எட்டுத்தொகை

சங்க இலக்கியம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

எட்டுத்தொகை (Eight Anthologies) என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியங்களுள் ஒன்று. இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது. இவற்றில், பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை. அகத்தையும் புறத்தையும் பற்றிய பாடல்களாக இந்நூல்களைப் பகுக்கின்றனர். தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்பட்டமையால், தொகை எனப் பெயர் பெற்றது. இத்தொகையுள், ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற்புலவர்களும் உள்ளனர். ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102.

மேலதிகத் தகவல்கள் தமிழ் இலக்கியம் ...

எட்டுத்தொகை நூல்களுள், பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து, மற்றவை ஆசிரியப்பாவால் அமைந்து, சில சமயம் வஞ்சிப்பாவால் வரப்பெற்று அமைந்துள்ளன. 3 அடிகள் சிற்றெல்லையாகவும் 410 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன. இந்நூல்கள், கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர். தொகுக்கப்பட்ட காலம் கி.பி. 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் கருதுவர்.

Remove ads

எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா பின்வருவது:

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை

இவற்றுள்,

  • அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.
  • புறப்பொருள் பற்றியவை : புறநானூறு, பதிற்றுப்பத்து.
  • அகமும் புறமும் கலந்து வருவது: பரிபாடல்.

அகப்பாடல்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைத்துள்ளன. புறப்பொருட் பாடல்களுள் சில அழிந்தும், சில சிதைந்தும், பாடவேறுபாடுகள் மிகுந்தும் காணப்படுகின்றன.

Remove ads

தொகுப்பு

பரிபாடலில் எட்டு பாடல்கள், அகம் பற்றியன. இவை, கடவுள் பற்றிய பாடல்களாகவும், தனிப்பாடல்களாகவும், ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டவை. புறநானுற்றில், வஞ்சிப் பாடல்கள் சில உள்ளன. இடத்திற்கேற்ப, தேவையான துறைகளுள் பாடல்களைப் பாடியுள்ளனர். புறத்திணைகளுள் வாழ்க்கைக்கு என்றும் இன்றியமையாத அறங்களையும், ஒழுக்கங்களையும் வலியுறுத்தும் பாடாண் முதலிய துறைகளைப் பாடியுள்ளனர். கிடைத்த பாடல்களில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு திணைகட்கும் நான்கு நூறு என ஒரு வகையாகத் தொகை கொண்டனர். ஐங்குறுநூற்றுள் பாலைக்கும் ஒரு நூறு கொண்டனர். பிற்காலத்தார், நான்கு திணைப் பாடல்களை ஐந்திணைக்கும் பலவகையாகப் பிரித்திருக்கக்கூடும். பாடல்களின் அடியளவுகளைக் கொண்டு பல தொகை நூல்களைத் தொகுத்துள்ளனர்.

3 அடிச் சிறுமையும் 6 அடிப் பெருமையுமுடைய பாடல்களை ஐங்குறுநூறு என்றனர். ஐந்து புலவர்கள் நூறுநூறாகப் பாடிய தனித்தன்மையையும் உடையது இத்தொகை நூல். சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையென்ற சேரன் ஆதரவால், கூடலூர்க்கிழார் இதனைத் தொகுத்தார்.

4-8 அடி எல்லையினையுடைய பாடல்களைக் குறுந்தொகை ஆக்கினர். 9-12 அடிப்பாடல்கள் நற்றிணையாக அமைந்தன. 13-31 அடிப்பாடல்கள் நெடுந்தொகையாய் அகநானூறு ஆயின.

அகத்திற்கு நானூறு என்பதற்கேற்ப, புறத்திற்கும் நானூறு பாடல்களைத் தொகுத்தனர். புறநானூறும், பதிற்றுப்பத்தும் புறத்தைப் பற்றியன. மற்றவை அகம் பற்றியன. சிறப்பாக ஒரு பகுதியைப் பேசினாலும், திணை நூல்களின் பாடல்களை அறம், பொருள், இன்பம் என்னும் முப்பகுதிகளைப் பற்றிய உண்மைகளை இடையிடையே தம்முள் விரவப் பெற்றுள்ளன. புறப்பாடல்களில் அரசரின் போர்கள், கொடை ஆகியவை பற்றியும், அகப்பாடல்களில் வாழ்க்கைக்குரிய ஒழுக்கவுண்மைகளைப் பற்றியும், அரிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. கடையெழு வள்ளல்களைப் பற்றிய குறிப்புகள் புறநானூற்றிலும், அகப்பாடல்களிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன. தம்மைப் புரந்த வள்ளல்களை நன்றியுடன் குறிப்பிடும் குறிப்புகளே இவை. கடைச்சங்கத் தொடக்கத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், கரிகாலனும் இலங்கியுள்ளனர். அக்காலத்தே ஆண்ட சேர, சோழ, பாண்டியர், சிற்றரசர்கள், குறுநில மன்னர் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள், புறநானூற்றில் மிகுதியாகவும், அகநூல்களில் ஓரிரு வரிகளாகக் கலந்தும் காணப்படுகின்றன.

பொதுவாக எட்டுத்தொகை நூல்களில், பண்டைத் தமிழ் அரசர்களின் போர்த்திறங்களையும், வரையாது வழங்கும் வள்ளன்மைப் பண்பையும், மறக்குடி மகளிரின் மாண்பினையும், போர் தவிர்க்க இடைநின்ற சான்றோர்களின் இயல்புகளையும், ஐந்திணைக்குரிய அன்பொழுக்கங்களையும், புராணச் செய்திகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும் அறியலாம்.

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads