர் நார்மெர் கிமு 3150ல் வடக்கு எகிப்தையும், தெற்கு எகிப்தையும் இணைத்து ஒன்றுபட்ட எகிப்து இராச்சியத்தை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து அடுத்த மூன்று ஆயிரவாண்டுகளுக்கு பல எகிப்திய வம்சங்கள் வரிசையாக பண்டைய எகிப்தை ஆண்டன. எகிப்தியப் பண்பாடு இந்த நீண்ட காலப் பகுதியில் செழித்திருந்ததோடு, பண்டைய எகிப்தின் சமயம், எகிப்தியக் கோவில்கள், எகிப்திய மொழி படவெழுத்துகள், கலைகள் போன்றவை தொடர்பில் தனித்துவமான எகிப்தியப் பண்பாடாகவே இருந்தது. ஒன்றுபட்ட எகிப்தின் துவக்க கால அரச மரபின் எகிப்தின் முதல் வம்சம் மற்றும் இரண்டாம் வம்ச ஆட்சிகள் மற்றும் பழைய எகிப்து இராச்சியம்| (கிமு 2700 - 2200) வரையான காலத்தின் அடிப்படைகளை அமைத்தன. இக்காலத்தில் மூன்றாம் வம்சக் காலத்து மன்னர் ஜோசெர் பிரமிடு மற்றும் நாலாம் வம்ச மன்னர் கிசா பிரமிடுகள் எழுப்பினார்.

Thumb
பழைய இராச்சியக் காலத்தில் கட்டப்பட்ட பெரிய ஸ்பிங்க்ஸ் மற்றும் கிசா பிரமிடு

எகிப்தின் முதல் இடைக்காலம், 15 ஆண்டுகளை உள்ளடக்கிய அரசியல் கிளர்ச்சிகளைக் கொண்ட காலமாகக் காணப்படுகின்றது. நைல் ஆற்றில் கூடிய நீர் வரத்தும், அரசின் உறுதிப்பாடும் நடு இராச்சியப் பகுதியில், நாட்டில் புதிய செழிப்பைத் திரும்பவும் கொண்டுவந்தன. இது, கிமு 2040 ஆம் ஆண்டில் மூன்றாம் அமெனம்ஹத் காலத்தில் உயர் நிலையை எட்டியது. இரண்டாம் இடைநிலைக் காலத்தில் ஒற்றுமையின்மைக் காலம் ஆகும். இக்க்காலத்தில் எகிப்தை வெளியாரான செமிட்டிய ஐக்சோசுக்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. கிமு 1650ல், ஐக்சோசியர்கள் கீழ் எகிப்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றி ஆவரிஸ் என்னும் புதிய தலைநகரையும் நிறுவினர். முதலாம் அக்மோஸ் என்பவன் மேல் எகிப்திலிருந்து படையெடுத்து வந்து பதினெட்டாவது வம்ச ஆட்சியை உருவாக்கினான். இவன் தலைநகரை மெம்பிசில் இருந்து தினீஸ்க்கு இடம் மாற்றினான்.

கிமு 1550 முதல் 1070 வரையிலான புதிய இராச்சியத்த்தின் ஆட்சி பதினெட்டாவது வம்ச ஆட்சியுடன் தொடங்குகிறது. இக்காலத்தில் எகிப்து ஒரு பன்னாட்டு வல்லரசாக வளர்ந்தது. இது தெற்கே நூபியாவில் உள்ள தொம்போசு வரை விரிவடைந்ததுடன், கிழக்கில் லேவந்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கி ஒரு பேரரசானது. இக்காலத்திலேயே மிகப் புகழ் பெற்ற பாரோக்களான, அட்செப்சுத், மூன்றாம் தூத்மோஸ், அக்கெனதென், அவனுடைய மனைவி நெஃபர்டீட்டீ, துட்டன்காமன், இரண்டாம் ராமேசஸ் போன்றோர் எகிப்தை ஆண்டனர். வரலாற்றுச் சான்றுடன் கூடிய முதல் ஓரிறைக் கொள்கை தொடர்பான வெளிப்பாடு இக்காலத்திலேயே காணப்படுகிறது. இது அத்தெனியம் எனப்படுகிறது. பல்வேறு நாடுகளுடனான தொடர்புகள் எகிப்துக்குப் புதிய எண்ணக்கருக்கள் வருவதற்கு உதவின. பிற்காலத்தில் பாரசீகர்கள், லிபியர், நூபியர், அசிரியர் போன்றோர் எகிப்தின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றியுள்ளனர். எனினும், எகிப்தின் தாயக மக்கள் அவர்களைத் துரத்திவிட்டுத் தமது நாட்டை மீளக் கைப்பற்றினர்.

எகிப்திய பாரோக்களின் ஆட்சி முப்பதாவது வம்ச ஆட்சியுடன் முடிவுக்கு வந்தது. கிமு 343ல் எகிப்தை அலெக்சாண்டரின் தளபதி தாலமி சோத்தர் கைப்பற்றி தாலமி வம்சத்தை நிறுவினார். அவரது வழித்தோன்றல்களில் இறுதியானவரான ஏழாம் கிளியோபாட்ரா எகிப்தை கிமு 32 வரை ஆட்சி செய்தனர். பின்னர் எகிப்து உரோமைப் பேரரசின் ஒரு மாகாணமாக ஆயிற்று.

Remove ads

பார்வோன்களின் ஆட்சிக்கு பின்னர் எகிப்திய வரலாறு

Remove ads

நவீன கால எகிப்து

    • எகிப்தில் பிரான்சு காலனி - 1798 - 1801
    • முகமது அலி வம்சம் - 1805 - 1953
    • பிரித்தானிய எகிப்து - 1882 - 1922
    • எகிப்திய சுல்தானகம் - 1914 - 1922
    • எகிப்திய இராச்சியம் - 1922 - 1953
    • எகிப்தியக் குடியரசு - 1953 - தற்போது வரை

2011 எகிப்திய மக்கள் புரட்சி

25 சனவரி 2011 அன்று அதிபர் ஓசுனி முபாரக்கின் ஆட்சியை எதிர்த்து மிகப்பரவலாகக் கலகங்கள் தோன்றின. விரைவில் இது மாபெரும் குடியியல் எதிர்ப்புப் போராட்டமாக மாறி, பெருமளவில் மக்கள் பங்கேற்க ஆரம்பித்தனர். 29 சனவரி அன்று நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை உணர்ந்த முபாரக் அரசு, ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால், மக்கள் இதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடினர். 11 பெப்ருவரி 2011 அன்று கெய்ரோவை விட்டு வெளியேறிய முபாரக், தன் அதிபர் பதவியை விட்டுக் கொடுத்தார்.

01.02.2011 திகதி சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தலைநகர் கோய்ரோவிலும் இரண்டாவது தலைநகராக கருதப்படும் அலெக்சாந்திரா நகரிலும் ஓன்று கூடி முபாரக் மீதான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர். அத்துடன் இப்போரட்டக்காரர்களுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகள் பலவற்றிலும் மக்கள் ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் எகிப்து மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று முன்தினம் தேசிய தொலைகாட்சியில் தோன்றி உரையாற்றிய முபாரக் பதவி விலகவோ நாட்டை விட்டு வெளியேறப் போவதோ இல்லை எனவும் ஆனால் அரசியல் மறுசீரமைப்புக்கு தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் முபாரக்கின் இந்த மறு மொழிக்கு இணங்க மறுத்த போராட்டக்காரர்கள் தொடர்ந்து தம் போராட்டத்தை தொடர்ந்தனர். 01.02.2011 தொடர்ந்து ஒன்றுகூடிய அளவுக்கதிகமான போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் வன்முறையை பிரயோகிக்காது ஆதரவு வழங்கியதுடன் பாதுகாப்பையும் வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் 02.02.2011 திகதி உத்தியோகபூர்வ அறிவித்தல் ஒன்றை விடுத்த எகிப்து இராணுவம் ஆர்ப்பாட்டக்காரர்களை வீடுகளுக்கு செல்லுமாறு நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்த ஒத்துழைப்பு நல்குமாறும் வேண்டுகோள் விடுத்தது. இருப்பினும் எதிர்க்கட்சியினர் இதற்கு இணங்க மறுத்ததுடன் முபாரக் பதவி விலகும் வரை தாம் வீட்டுக்கு செல்லப் போவதில்லை எனவும் தெரிவித்தனர்.

இருப்பினும் எகிப்து ஜனாதிபதி ஒசுனி முபாரகிற்கு ஆதரவானோரும் கொய்ரோவில் ஒன்று கூடியதை அடுத்து இரு தரப்பினருக்கிடையில் மோதல் வெடித்தது. இதில் பலர் மரணமடைந்தும் காயப்பட்டும் இருந்தனர். இதேவேளை எகிப்தில் தற்போது அமுலிலிருக்கும் பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் இறுதியாக நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளை மீள்பரிசீலனைக்குட்படுத்தவும் எகிப்திய ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.

இதற்கிடையில் போராட்டம் மற்றும் வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் எகிப்தின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்டது. இருப்பினும் அதனையும் மீறி மக்கள் வீதியில் கூட்டம் கூட்டமாக குழுமி நிற்பதும் ஐவேளை தொழுகைகளையும் வீதிகளிலேயே நிறைவேற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

எகிப்தியத் துணைத்தலைவர் ஒமார் சுலைமான் 11 பெப்ரவரி அன்று முபாரக் பதவி இறங்கியதையும் படைத்துறை உயர்மட்டக்குழுவிடம் ஆட்சியை ஒப்படைத்ததையும் அறிவித்தார்.

பிற நாடுகளின் கருத்துகள்

எகிப்து போராட்டங்களுக்கு பிற நாடுகளில் நல்ல ஆதரவும், மத்திய கிழக்காசியாவில் மக்களாட்சியற்ற நாடுகளில் ஆட்சியாளர்களின் கண்டனமும் கிடைத்தது. போராட்டத்துக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் முகமாக உலகின் பல நாடுகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் எகிப்திய துதுவராலயங்களுக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் ஜோர்தானின் இம்லாமிய எதிர்க்கட்சி இயக்கம், எகிப்து போன்ற போராட்டம் தமது நாட்டில் வரவேண்டும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ள போதிலும், தமது நாட்டிலும் அரசியல் மறுசீரமைப்பு தேவை என்று கோரியுள்ளது. எகிப்தில் நடக்கிற நிகழ்வுகள் “ஒரு தோற்று நோயைப் போன்றது” என்று கூறியுள்ள சிரியாவின் அதிபர் பஸர் அல் ஆசாத், அவற்றை தலைவர்கள் சரியாக கையாள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads