மத்திய பேருந்து நிலையம், ஈரோடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மத்திய பேருந்து நிலையம் அல்லது வெள்ளிவிழா பேருந்து நிலையம், ஈரோடு மாநகரின் முக்கிய போக்குவரத்து மையமாகத் திகழ்கிறது. இது மாநகரின் மையப் பகுதியில் ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம் மற்றும் பன்னீர் செல்வம் பூங்கா ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 2.கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இது புறநகர் பேருந்துகள், மாநகர் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் ஆகிய மூன்று பேருந்து சேவைகளையும் இணைக்கும் விதமாக அமைந்துள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஆகும். இப்பேருந்து நிலையத்திலிருந்து மாநகர் மற்றும் புறநகரின் அனைத்துப் பகுதிகளும் ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள் மூலம் சிறப்பான பேருந்து இணைப்பு சேவை வழங்கப்பட்டுள்ளது.
Remove ads
வரலாறு
ஈரோடு நகருக்கான மத்திய பேருந்து நிலையம், மணிக்கூண்டை அடுத்த கிருஷ்ணா திரையரங்கம் அருகில் ஆர்.கே.வி. சாலை - காவேரி சாலை சந்திப்புப் பகுதியில் இயங்கி வந்தது. நகரின் வளர்ச்சியும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்ததன் காரணமாக 1970களில் பேருந்து நிலையம் தற்போதுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. நேதாஜி காய்கறி மார்க்கெட் அருகே செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையப் பகுதியில் தற்போது மாநகரட்சியின் சார்பில் வணிக வளாகமும், திரு. வி.க. பூங்காவும் செயல்பட்டு வருகின்றன.
- 1972-ஆம் ஆண்டு பேருந்து நிலையத்தை இடம் மாற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு சுவஸ்திக் கார்னர் அருகில் செயல்பட்டு வந்த சந்தைப் பகுதிக்கு மாற்றி அதற்கு சுதந்திரதின வெள்ளிவிழா பேருந்து நிலையம் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது.
- 1973 ஆம் ஆண்டு பேருந்து நிலைய இடமாற்றம் செயல்படுத்தப்பட்டது.
- 1980 ஆம் ஆண்டு பேருந்து நிலையத்திற்கான முதல் முனையக் கட்டிடம் அப்போதைய பெரியார் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த திரு. வே. இலட்சுமிரதன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் ஆளுநரின் ஆலோசகராக இருந்த திரு. தி.நா. இலட்சுமிநாராயணன், இ.ஆ.ப. அவர்களால் 28.03.1980 அன்று திறந்து வைக்கப்பட்டது.
- 1982 ஆம் ஆண்டு பேருந்து நிலையத்தினை விரிவாக்கம் செய்து இரண்டாவது முனையக் கட்டிடம் அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த திரு. சு. முத்துசாமி அவர்கள் தலைமையில் அப்போதைய முதலமைச்சர் திரு. எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களால் 28.11.1982 அன்று திறந்து வைக்கப்பட்டது.
- 2003-ஆம் ஆண்டு பேருந்து நிலையத்தினை விரிவுபடுத்தி, வளாகத்தின் கிழக்குப்பகுதியில் நகரப் பேருந்து முனையம் தனியாக நிறுத்தங்களுடன் கூடிய கட்டிடம் மற்றும் கூடுதல் வணிகவளாக கட்டிடம் ரூபாய் 4.13 கோடி மதிப்பீட்டில் அப்போதைய முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களால் 12.02.2003 அன்று திறந்து வைக்கப்பட்டது.
- 2011-ஆம் ஆண்டு பேருந்து நிலைய வளாகத்தினை மேலும் விரிவுபடுத்தி, சிற்றுந்து முனையம் தனியாக நிறுத்தங்களுடன் கூடிய கட்டிடம், கீழ்தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார வளாகக் கட்டிடம் ஆகியவை ரூபாய் 4.10 கோடி மதிப்பீட்டில் அப்போதைய முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களால் 29.11.2011 அன்று திறந்து வைக்கப்பட்டது.
- இதைத் தொடர்ந்து பேருந்து நிலைய வளாகம் முழுவதும் கான்கிரீட் தரைத் தளமும் அமைக்கப்பட்டது.
ஆரம்ப காலங்களில் தமிழகத்திலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாகத் திகழ்ந்த இது, சமீப காலங்களில் உருவான சென்னை கோயம்பேடு, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்களுக்கும் இன்றளவும் இணையாகவே உள்ளது.
Remove ads
போக்குவரத்து செயல்பாடு

இந்தப் பேருந்து நிலையம் ஒரே வளாகத்தில், புறநகர்ப் பேருந்துகள், நகர்ப்பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளை இயக்கும் தனித்தனி நிறுத்தங்களோடு மொத்தம் 120 பேருந்துகளை நிறுத்தும் வசதியுடன் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக அமைந்துள்ளது. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் புறநகர்ப் பேருந்துகளுக்கென 5 நடைமேடைகளில் ஒவ்வொன்றிலும் தலா 15 நிறுத்தங்களுடன் மொத்தம் 75 பேருந்து நிறுத்தங்களும்; நகரப் பேருந்துகளுக்கெனத் தனியாக 5 நடைமேடைகளும், மேலும் சிற்றுந்துகளுக்கென 2 நடைமேடைகளும் மொத்தம் 35 பேருந்து நிறுத்தங்களுடன் பயன்பாட்டில் உள்ளன.[1]
2015ஆம் ஆண்டின் கணக்கெடுப்புபடி, இங்கிருந்து ஒரு நாளைக்கு சுமார் 2,530 புறநகர்ப் பேருந்து சேவைகளும், 1,640 நகரப் பேருந்து சேவைகளும் என மொத்தம் 4,200 பேருந்து சேவைகள் வழங்கப்படுகின்றன.[2] நாளொன்றுக்கு சுமாராக 1,10,000 பயணிகள் இந்தப் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.[3]
Remove ads
புதிய புறநகர்ப் பேருந்து நிலையங்கள் திட்டம்
மாநகரின் விரைவான வளர்ச்சியால், இந்தப் பேருந்து நிலையமும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதையடுத்து அரசு நிர்வாகம், இந்தப் பேருந்து நிலையத்தை மூன்றாகப் பிரித்து தெற்கு வெளிவட்டச்சாலை அருகேயுள்ள சோலார் மற்றும் NH-544 மேற்கு புறவழிச்சாலை அருகேயுள்ள சித்தோடு ஆகிய இரண்டு இடங்களில் புதிதாக புறநகர்ப் பேருந்து நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டது.
சோலாரில் தமிழகத்தின் தெற்கு மற்றும் மத்தியப் மாவட்டங்களுக்குச் செல்லும் 1,200 புறநகர்ப் பேருந்து சேவைகளை கையாளுமளவிற்கும்; சித்தோட்டில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் பெங்களூருக்கு செல்லும் 900 பேருந்து சேவைகளைக் கையாளும் வகையிலும் இரண்டு கூடுதல் புறநகரப் பேருந்து நிலையங்கள் திட்டமிடப்பட்டது. [4]
சோலார் பேருந்து நிலையம், ஈரோடு
தற்போதைய நிலவரப்படி, தமிழக அரசு கரூர் சாலையில் சோலார் பகுதியில் சுமார் 65 பேருந்துகள் நிறுத்தும் வகையில் 24 ஏக்கரில் புதிய புறநகர்ப் பேருந்து நிலையம் அமைப்பதற்கு 63.50 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் அளித்து கட்டுமானப் பணிகள் துவங்கவுள்ளது.
பெரியசேமூர் பேருந்து நிலையம், ஈரோடு
மேலும், சத்தியமங்கலம் சாலையில் பெரியசேமூர் பகுதியில் கனிராவுத்தர்குளம் அருகில் தனியாரிடம் 14 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தி புதிய புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்க ரூபாய் 130 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து நிலம் கையகப்படுத்தும் பணியும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் துவங்கியுள்ளது.
நகரப் பேருந்து நிலையங்கள்
ஈரோடு மாநகரப் பகுதியில் நகரப் பேருந்துகளுக்கென இரண்டு சிறிய பேருந்து நிலையங்களும் உள்ளன.
- சூரம்பட்டி பேருந்து நிலையம்
- 46-புதூர் பேருந்து நிலையம்
நிலைய அமைப்பு
தற்போது மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் இப்பேருந்து நிலையமானது மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள நடைமேடை அமைப்பு மாறுபடும்.
Remove ads
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads