பட்டினப் பாலை
பத்துப்பாட்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
பட்டினப்பாலை (Pattinappalai) என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் . பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார். பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு,அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமைகளை எடுத்துக்கூறுகிறார் புலவர். கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன். அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும்.
Remove ads
நூலின் சிறப்பு
சங்க நூலாகிய பத்துப்பாட்டு வரிசையில் ஒன்பதாவது பாட்டு பட்டினப்பாலையாகும். பட்டினப்பாலையின் செய்யுள்கள் இடையிடையே வஞ்சிப்பாவின் அடிகள் விரவி இருந்தாலும் ஆசிரியப்பாவால் இயன்றவை.
பட்டினம்
துறைமுகத்தை ஒட்டியுள்ள பெரு நகரங்கள் பட்டினம் என அழைக்கப்பட்டன. காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் பழம்பெரும் நகரமாகும். தலைநகரமாக விளங்கிய துறைமுகப்பட்டினம். இது தமிழகத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கீழ்க்கோடியிலே காவிரி நதி கடலோடு கலக்கும் இடத்தில் உள்ளது. இப்போது இது ஒரு சிறிய ஊராகும். ஏறக்குறைய ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் கடலிலே மூழ்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஐம்பெருங்காப்பியங்களிலே ஒன்றான மணிமேகலையில் காவிரிப்பூம்பட்டினம் கடலில் மூழ்கிய செய்தி காணப்படுகிறது.
Remove ads
பாலை
பாலை என்பது பாலைத்திணை ஆகும். பிரிவைப் பற்றிக் கூறுவது பாலைத்திணையாகும். கணவன் தன் மனைவியை விட்டுப் பிரிந்து போவது - அல்லது பிரிந்து போக நினைப்பது - அல்லது பிரிந்து போக வேண்டுமே என நினைத்து வருந்துவது பாலைத்திணையின்கண் அடங்கும். கணவன் தான் பொருள் தேடப் பிரிந்து செல்வதைத் தன் மனைவிக்கு அறிவிப்பதும், அதை அவள் தடுப்பதும் பாலைத் திணையில் அடங்கும்.
பட்டினப்பாலை என்பது பட்டினம்- பாலை என்ற இரு சொற்களைக் கொண்ட தொடர். "பட்டினத்தின் சிறப்பைக் கூறிப் பிரிவின் துன்பத்தை உணர்த்துவது" என்பது இதன் பொருளாகும்.
Remove ads
பாட்டின் அமைப்பு
பொருள் தேடப் பிரிந்து செல்ல நினைக்கின்றான் தலைவன். பிரிந்து சென்றால் தன் காதலியின் நிலை என்ன அகும்? அவள் தன் பிரிவைப் பொறுப்பாளா? தான் திரும்பும் வரை அவள் உயிர்கொண்டு உறைவாளா? என்ற ஐயம் அவன் உள்ளத்திலே எழுந்து அவனை வாட்டுகின்றன. பிரிந்து சென்றால் தானும் மன அமைதியோடு சென்ற இடத்தில் செயலாற்ற முடியாது. வேதனைதான் மிஞ்சும்; வேதனையோடு செய்யும் செயலில் வெற்றிகாண முடியாது. ஆகையால் பிரிவு காதலிக்குத் துன்பம் தருவதோடு தனக்கும் துன்பத்தைத் தரும் என நினைக்கிறான் இதனால்
- " நான் பிரிந்து செல்ல நினைக்கும் காட்டு மார்க்கம், கரிகாற்சோழன் தன் பகைவர்களின் மேல் வீசிய வேல்படையைக் காட்டினும் கொடுமையானது. என்காதலியின் மெல்லிய தோள்கள் அந்தக் கரிகாற்சோழனுடைய செங்கோலைக் காட்டினும் குளிர்ச்சியைத் ( நன்மையை, இன்பத்தை)தருவன. ஆதலால் நீங்காத சிறப்பினையுடைய காவிரிப்பூம்பட்டினமே கிடைப்பதாஇருந்தாலும் கூட என் காதலியை விட்டுப் பிரிந்து வரமாட்டேன். என் மனமே! பிரிந்து போகவேண்டும் என எண்ணுவதை மறந்துவிடு".
என்ற முடிவுக்கு வருகிறான். இதுவே பட்டினப்பாலையின் அகப்பொருள் கருத்தாகும். இதனை
- " திருமாவளவன்
- தெவ்வர்க்கு ஓங்கிய
- வேலினும் வெய்ய கானம்;
- அவன், கோலினும் தண்ணிய
- தடம்மெல் தோளே.
- முட்டாச் சிறப்பின்
- பட்டினம் பெறினும்
- வாரிரும் கூந்தல்
- வயங்கிழை ஒழிய
- வாரேன் வாழிய நெஞ்சே."
என்று வரும் பட்டினப்பலை அடிகளால் அறியலம்.
நூலின் பொருள்
காவிரியாற்றின் சிறப்பு; சோழநாட்டின் நிலவளம்; காவிரிப்பூம்பட்டினத்தின் சுற்றுப்புறங்களின் செழிப்பு; காவிரித்துறையின் காட்சி; செம்படவர்களின் வாழ்க்கை; பொழுதுபோக்கு இவைகளை இந்நூல் விரிவாகக் கூறுகிறது. காவிரிப்பூம்பட்டினத்திலே அக்காலத்தில் நடைபெற்ற வாணிகம்; அந்நகரத்திலே குவிந்திருந்த செல்வங்கள்; அங்கு நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி வாணிகம்; வாணிகர்களின் நடுவுநிலைமை; பண்டங்களைப் பாதுகாக்கும் முறை இவைகளையெல்லாம் இந்நூலிலே காணலாம்.
இந்த நகரத்தின் தலைவனான கரிகாற்சோழனின் பெருமை, வீரம், கொடை முதலியவற்றையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இந்நூல் பாலைத்திணை என்னும் அகப்பொருளைப் பற்றியதாயினும் புறப்பொருள் செய்திகளே இதில் மிகுதியாகக் காணப்படுகின்றன.
Remove ads
கரிகாற்சோழன்
பட்டினப்பாலையில் குறிப்பிட்டிருக்கும் கரிகாற்சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவன். காவிரிப் பூம்பட்டினமே இவனுடைய தலைநகரமாக இருந்தது. இவன் இளைஞனாய் இருந்தபோது பகைவரால் சிறை பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.எப்படியோ சிறைலிருந்து தப்பித் தனக்குரிய அரசாட்சியையும் கைப்பற்றினான். பிறகு தன் பகைவர்களின் மேல் படை திரட்டிச் சென்று அவர்களையெல்லாம் வீழ்த்தி வெற்றிபெற்றான். இச்செய்தி பட்டினப்பாலையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது. இவனைப் பற்றி மேலும் பழமொழி, பொருநராற்றுப்படை, புறநானூறு, சிலப்பதிகாரம் போன்றவற்றில் பல செய்திகள் காணக்கிடைக்கின்றன.
கரிகால் சோழன் சிறுவனாய் இருந்த போது அவனைக் கொல்ல பகைவர்கள் சூழ்ச்சி செய்து அவரிருந்த இல்லத்திற்குத் தீ வைக்க அஞ்சாமல் தீயினின்றும் வெளிவந்து தப்பித்துக்கொண்டான். அவன் தீயிலிருந்து வெளிவரும் போது அவனுடைய கால் தீப்பட்டுக் கரிந்து போனதால் கரிகால்சோழன் என்று பெயர் வந்தது.
இவன் வெண்ணி என்னும் ஊரின் பக்கத்திலிருந்த போர்க்களத்தில் சேரமான் பெருஞ்சேரலாதன் என்பவனோடு போர் செய்து வென்றான். அப்பாேது அதே போர்க்களத்தில் சேரலாதனுக்குத் துணையாக வந்த பாண்டியனையும் எதிர்த்துப் போர் செய்து வென்றான். ஆகவே பாண்டியன், சேரன் இருவரையும் வென்றவன் இவன். இவன் இமயம் வரை படையெடுத்துச் சென்றான். இடையிட்ட மன்னர்களை எல்லாம் வென்று இமயத்தில் புலிக்கொடியையும் நாட்டினான். இவன் இளையோனாய் இருந்த போது நரை முடித்து நீதி கூறிய கதையும் வழங்குகிறது.
கரிகால் சோழன் தமிழன்பன். தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவன். இரும்பிடர்த்தலையார் என்னும் புலவர் இவனது தாய்மாமன். பட்டினப்பாலையைப் பாடிய உருத்திரன்கண்ணனாருக்குப் பதினாறு நூறாயிரம் ( 16,00,000-16 லட்சம்) கழஞ்சு (பொன்) பரிசளித்தான் என்ற செய்தி இவனுடைய தமிழ்ப்பற்றை விளக்குவதாகும். இதை உற்றுநோக்கினால் 188 அடிகளுக்கு 16,00,0000 கழஞ்சு பொன் என்றால் ஒரு அடிக்கு 8,510.6 களஞ்சு பொன் கொடுத்தான் என்பதை அறிய முடிகிறது.
Remove ads
ஆசிரியர் வரலாறு
பட்டினப்பாலையை இயற்றிய ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆவார். பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை என்ற நூலினையும் இவர்தான் இயற்றியுள்ளார். பெரும்பாணாற்றுப்படை தொண்டைமான் இளந்திரையன் என்னும் அரசன் மீது பாடப்பட்டது. பட்டினப்பாலை கரிகால்சோழன் மீது பாடப்பட்டது. ஆகவே இவர் கரிகாலன், இளந்திரையன் என்ற இரண்டு மன்னர்களின் அன்புக்குரியவராக வாழ்ந்தார் என்பதை அறியலாம். இவரின் வரலாற்றினை அறிவதற்கான சான்று எதுவும் இல்லை. கடியலூர் என்பதை இவர் பிறந்த ஊராகக் கருதுகின்றனர். இவ்வூர் எதுவெனத் தெரியவில்லை. இவர் தொண்டைமானையும், சோழனையும் பாடியிருப்பதால் இந்த ஊர் சோழ நாட்டிலோ, தொண்டை நாட்டிலோதான் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். இவர் கூறியிருக்கும் இயற்கை நிகழ்ச்சிகளும் உவமைகளும் அக்கால காவிரிப்பூம்பட்டினத்தை நம் மனக்கண்ணால் படம் பிடித்துக் காட்டுவது போல் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் பெருமை, தமிழர் நாகரிகத்தின் உயர்வு, தமிழர்களின் வீரம், பண்பாடு இவையெல்லாம் இந்தப் பட்டினப்பாலையில் காணலாம். பத்துப்பாட்டில் உள்ள நூல்களில் இரண்டு நூல்கள் இவருடைய படைப்புகள் (பெரும்பாணாற்றுப்படை 500 அடிகள் பட்டினப்பாலை 301 அடிகள்) ஆகும்.
Remove ads
உசாத்துணை
- பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை. சாமி சிதம்பரனார். இலக்கிய நிலையம். இரண்டாம் பதிப்பு. 1973.
இவற்றையும் பார்க்கவும்
ஏனைய பத்துப்பாட்டு நூல்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads