அப்பாசியக் கலீபகம்
இசுலாமியப் பேரரசின் கலீபகங்களில் மூன்றாவது கலீபகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அப்பாசியக் கலீபகம் அல்லது அப்பாசியப் பேரரசு (ஆங்கிலம்: Abbasid Caliphate; அரபு மொழி: الْخِلَافَة الْعَبَّاسِيَّة, அல்-கிலாபா அல்-அப்பாசியா) என்பது இசுலாமிய இறை தூதர் முகம்மது நபிக்குப் பின் வந்த மூன்றாவது கலீபகம் ஆகும். முகம்மதுவின் சிறிய தந்தையாரான அப்பாசு இப்னு அப்த் அல்-முத்தலிப்பிடம் (பொ. ஊ. 566-653) இருந்து தோன்றிய ஓர் அரசமரபால் இது நிறுவப்பட்டது. இவரிடம் இருந்தே இந்த அரசமரபானது அதன் பெயரைப் பெறுகிறது.[8] பொ. ஊ. 750இன் அப்பாசியப் புரட்சியில் உமையா கலீபகத்தை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்ததற்குப் பிறகு நவீன கால ஈராக்கில் பகுதாதுவில் அமைந்திருந்த தங்களது தலைநகரத்திலிருந்து பெரும்பாலான கலீபகத்திற்குக் கலீபாக்களாக இவர்கள் ஆட்சி செய்தனர். அப்பாசியப் புரட்சியானது அதன் தொடக்கத்தையும், முதல் வெற்றிகளையும் தூரக் கிழக்குப் பகுதியான குராசானில் பெற்றிருந்தது. உமையா செல்வாக்கின் லெவண்ட் மையத்திலிருந்து இது தொலை தூரத்தில் அமைந்திருந்தது.[9]
அப்பாசியக் கலீபகமானது இதன் அரசாங்கத்தை முதன் முதலில் நவீன கால ஈராக்கில் உள்ள கூபாவில் மையமாகக் கொண்டிருந்தது. ஆனால், 762இல் கலீபா அல்-மன்சூர் பகுதாது நகரத்தை பண்டைக் கால பாபிலோனியாவின் தலைநகரமான பாபிலோன் மற்றும் சாசானிய நகரமான சிதேசிபோன் ஆகியவற்றுக்கு அருகில் நிறுவினார். அறிவியல், பண்பாடு மற்றும் புத்தாக்கத்தின் மையமாக பகுதாது உருவானது. இக்காலமே இசுலாமின் பொற்காலம் என்று பின்னாட்களில் அறியப்பட்டது. இதே காலகட்டத்தின் போது தான் இசுலாமியக் கையெழுத்துப் பிரதிகள் உற்பத்தியும் அதன் உச்ச நிலையை அடைந்தது. 8 மற்றும் 10ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் அப்பாசியக் கலைஞர்கள் கையெழுத்துப் பிரதித் தொழில் நுட்பங்களில் முன்னோடிகளாகத் திகழ்ந்து, அதைக் குறைபாடற்றதாக உருவாக்கினர். கையெழுத்துப் பிரதி உருவாக்கும் பழக்க வழக்கங்களில் தர நிலைகளாக இவை பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. இது, மேலும் ஞான வீடு போன்ற பல முக்கியமான கல்வி நிலையங்களை இந்நகரம் கொண்டிருந்தது. மேலும், பல இன மற்றும் பல சமய சூழ்நிலையைக் கொண்டிருந்தது. கற்றல் மையமாக ஒரு பன்னாட்டளவிலான நற்பெயரை இது பெற்றிருந்தது. ஆள்வதற்காக அரசுத் துறை அதிகாரிகளைப் (பர்மகிது குடும்பம் போன்ற) பயன்படுத்துதல், மேலும் உம்மாவில் (முசுலிம் சமூகம்) அரேபியர் அல்லாத முசுலிம்களை இணைத்துக் கொள்ளும் அதிகரித்து வந்த நிலை ஆகியவற்றால் அப்பாசியக் காலமானது குறிக்கப்படுகிறது. தொடக்கத்தில் ஒத்துழைப்பு இருந்த போதும் 8ஆம் நூற்றாண்டின் பிந்தைய பகுதியில் அப்பாசியர்கள் அரேபியர் அல்லாத மவாலிகளை (மதம் மாறிய அரேபியரல்லாத முசுலிம்கள்) ஒதுக்கினர்.[10]
ஈரானிய புயியர் மற்றும் செல்யூக் துருக்கியர்களின் வளர்ச்சியுடன் கலீபாக்களின் அரசியல் சக்தியானது வரம்புக்குட்பட்டதாக மாறியது. புயியரும், செல்யூக் துருக்கியர்களும் முறையே 945 மற்றும் 1055இல் பகுதாதுவைக் கைப்பற்றினர். பரந்த இசுலாமியப் பேரரசு மீதான அப்பாசியரின் தலைமைத்துவமானது கலீபகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு பெயரளவு சமயச் செயல்பாடுகள் என்ற நிலைக்குப் படிப்படியாகத் தாழ்ந்த போதிலும் இந்த அரசமரபானது கலீபா அல்-முக்தபியின் ஆட்சிக் காலத்தின் போது அதன் மெசொப்பொத்தேமியாவின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டது. கலீபா அல்-நசீரின் ஆட்சிக் காலத்தின் போது ஈரானுக்குள் விரிவடைந்தது.[11] குலாகு கான் தலைமையிலான மங்கோலியர்களால் நடத்தப்பட்ட பகுதாது முற்றுகை மற்றும் அல்-முஸ்டசீம் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டது ஆகியவற்றுடன் பண்பாட்டுப் புத்தெழுச்சி மற்றும் அதற்கான பலன் பெற்ற அப்பாசியர்களின் காலமானது 1258ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்பாசிய வழி ஆட்சியாளர்கள் 1261இல் மம்லுக் தலைநகரான கெய்ரோவில் தங்களை மீண்டும் மையப்படுத்திக் கொண்டனர். கலீபா அல்-முசுதைனின் குறுகிய கால ஆட்சி தவிர்த்து பிற காலத்தில் அரசியல் சக்தியை இவர்கள் கொண்டிருந்த போதிலும் 1517இல் எகிப்தை உதுமானியர் கைப்பற்றியதற்குப் பிறகு சில ஆண்டுகள் வரையிலான காலம் வரை சமய உச்ச நிலைக்கான உரிமை கோரலை இந்த அரசமரபானது தொடர்ந்தது.[12] கடைசி அப்பாசியக் கலீபாவாக மூன்றாம் அல்-முதவக்கில் திகழ்ந்தார்.[13]
Remove ads
வரலாறு
அப்பாசியக் கலீபாக்கள் முகம்மது நபியின் மிக இளைய உறவினர்களில் ஒருவரான அப்பாசு இப்னு அப்த் அல்-முத்தலிப்பின் வழித் தோன்றல்களாகவும், அதே பானு அசீம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் திகழ்ந்தனர். முகம்மது நபியுடனான தங்களது நெருங்கிய இரத்த சம்பந்தத்தின் அடிப்படையில் பானு உமையாவின் உமையா வழித் தோன்றல்களை இடம் மாற்றுவதில் முகம்மதுவின் உண்மையான வழித் தோன்றல்கள் தாம் என அப்பாசியர்கள் உரிமை கோரினர்.
அப்பாசியப் புரட்சி (750–751)
பொதுவாக உமையர்களின் ஒழுக்கம் மற்றும் நிர்வாகத்தைத் தாக்கியதன் மூலம் உமையர்களிலிருந்து தங்களை தனித்துவமானவர்களாக அப்பாசியர்களும் கூடக் காட்டிக் கொண்டனர். அமெரிக்க வரலாற்றாளர் இரா லபிதுசுவின் கூற்றுப் படி, "அப்பாசியப் புரட்சியானது அரேபியர்களால் பெருமளவுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. முதன்மையாக மெர்வில் இருந்த நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதால் மன அமைதி கெட்டிருந்த குடியிருப்பாளர்களும், அவர்களுடன் ஏமானி பிரிவினர் மற்றும் அவர்களது மவாலி".[14] மவாலி என்று அறியப்பட்ட அரேபியர் அல்லாத முசுலிம்களுக்கும் கூட அப்பாசியர்கள் இணக்கமானவர்களாகத் தெரிந்தனர். மவாலிகள் அரேபியர்களின் ஒரே ஒரு மொழியை அடிப்படையாகக் கொண்ட சமூகத்திற்கு வெளியே தொடர்ந்து இருந்தனர். உமையா பேரரசுக்குள் ஒரு தாழ் நிலை வகுப்பினராக மவாலிகள் கருதப்பட்டனர். அப்பாசின் ஒரு கொள்ளுப் பேரனான முகம்மது இப்னு அலி இரண்டாவது உமரின் ஆட்சிக் காலத்தின் போது அசேமியர் என்று அறியப்பட்ட முகம்மதுவின் குடும்பத்தினரிடம் அதிகாரத்தைத் திரும்ப ஒப்படைக்க பாரசீகத்தில் செயல்படத் தொடங்கினார்.
இரண்டாவது மர்வானின் ஆட்சிக் காலத்தின் போது இந்த எதிர்ப்பானது அப்பாசிடம் இருந்து வழித் தோன்றிய நான்காவது வழித் தோன்றலான இப்ராகிம் அல்-இமாமின் கிளர்ச்சியில் முடிவடைந்தது. இவர்களை ஆளுநர் எதிர்த்திருந்தாலும் கூட குராசான் மாகாணம் (கிழக்கு பாரசீகம்) மற்றும் சியா அரேபியர்களால்[8][15] ஆதரவளிக்கப்பட்ட இவர் ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றியைப் பெற்றார். ஆனால், 747ஆம் ஆண்டு பிடிக்கப்பட்டார். இறந்தார். இவர் ஒரு வேளை சிறையில் அரசியல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
9 சூன் 747 அன்று குராசானில் இருந்து உருவான அபு முசுலிம் உமையா ஆட்சிக்கு எதிராக ஒரு வெளிப்படையான கிளர்ச்சியை வெற்றிகரமாகத் தொடங்கி வைத்தார். இக்கிளர்ச்சியானது கருப்பு பதாகை சின்னத்தின் கீழ் நடத்தப்பட்டது. எதிர்ப்புகள் அதிகாரப்பூர்வமாக மெர்வில் தொடங்கிய போது முசுலிமின் தலைமையின் கீழ் கிட்டத்தட்ட 10,000 வீரர்கள் இருந்தனர்.[16] தப்பியோடிய ஆளுநர் நசர் இப்னு சய்யரை தளபதி கக்தபா மேற்கு நோக்கித் தொடர்ந்து சென்றார். கோர்கன் யுத்தம், நகவந்த் யுத்தம் மற்றும் இறுதியாக கர்பலா யுத்தம் ஆகியவற்றில் உமையர்களைத் தோற்கடித்தார். இந்த அனைத்து யுத்தங்களும் 748ஆம் ஆண்டு நடைபெற்றன.[15]
இப்ராகிம் மர்வானால் பிடிக்கப்பட்டார். கொல்லப்பட்டார். அபு அல்-அப்பாசு அஸ்-சபா என்ற பெயரால் அறியப்பட்டவரும், இப்ராகிமின் சகோதரருமான அப்தல்லா இச்சண்டைக்கு பொறுப்பேற்றார். அவர் பெரிய சாப் பகுதிக்கு அருகில் 750இல் நடந்த யுத்தத்தில் உமையர்களைத் தோற்கடித்தார். இறுதியாக, கலீபகத்தை அறிவித்தார்.[17] இந்தத் தோல்விக்குப் பிறகு மர்வான் எகிப்துக்குத் தப்பியோடினார். அங்கு அவர் இறுதியாகக் கொல்லப்பட்டார். ஓர் ஆண் தவிர அவரது குடும்பத்தில் எஞ்சியவர்களும் கூட கொல்லப்பட்டனர்.[15]
ஆட்சிக்கு வருதல் (752–775)

தங்களது வெற்றிக்குப் பிறகு உடனடியாக அல்-சபா தனது படைகளை நடு ஆசியாவுக்கு அனுப்பினார். அங்கு இவரது படைகள் தலாசு யுத்தத்தின் போது சீனாவின் தாங் அரசமரபின் விரிவாக்கத்திற்கு எதிராகச் சண்டையிட்டனர். சிரியா மற்றும் மெசொப்பொத்தேமியாவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான கிளர்ச்சிகளை ஒடுக்குவதில் அல்-சபா கவனம் செலுத்தினார். இந்தத் தொடக்க கால கவனச் சிதறல்களின் போது பைசாந்தியர்கள் ஊடுருவல்களை நடத்தினர்.[15]
அப்பாசியர் ஆட்சியில் செய்யப்பட்ட முதல் முக்கியமான மாற்றங்களில் ஒன்று கலீபகத்தின் அதிகார மையத்தை சிரியாவில் இருந்து மெசொப்பொத்தேமியாவிற்கு (தற்கால ஈராக்) நகர்த்தியதாகும். அப்பாசியர்களின் பாரசீக மவாலி ஆதரவு தளத்திற்கு நெருங்கியதாக இந்த இடம் திகழ்ந்தது. பேரரசில் அரேபியா ஆதிக்கத்தைக் குறைப்பதற்கான அவர்களது கோரிக்கையை இந்த நகர்வு பூர்த்தி செய்தது.[18] எனினும், எந்த ஓர் உறுதிப்படுத்தப்பட்ட தலைநகரமும் இன்னும் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தது. இந்தத் தொடக்க கால அப்பாசிய ஆண்டுகளில் கூபா பொதுவாக நிர்வாகத் தலைநகரமாகச் சேவையாற்றியது. ஆனால், கலீபாக்கள் அலீ அவர்களின் வழித் தோன்றல்கள் குறித்து நகரிலிருந்த அனுதாபத்தை அறிந்திருந்தனர். எனவே, எப்போதும் அவர்கள் தொடர்ந்து அங்கு குடியிருக்கவில்லை.[6] 752இல் அல்-சபா அல்-அசீமியா என்று அழைக்கப்பட்ட ஒரு புதிய நகரத்தைக் கட்டமைத்தார். இது எந்த இடத்தில் அமைந்திருந்தது எனத் தெளிவாகத் தெரியவில்லை. மிக சாத்தியமான வகையிலே இது கூபாவிற்கு அருகில் அமைந்ததாகக் கருதப்படுகிறது.[7] அதே ஆண்டின் பிற்பகுதியில் இவர் தலைநகரத்தை அன்பருக்கு நகர்த்தினார். அங்கே தனது குராசானி வீரர்களுக்கு ஒரு புதிய குடியிருப்பையும், தனக்கு ஓர் அரண்மனையையும் இவர் கட்டமைத்தார்.[19]

அல்-சபாவுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அபு சாபர் அல்-மன்சூரே (ஆ. 754–775) அப்பாசிய ஆட்சியை உறுதியாக நிலைப்படுத்தியவர் ஆவார். உள்நாட்டுச் சவால்களை இவர் திறம்பட எதிர் கொண்டார்.[20] இவரது சிறிய தந்தையும், சாப் யுத்தத்தில் உமையர்களை வெற்றி கொண்டவருமான அப்தல்லா இப்னு அலி கலீபா பதவிக்காக செயல் நோக்குடைய ஆற்றல் மிக்க போட்டியாளராகத் திகழ்ந்தார். அல்-மன்சூர் குராசானைச் சேர்ந்த புரட்சித் தளபதியான அபு முசுலிமை அவருக்கு எதிராக 754ஆம் ஆண்டு அனுப்பினார். அபு முசுலிம் அவரை வெற்றிகரமாகத் தோற்கடித்ததற்குப் பிறகு அல்-மன்சூர் அபு முசுலிமையே ஒழித்துக் கட்டுவதற்காகத் திரும்பினார். ஏற்பாடுகளைச் செய்து அவரைக் கைது செய்தார். 755இல் அவரை மரண தண்டனைக்கு உட்படுத்தினார்.[21]
மேற்கு எல்லையில் மேற்கு மற்றும் நடு மக்ரப் பகுதி மீது கலீபாவின் கட்டுப்பாட்டை மீண்டும் நிலை நிறுத்த அப்பாசியர்களால் இயலவில்லை. 740களில் உமையர்கள் இப்பகுதியின் கட்டுப்பாட்டை இழந்திருந்தனர்.[22] உமையர் அரசமரபின் ஓர் உறுப்பினரான அப்த் அர்-இரகுமானால் தன்னுடைய குடும்பம் ஒழித்துக் கட்டப்பட்ட நிழ்விலிருந்து தப்பித்துச் செல்ல முடிந்தது. 756இல் அல்-அந்தலுசில் (தற்கால எசுப்பானியா மற்றும் போர்ச்சுகல்) சுதந்திரமான அவர் ஆட்சியை நிறுவினார். உமையர்களின் கோர்தோபா அமீரகத்தை நிறுவினார்.[23]
756இல் அன் லுசான் கிளர்ச்சியில் அன் லுசானுக்கு எதிராக சீன தாங் அரசமரபுக்கு ஆதரவளிப்பதற்காக 4,000க்கும் மேற்பட்ட அரேபியக் கூலிப் படையினரையும் கூட அல்-மன்சூர் அனுப்பி வைத்தார். பொதுவாக "கருப்புக் கொடியினர்" என்று அழைக்கப்பட்ட அப்பாசியர்கள் தாங் அரசமரபின் நூல்களில் எயி தைசி, "கருப்பு அங்கி அணிந்த தசி" (黑衣大食) என்று அறியப்பட்டனர் ("தசி" என்ற சொல் பாரசீகச் செல்லான தசியிலிருந்து பெறப்பட்டதாகும், "அரேபியரைக்" குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல் இதுவாகும்).[nb 4] அல்-ரசீத் சீன தாங் அரசமரபுக்குத் தூதுக் குழுக்களை அனுப்பினார். நல்ல உறவு முறைகளை அவர்களுடன் நிறுவினார்.[25][26][27] போருக்குப் பிறகு இந்தத் தூதுக் குழுக்கள் சீனாவிலேயே தொடர்ந்து தங்கின.[28][29][30][31][32] கலீபா அருன் அல்-ரசீத் சீனாவுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்தினார்.[25] அப்பாசியக் கலீபாக்களிடமிருந்து சீன அரசவைக்கு அனுப்பப்பட்ட ஏராளமான தூதுக் குழுக்களானவை தாங்கின் பழைய நூல் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கியமான தூதுக் குழுக்கள் அல்-சபா, அல்-மன்சூர், மற்றும் அருன் அல்-ரசீத் ஆகியோர் அனுப்பிய தூதுக் குழுக்கள் ஆகும்.

762இல் அலீயின் ஒரு வழித் தோன்றலான அல்-நபஸ் அல்-சக்கியாவால் தலைமை தாங்கப்பட்டு ஹெஜாசில் நடந்த ஒரு கிளர்ச்சியை ஒடுக்கினார். சக்கியா தனது அலீயின் வழித் தோன்றல் என்ற தகுதியை அடிப்படையாகக் கொண்ட தலைமைத்துவத்துக்காக அப்பாசிய உரிமை கோரியவர்களுக்குச் சவால் விடுத்தவராக இருந்தார். இவ்வாறாக இவர் ஒரு கடினமான அரசியல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியவராக இருந்தார். இசா இப்னு மூசாவால் தலைமை தாங்கப்பட்ட ஓர் அப்பாசிய இராணுவத்தால் இவர் தோற்கடிக்கப்பட்டார்.[33] இந்த வெற்றிக்குப் பிறகு 762இல் தான் அல்-மன்சூர் ஒரு முறையான அப்பாசியத் தலை நகரத்தை டைகிரிசு ஆற்றில் அமைந்திருந்த பகுதியில் இறுதியாக உருவாக்கினார். இந்நகரமானது அதிகாரப் பூர்வமாக மதினத் அல்-சலாம் ("அமைதியின் நகரம்") என்று அழைக்கப்பட்டது.[34] இதற்கு முன்னர் ஒரு தலைநகரத்திற்காகப் பல்வேறு தளங்களை இவர் தொடர்ந்து பரிசீலித்து வந்தார். இதில் இவர் சில காலத்திற்குத் தலைநகராகப் பயன்படுத்திய அல்-அசீமியா[35] மற்றும் சில மாதங்களுக்கு இவர் பயன்படுத்திய அல்-ரூமியா (சிதேசிபோனின் சிதிலங்களுக்கு அருகில் அமைந்திருந்தது) ஆகிய நகரங்களும் உள்ளடங்கும்.[36] அல்-சபா அல்லது அல்-மன்சூர் ஆகியோரின் ஆட்சியின் கீழ் இப்பகுதியில் பல்வேறு பிற தளங்களும் கூட பகுதாதுவில் இவர் நிறுவுவதற்கு முன்னர் "தலைநகரங்களாகச்" சேவையாற்றியதாகத் தோன்றுகிறது.[7]
அல்-மன்சூர் நீதித் துறை நிர்வாகத்தை மையப்படுத்தினார். பிறகு அருன் அல்-ரசீத் தலைமை காதியின் நிலையத்தை இதை மேற்பார்வையிடுவதற்காக நிறுவினார்.[37] உமையா பேரரசானது பெரும்பாலும் அரேபியரைக் கொண்டதாக இருந்தது. எனினும், அப்பாசியர்கள் முற்போக்காக மதம் மாறிய முசுலிம்களை மேலும், மேலும் கொண்டவராக உருவாயினர். இதில் பல இனங்களில் ஒரே ஒருவராக அரேபியர் இருந்தனர்.[38] உமையர்களைப் பதவியில் இருந்து தூக்கி எறிந்ததில் பாரசீகர்களின் ஆதரவை அப்பாசியர்கள் கடுமையாகச் சார்ந்திருந்தனர்.[8] அல்-மன்சூர் அரேபியரல்லாத முசுலிம்களைத் தனது அரசவைக்கு வரவேற்றார். அரேபிய மற்றும் பாரசீகப் பண்பாடுகளை ஒன்றிணைக்க இது உதவி புரிந்த போதும், அவர்களது அரேபிய ஆதரவாளர்களில் பலர் விலகுவதற்கும் காரணமானது. உமையர்களுக்கு எதிராக அவர்களது யுத்தங்களில் அப்பாசியர்களுக்கு ஆதரவளித்து வந்த குராசானி அரேபியர்களை இதில் குறிப்பாகக் குறிப்பிடலாம்.[சான்று தேவை]
பொற்காலம் (775–861)
நீண்ட தூரம் விரிவடைந்திருந்த பேரரசின் இயல்பு மற்றும் அதன் முழுவதும் நடைபெற்ற வரம்புக்குட்பட்ட தொடர்புகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட அரசியல் சவால்களை ஒழுங்குபடுத்த தேவைப்பட்ட நிர்வாக மாற்றங்களை ஏற்படுத்த பல போட்டித் திறன் கொண்ட கலீபாக்கள் மற்றும் அவர்களது உயர் அதிகாரிகளின் கீழ் 8ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் (750-800) அப்பாசியத் தலைமைத்துவமானது கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.[39] அரசமரபின் இந்தத் தொடக்க காலத்தில் தான் குறிப்பாக அல்-மன்சூர், அருன் அல்-ரசீத் மற்றும் அல்-மமூன் ஆகியோரின் ஆட்சியின் போது கலீபகத்திற்கு நற்பெயரும், சக்தியும் உருவாக்கப்பட்டது.[8]

வாசிர் (விசியர், பொருள்: உயர் அதிகாரி) என்ற பதவியானது இக்காலத்தின் போது தான் உருவாக்கப்பட்டது. இது தொடக்கத்தில் ஒரு செயலாளரை ஒத்ததாக இருந்தது. ஆனால், அப்பாசியர்களுக்கு நெருக்கமான ஓர் ஈரானியக் குடும்பமான பர்மகியரின் ஆட்சிக் காலத்தின் கீழ் இப்பதவியானது சக்தி வாய்ந்ததாக உருவானது. அருன் அல்-ரசீத் அரசின் விவகாரங்களைப் பல ஆண்டுகளுக்கு இவர்களிடம் கொடுத்திருந்தார்.[41] உமையர்களுக்குக் கீழான அவர்களது நேரத்துடன் ஒப்பிடும் போது பல அப்பாசியக் கலீபாக்கள் ஓர் அதிகப் படியான பெயரளவு பங்கை வகிப்பதற்கு இது காரணமானது. உயரதிகாரிகள் பெரும் செல்வாக்கைச் செலுத்தத் தொடங்கினர். கலீபாவின் உயர்குடியினரின் பங்கானது மெதுவாக ஒரு பர்மகிய அரசுத் துறை அதிகார அமைப்பால் இடமாற்றப்பட்டது.[18] மேற்கே, அருன் அல்-ரசீத் இப்ராகிம் இப்னு அல்-அக்லபுக்கு ஒரு மரபு வழி அமீரகமாக இப்ரிகியா மாகாணத்தை (தற்கால துனீசியாவில் அமைந்துள்ளது) அளிக்க ஒப்புக் கொண்டார். அவர் அங்கு அக்லபு அரசமரபை நிறுவினார்.[42]
அருன் அல்-ரசீத்தின் ஆட்சிக்குக் கீழ் (ஆ. 786–809) அப்பாசியப் பேரரசு அதன் உச்ச நிலையை அடைந்தது.[43][44] இவரது தந்தை அல்-மகதி (ஆ. 775–785) பைசாந்தியர்களுடனான சண்டையை மீண்டும் தொடங்கினார். பைசாந்தியப் பேரரசி ஐரீன் அமைதி வேண்டாத் தொடங்கியது வரை அவரது மகன்கள் இச்சண்டையைத் தொடர்ந்தனர்.[15] பல்லாண்டு அமைதிக்குப் பிறகு முதலாம் நிகேபோரோசு ஒப்பந்தத்தை முறித்தார். 9ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் போது பல ஊடுருவல்களைப் பிறகு முறியடித்தார். இந்தத் தாக்குதல்கள் தாரசு மலைத் தொடருக்குள் வரை நடைபெற்றன. கிராசோசு யுத்தத்தில் ஒரு வெற்றி மற்றும் ரசீத்தாலேயே தலைமை தாங்கப்பட்ட 806ஆம் ஆண்டின் ஒரு பெரும் படையெடுப்புடன் முடிவடைந்தன.[45]
அருன் அல்-ரசீத்தின் கடற்படையும் கூட வெற்றிகரமானதாக நிரூபித்தது. சைப்பிரசைக் கைப்பற்றியது. குராசானில் ரபி இப்னு அல்-லய்த்தின் கிளர்ச்சி மீது கவனம் செலுத்த ரசீத் முடிவெடுத்தார். இந்நடவடிக்கைகளின் போது அங்கு இறந்தார்.[45] பைசாந்தியப் பேரரசானது சிரியா மற்றும் அனத்தோலியாவில் அப்பாசிய ஆட்சிக்கு எதிராகச் சண்டையிட்ட போது கலீபகத்தால் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளானவை குறைவாகவே இருந்தன. கவனமானது முதன்மையாக உள்நாட்டு விவகாரங்களுக்குள் மாற்றப்பட்டது. அப்பாசிய ஆளுநர்கள் பெருமளவுக்குத் தன்னாட்சியைச் செலுத்தினர். இந்த அதிகரித்து வந்த சக்தியைப் பயன்படுத்தித் தங்களது பதவிகளை மரபு வழியை அடிப்படையாகக் கொண்டதாக மாற்றத் தொடங்கினர்.[18]
உள்நாட்டு ரீதியாக அல்-ரசீத் தனது தந்தை அல்-மகதி பின்பற்றியதை ஒத்த கொள்கைகளையே பின்பற்றினார். இவரது அண்ணன் அல்-அதி சிறையில் அடைத்திருந்த பல உமையர்கள் மற்றும் அலீயின் வழித் தோன்றல்களை இவர் விடுதலை செய்தார். அனைத்து குறைசி அரசியல் குழுக்களுக்கும் பொது மன்னிப்பு அறிவித்தார்.[46] பகுதாது அலுவல்பூர்வத் தலைநகராகத் தொடர்ந்த அதே நேரத்தில் அருன் அல்-ரசீத் 796ஆம் ஆண்டு முதல் தன்னுடைய ஆட்சிக் காலம் முடியும் வரை ரக்காவில் தங்க முடிவெடுத்தார்.[42][nb 5] 802இல் அல்-ரசீத் ஒரு வழக்கத்திற்கு மாறான வாரிசுத் திட்டத்தை நிறுவினார். இதன் படி, இவரது இரண்டாவது மகனான அல்-அமீன் கலீபா என்ற பட்டத்தைப் பெறுவார். ஈராக்கு மற்றும் மேற்குப் பேரரசின் கட்டுப்பாட்டைப் பெறுவார். அதே நேரத்தில், இவரது முதல் மகனான அல்-மமூன் குராசானையும், பேரரசின் பெரும்பாலான கிழக்குப் பகுதிகளையும் ஆட்சி செய்வார் என்று குறிப்பிடப்பட்டது.[48] இன்னும் தொடர்ந்து தெளிவாகத் தெரியாத காரணங்களுக்காக 803இல்[49] இவர் தன்னுடைய கூட்டாளிகளுக்கு எதிராகத் திரும்பினார். பெரும்பாலான பர்மகியர்களைச் சிறையில் அடைக்கவோ அல்லது கொன்று விடவோ செய்தார். இவர் சார்பாக அவர்கள் நிர்வாகம் செய்து வந்தனர்.[50][49] இந்தத் திடீர் மற்றும் இரக்கமற்ற நடவடிக்கைக்கு என்ன காரணம் என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சம கால எழுத்தாளர்கள் மற்றும் பிந்தைய கால வரலாற்றாளர்களால் இந்நிகழ்வானது பெருமளவு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.[49][51]
பெருமளவிலான சண்டைகளானவை பைசாந்தியத்துடன் வெடித்தன. இவரது ஆட்சியின் கீழ் அப்பாசியப் பேரரசு அதன் உச்ச நிலையை அடைந்தது.[52][53] எனினும், தனக்குப் பின் ஆட்சிக்கு வருபவர்களின் ஆட்சிக் காலத்தைப் பிரித்து இருவரிடம் அளிக்கும் அல்-ரசீத்தின் முடிவானது பேரரசின் நீண்ட காலம் நீடிக்கும் தன்மைக்குச் சேதம் விளைவித்ததாக நிரூபணமானது.[54] 809இல் இவரது இறப்பிற்குப் பிறகு இவரது வாரிசு ஒப்பந்தமானது இறுதியாக வீழ்ச்சியடைந்தது. ஈராக்கில் அல்-அமீன் மற்றும் குராசானில் அல்-மமூன் ஆகியோருக்கு இடையிலான ஓர் உள்நாட்டுப் போரால் பேரரசானது இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பகுதாது மீதான அல்-மமூனின் படைகளின் ஒரு வெற்றிகரமான முற்றுகையுடன் இது முடிவுக்கு வந்தது.[55] 813இல் நகரம் வீழ்ந்த போது அல்-அமீன் பிடிக்கப்பட்டார். அல்-மமூனின் தளபதி தாகிர் இப்னு உசைனின் ஆணையில் கீழ் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். ஓர் அப்பாசிய ஆட்சியாளர் முதல் முறையாக பொது மக்கள் முன்னிலையில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதை இது குறித்தது. கலீபகத்தின் மதிப்புக்கு சரி செய்ய முடியாத சேதத்தை விளைவித்தது.[56]


அல்-மமூன் கலீபாவானார். 833இல் தன் இறப்பு வரை ஆட்சி செய்தார். தனது நிறுவப்பட்ட தளமான குராசானின் மெர்விலிருந்து இவர் தொடக்கத்தில் பேரரசை ஆட்சி செய்தார். அங்கு தான் இவருக்கு முதன்மையான ஆதரவானது கிடைக்கப் பெற்றது. ஆனால், ஈராக்கில் இந்த நீடித்திருந்த அதிருப்தி மற்றும் நிலையில்லாமையானது இவரது வெற்றியைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் மேற்கொண்ட சண்டையைத் தூண்டின.[57][58] ஓர் அப்பாசியக் குடும்ப உறுப்பினரை தனக்கு வாரிசாக அறிவிக்காமல் மாறாக 817இல் அலீயின் வழித் தோன்றலான அலி அல்-ரிதாவை இவர் அதிகாரப்பூர்வமாகத் தனது வாரிசாக அறிவித்தார். முசுலிம் ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கான நம்பிக்கையில் அநேகமாக இவர் இதைச் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், இந்தச் செயல் எதிர் வினையை ஏற்படுத்தியது.[59][60] இறுதியாக இத்தகைய கொள்கைகளிலிருந்து இவர் பின்வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். தன்னுடைய அரசவையைப் பகுதாதுவிற்கு மாற்றினார். ஆகத்து 819இல் பகுதாதுவுக்கு இவர் வந்தடைந்தார்.[61] இதற்குப் பிறகு இவரது ஆட்சிக் காலத்தின் எஞ்சிய காலமானது ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்தது. இதில் விதி விளக்குகளாக சில இருந்தன. அவற்றில் குர்ரமியர்களால் அசர்பைசானில் நடத்தப்பட்ட ஒரு கிளர்ச்சியும் அடங்கும். பைசாந்தியர்களால் ஆதரவு பெற்றிருந்த இக்கிளர்ச்சியானது 837 வரை தொடர்ந்தது.[45] 829 வாக்கில் சிரியா மீதான ஒரு பைசாந்தியத் தாக்குதலையும் கூட இவர் முறியடித்தார். இதைத் தொடர்ந்து அனத்தோலியாவுக்குள் பதில் தாக்குதல்களை இவர் நடத்தினார். 832இல் எகிப்தில் ஒரு கிளர்ச்சியையும் ஒடுக்கினார்.[45]
தன் அறிவுசார் ஆர்வங்கள் மற்றும் புரவலத் தன்மைக்காகவும் கூட அல்-மமூன் அறியப்பட்டார். பண்டைக் காலத்தின் அறிவியல் மற்றும் இலக்கிய நூல்களை அரபு மொழிக்கு மொழிபெயர்க்கும் அரசால் நிதி பெற்ற மொழி பெயர்ப்புச் செயல்பாடான "மொழிபெயர்ப்பு இயக்கமானது" இவருக்கு முன் ஆட்சியில் இருந்தவர்களின் கீழ் தொடங்கப்பட்டிருந்தது. இவரது ஆட்சிக் காலத்தின் போது அது மேலும் மேம்பட்ட நிலையில் செயல்படுத்தப்பட்டது. இவ்வியக்கத்தின் கவனக் குவியமானது அறிவியல் மற்றும் தத்துவம் குறித்த பண்டைக் கால கிரேக்கத்தின் நூல்களுக்கு மாற்றப்பட்ட போதும் இவ்வாறு செயல்படுத்தப்பட்டது.[62] சமயம் சார்ந்த விவகாரங்களில் தத்துவம் மீதான அல்-மமுனின் ஆர்வமானது இசுலாமிய எண்ணங்களின் பகுத்தறிவு பிரிவான முஃதசிலாவுக்கு ஆதரவளிக்க இவரைத் தூண்டியது. இதன் தாக்கத்தின் கீழ் 827இல் குர்ஆனின் உருவாக்கப்பட்ட செயல்பாடு என்ற போதனைக்கு இவர் அதிகாரப்பூர்வமாக ஆதரவளித்தார். 833இல் இவர் மேலும் சன்னி சமய அறிஞர்களான உலேமாக்கள் மீது இதை கட்டாயமாக்கச் செய்தார்.[63] இந்த சர்ச்சைக்குரிய மிக்னா என்று அறியப்படும் கொள்கையானது இறுதியாக 848ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. இறுதியாக சன்னி உலேமாக்களை இணங்கச் செய்வதில் இது தோல்வியடைந்தது. மாறாக பிற்காலத்தில் உலேமாக்கள் ஒரு மிகுந்த ஒன்றிணைந்த சமூக வகுப்பாக அவர்களது பார்வைகளும், ஆர்வங்களும் அனைத்து நேரங்களிலும் கலீபாவுடன் ஒன்றிணையாதவர்களாக மாறுவதற்குப் பங்களித்தது.[64]
அல்-அமீன் மற்றும் அல்-மமூனுக்கு இடையிலான உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து அப்பாசிய இராணுவத்தின் பாரம்பரிய மூல பலமாக இருந்த இராணுவப் பிரிவினரான குராசானியா மற்றும் அப்னா அல்-தௌலா ஆகியோர் மேலும் தொடர்ந்து சார்ந்திருக்கக் கூடியவர்களாக இல்லை. விசுவாசத்தை நன்முறையில் உறுதி செய்யக் கூடிய ஒரு புதிய வகை இராணுவத்தைச் சேர்க்க கலீபாக்கள் விரும்பினார்.[65] இச்செயல்பாடானது அல்-மமூனுக்குக் கீழ் தொடங்கியது. ஆனால், இவரது தம்பியும் இவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவருமான அல்-முதசீம் (ஆ. 833–842) தான் இச்செயல்பாட்டை மேலும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டதியதற்காக அறியப்படுகிறார். பல்வேறு புதிய மூலங்களிலிருந்து வீரர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், குறிப்பாக அல்-முதசீமுக்குக் கீழ், அரேபிய நூல்களில் "துருக்கியர்" (அத்ரக்) என்று குறிப்பிடப்படும் குழுவினரே இதில் மிக முக்கியமானவர்களாகத் திகழ்ந்தனர். நடு ஆசியாவைச் சேர்ந்த துருக்கிய மக்கள் குழுவினராக முதன்மையாக இவர்கள் தோன்றுகின்றனர்.[66][67] சில நவீன அறிஞர்கள் இவர்களை மம்லூக் என்று குறிப்பிடுகின்றனர். இச்சொல்லால் அறியப்பட்ட பிந்தைய அடிமை-வீரர்களின் முன்னோடிகளாக இவர்களைக் குறிக்கின்றனர். ஆனால், அவர்களின் சரியான முறைமை நிலையானது அறிஞர்களிடையே விவாதத்திற்குரிய ஒரு பொருளாக உள்ளது.[68][69][67] பலர், அநேகமாக பெரும்பாலானவர்கள், உண்மையில் விலைக்கு வாங்கப்பட்ட அல்லது பிடிக்கப்பட்ட அடிமைகளாக இருந்தனர்.[68][67] ஆனால், அவர்களுக்கு வழக்கமான சம்பளங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டவர்களாக இருந்திருக்க வேண்டும்.[68] எவ்வகையில் இருந்தாலும் பாரம்பரிய உயர் குடியினருடன் அரசியல் தொடர்புகளை இந்த வெளியாட்கள் கொண்டிருக்கவில்லை. இவ்வாறாக, அவர்களது விசுவாசமானது கலீபாவுக்கு மட்டுமே என்று இருந்தது.[65]

இந்தத் துருப்புக்கள் அநேகமாக கலீபகத்தின் முதல் நிலை நிறுத்தப்பட்ட இராணுவமாக இருந்தன.[72] கலீபாவுக்கு இராணுவ ஆதரவுக்கான ஒரு வலிமையான அடித்தளத்தைக் கொடுத்தன.[73] எனினும், புதிய அயல் நாட்டுத் துருப்புகள் தலைநகருக்குள் கொண்டு வரப்பட்டதானது தலைநகரின் குடிமக்கள் மற்றும் பிற பழைய உயர் குடியினருடன் பிரச்சினைகளை உருவாக்கியது. 836இல் பகுதாதுவிற்கு வடக்கே ஒரு வெளிப்புறத் தளத்தில் ஒரு புதிய தலைநகரான சாமர்ராவை நிறுவ அல்-முதசீம் முடிவு செய்ததற்கு முதன்மையான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.[73][72] புதிய தலைநகரானது கலீபாவின் இராணுவத்தைக் கொண்டிருந்தது. பெரிய அளவிலான புதிய அரண்மனைகளைக் கட்டமைப்பதற்கு தடையற்ற நிலையைக் கொடுத்தது. மிகவும் மேம்பட்ட நுணுக்கமான அரசவைப் பண்பாட்டின் ஒரு கவனக் குவியமாக உருவானது.[74][75]
அல்-முதசீமின் ஆட்சிக் காலமானது வலிமையான கலீபாக்களின் முடிவைக் குறித்தது. இவர் தனது தனி நபர் இராணுவத்தை மம்லூக்குகளைக் கொண்டு வலிமைப்படுத்தினார். காலதாமதமின்றி பைசாந்தியர்களுடனான போரை மீண்டும் தொடங்கினார். இவரது கப்பல் குழுவானது ஒரு புயலால் அழிக்கப்பட்ட போது கான்ஸ்டண்டினோபிலைக் கைப்பற்றும் இவரது முயற்சியானது தோல்வி அடைந்தாலும்,[76] இவரது இராணுவ இன்பப் பயணங்களானவை பொதுவாக வெற்றிகரமானவையாக இருந்தன. அமோரியம் நகரச் சூறையாடலில் ஒரு மிகப் பெரிய வெற்றியில் முடிவடைந்தன. எகிப்தில் தமியேத்தா நகரைச் சூறையாடியதன் மூலம் பைசாந்தியர்கள் எதிர் வினையாற்றினார். அல்-முதவக்கில் தனது துருப்புக்களை அனத்தோலியாவுக்கு மீண்டும் அனுப்பியதன் மூலம் எதிர் வினையாற்றினார். 863ஆம் ஆண்டு இறுதியாகக் கொல்லப்படும் வரை அவர்கள் சூறையாடினர்.[77]
அரசியல் சிதறல் (861–945)
ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பகுதாதுவில் இருந்து ஒரு மையப்படுத்தப்பட்ட ஆட்சி அமைப்பை ஒன்றிணைத்து வைத்திருக்க முடியாது என அப்பாசியர்கள் கண்டறிந்தனர். உரோமை விடப் பெரியதாக கலீபகம் வளர்ந்திருந்தது.[78] ஏற்கனவே குறிப்பிட்ட படி, அருன் அல்-ரசீத் இப்ரிகியா மாகாணத்தை அக்லபியரிடம் ஏற்கனவே கொடுத்திருந்தார். 909ஆம் ஆண்டு பாத்திமியரிடம் அது வீழும் வரை ஒரு சுயாட்சியுடையே திறை செலுத்திய அரசாக அவர்கள் இப்பகுதியை ஆண்டு வந்தனர்.[79] அல்-மமூனின் ஆட்சிக் காலத்தின் போது உள்நாட்டுப் போரில் அல்-மமூனின் தளபதியான தாகிர் இப்னு உசைன் ஈரான் மற்றும் பேரரசின் பெரும்பாலான கிழக்குப் பகுதிகளுக்கு அரசு நிர்வாகியாக 821ஆம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்டிருந்தார். அவரது வழித் தோன்றல்களான தாகிரியர்கள் கலீபாவுக்கு தொடர்ந்து விசுவாசமாக இருந்து அமீர் (தளபதி) என்ற பட்டத்தை மட்டுமே பயன்படுத்தி வந்த போதிலும் 873ஆம் ஆண்டு வரை குறிப்பிடத்தக்க சுயாட்சியுடன் இப்பதவியில் அவர்கள் தொடர்ந்து ஆண்டு வந்தனர். நிசாபூரில் இருந்த தங்களது தலை நகரத்திலிருந்து அரபு இலக்கியம் மற்றும் சன்னி சமய அறிஞர்களுக்கு முக்கியமான புரவலர்களாகத் திகழ்ந்தனர். மேலும், வேளாண்மையில் முக்கியமான முன்னேற்றங்களையும் கொண்டு வந்தனர்.[80] திரான்சாக்சியானாவில் புகாரா மற்றும் சமர்கந்தின் பாரசீக சாமனியர் உள்ளூர் ஆளுநர்களாகத் தொடக்கத்தில் தாகிரியருக்குக் கீழ் ஆண்டு வந்தனர். இப்பகுதியின் நகரங்கள் முக்கிய வணிக மையங்களாக வளர்ச்சியடைவதை அவர்கள் மேற்பார்வையிட்டனர். சீனா, நடு ஆசியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்குக்கு இடையிலான தொலை தூர வணிகம் மூலம் வருவாய் ஈட்டினர்.[81]

அல்-முதவக்கிலின் ஆட்சிக் காலமானது (ஆ. 847–861) கலீபாவின் மட்டு மீறிய செலவீனங்களுக்காக அறியப்படுகிறது. இராணுவத்தினர் மத்தியில் இவருக்கான ஆதரவு பலவீனமடைந்ததும் இதனுடன் சேர்ந்து கொண்டது. 861இல் ஒரு விருந்தில் துருக்கிய வீரர்களின் ஒரு குழுவால் இவர் கொல்லப்பட்டார்.[83] அரசவையில் அப்பாசிய இராணுவமானது மிகவும் நேரடியாக மற்றும் வன் முறை நிறைந்ததாகத் தலையிட்ட முதல் தருணம் இது தான். பின் வந்த ஆண்டுகளில் மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கு இது ஒரு முன்னுதாரணத்தை வைத்தது.[84]
சில நேரங்களில் "சாமர்ராவில் அராசகம்" என (861-870) என்று அறியப்படும் இதைத் தொடர்ந்து வந்த கால கட்டமானது நான்கு வெவ்வேறு கலீபாக்கள் வருவதையும், போவதையும் கண்டது. தங்களது அதிகாரத்தை மீண்டும் நிறுவ அவர்கள் ஒவ்வொருவரும் முயற்சித்த அதே நேரத்தில் இராணுவம் மற்றும் அரசியல் பிரிவினரின் தயவில் அவர்கள் இருந்தனர். வரி வசூலிப்பு காலம் தவறியது. அல்-முதவக்கிலின் முந்தைய செலவீனங்களுடன் சேர்த்து இது அரசை நிதிப் பற்றாக்குறை நிலைக்கு தள்ளியது. இது உட்சண்டையை அதிகரித்தது.[85] 865இல் சாமர்ராவின் துருக்கிய வீரர்கள் கலீபா அல்-முசுதைனைப் பதவியில் இருந்து தூக்கி எறிவதற்காக பகுதாது மீது முற்றுகையையும் கூட நடத்தினர். இதைத் தொடர்ந்த ஆண்டில் நகரம் வீழ்ந்த போது அவர்கள் அல்-முசுதைனுக்குப் பதிலாக அல்-முதாசுவைக் கலீபாவாகப் பதவியில் அமர்த்தினர்.[86] அல்-முதாசு 869இல் இதே துருக்கியர்களின் பிரிவினரால் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். அவருக்குப் பதிலாக அல்-முக்தாதி பதவியில் அமர வைக்கப்பட்டார். அல்-முக்தாதி 870இல் இதே போல் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். அல்-முக்தாதிக்குப் பிறகு அல்-முதாமித் கலீபாவாகப் பதவியில் அமர வைக்கப்பட்டார். அல்-முதாமிதால் இறுதியாக ஓரளவு ஒழுங்கைக் கொண்டு வர முடிந்தது. இதற்குப் பெரும்பங்கு தனது தம்பி அல்-முவபக்கிற்குத் தான் அல்-முதாமித் நன்றி கூற வேண்டும். இராணுவத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து பெரும்பாலான அரசாங்க விவகாரங்களை அல்-முவபக் நடத்தினார்.[87][88] இந்த நிலைத்தன்மையானது 869இல் வெடித்த சாஞ்ச் கிளர்ச்சியால் பிரச்சினைக்கு உள்ளாக்கப்பட்டது. ஈராக்கில் அப்பாசியக் கட்டுப்பாட்டின் மையத்துக்கு அச்சுறுத்தலாக இது விளங்கியது. 879இல் இதை ஒடுக்க வேண்டும் என்ற முடிவுடன் தொடங்கப்பட்ட ஒரு நடவடிக்கை வரை இந்த முக்கிய அச்சுறுத்தலானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.[89]

கலீபாவைத் தங்களது தலைவராகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டு பகுதாதுவுக்குத் திறையைப் பொதுவாக அனுப்பிய போதும் 870கள் வாக்கில் அகமது இப்னு துலுன் மற்றும் அவருடைய துலுனிய வழித் தோன்றல்களின் கீழ் எகிப்து சுயாட்சியுடையதாக உருவானது. ஒரு நேரத்தில் அவர்கள் சிரியா மற்றும் சசீராவின் (மேல் மெசொப்பொத்தேமியா) பகுதிகளையும் கூடக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 882இல் கலீபா அல்-முதமித் இப்னு துலுனின் அழைப்பின் பேரில் தன்னுடைய இருப்பிடத்தை எகிப்துக்கு நகர்த்தவும் கூட முயற்சித்தார் (ஆனால் தோல்வியடைந்தார்).
கிழக்கே அப்பாசிய இராணுவத்தில் முந்தைய வீரர்களாக இருந்த, சிசுதானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சபாரியர்கள் அங்கு உள்ளூர் அளவில் வலிமையான மனிதர்களாகத் தொடர்ந்து இருந்தனர். 854 முதல்[90] தாகிரியர்களுக்குச் சவால் விடுக்க அவர்கள் தொடங்கினர். 873இல் நிசாபூரை அவர்கள் கைப்பற்றினர். தாகிரிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தனர். 876இல் பகுதாதுவை நோக்கி அவர்கள் அணி வகுத்தனர். ஆனால், அல்-முவபக்கால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இரு பக்கத்தினரும் நிபந்தனைகளுக்கு உட்படும் நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர். சிசுதான், பாருசு, கெர்மான் மற்றும் குராசான் ஆகிய பகுதிகள் மீது ஆட்சி செய்ய அப்பாசியர்கள் சபாரியர்களுக்கு அனுமதியளித்தனர்.[91][92]
898இல் அல்-முதாதித் சபாரியர்களையும், சாமனியர்களையும் ஒருவரோடு ஒருவர் மோதவிட்டார். ஆனால், சாமனியர்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றவர்களாக வெளி வந்தனர். குராசானுக்குள் தங்களது கட்டுப்பாட்டை விரிவாக்க அவர்களால் முடிந்தது. அதே நேரத்தில், சபாரியர்கள் மேற்கொண்ட தெற்கில் தொடர்ந்து இருந்தனர். சாமனியர்கள் ஈராக்கில் என்றுமே அப்பாசியர்களுக்கு அச்சுறுத்தலாக இல்லை. ஆனால், தங்களுக்கு முன் ஆட்சி செய்த தாகிரியர்களைப் போல் அவர்கள் கலீபாவுக்கு அவ்வளவு நெருக்கமானவர்களாக இல்லை. நடைமுறையில் அவர்கள் கிட்டத்தட்ட முழுவதுமாக பகுதாதுவிலிருந்து சுதந்திரமாகச் செயல்பட்டவர்களாகத் திகழ்ந்தனர்.[93] தாகிரியர்களைக் காட்டிலும் சமயம் மற்றும் கலைகளுக்கு மேலும் பெரிய புரவலர்களாக அவர்கள் விளங்கினர். அவர்கள் இன்னும் தொடர்ந்து மரபு வழி சன்னி சித்தாந்தத்தைத் தங்களது சமயமாகப் பேணி வந்தனர். ஆனால், பாரசீக மொழியை ஊக்குவித்தன் மூலம் வேறுபட்டிருந்தனர்.[94]
9ஆம் நூற்றாண்டின் முடிவில் ஒரு குறுகிய கால அப்பாசிய அரசியல் மற்றும் இராணுவப் புத்தெழுச்சியானது இருந்தது. குறிப்பாக, கலீபாக்கள் அல்-முதாதித் (ஆ. 892–902) மற்றும் அல்-முக்தபி (ஆ. 902–908) ஆகியோரின் கொள்கைகளுக்குக் கீழ் இவ்வாறான நிலை இருந்தது.[95] அல்-முததித்தின் கீழ் தலை நகரமானது சாமர்ராவிலிருந்து பகுதாதுவுக்கு மீண்டும் மாற்றப்பட்டது.[96] 899ஆம் ஆண்டு முதல் கர்மதியர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளான பெதோயின் பழங்குடியினத்தவர்கள் நடத்தப்பட்ட ஊடுருவல்களானவை ஒரு மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்தின. ஆனால், முகம்மது இப்னு சுலய்மானால் தலைமை தாங்கப்பட்ட அப்பாசிய இராணுவமானது 904 மற்றும் 907 ஆகிய ஆண்டுகளில் அவர்களுக்கு எதிராகத் தாமதப்படுத்தும் நிலையை வென்றெடுத்தது.[97] 905இல் இதே தளபதி எகிப்து மீது படையெடுத்தார். பலவீனமடைந்திருந்த துலுனியர்களைப் பதவியில் இருந்து தூக்கி எறிந்தார். மேற்குப் பகுதி மீதான அப்பாசியக் கட்டுப்பாட்டை மீண்டும் நிறுவினார்.[98] 908இல் கலீபா அல்-முக்தபி இறந்த நேரம் வாக்கில் அப்பாசியப் புத்தெழுச்சியானது அதன் உச்சத்தை அடைந்திருந்தது. ஒரு வலிமையான மையப்படுத்தப்பட்ட அரசானது மீண்டும் அதே இடத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.[99]
அவரது இறப்பிற்குப் பிறகு, எனினும், அரசில் சண்டையிட்ட அதிகாரிகள் ஆதிக்கம் செலுத்தினர். அல்-முக்ததிருக்குக் (ஆ. 908–932) கீழ் அப்பாசிய அரசானது தொடர்ந்து அதன் அதிகாரம் மற்றும் செல்வத்தைப் பொது மக்கள் மத்தியில் செலுத்தியது. ஆனால், இந்நேரத்தின் அரசியல் மற்றும் நிதிக் கொள்கைகளானவை கலீபகத்தின் நீடித்திருக்கும் தன்மையை பின் வந்த காலத்திற்குச் சமரசம் செய்தன. அனுகூலங்களாக இக்தாக்களைக் (வரிப் பண்ணைகளின் வடிவத்தில் நிலங்களை அளித்தல்) கொடுக்கும் பழக்க வழக்கமானது இக்காலகட்டத்தில் தான் தொடங்கியது. கலீபகத்தின் சொந்த வரி வருவாய்களைக் குறைக்கும் விளைவை இது ஏற்படுத்தியது.[100]
909இல் முகம்மதுவின் மகள் பாத்திமாவின் வழித் தோன்றல்களுக்குத் தங்களது பூர்வீகத்தைத் தடயமிட்ட ஓர் இசுமாயிலி சியா பிரிவான பாத்திமிய அரசமரபிடம் வட ஆப்பிரிக்கா இழக்கப்பட்டது. அக்லபியரிடமிருந்து இப்ரிகியாவின் கட்டுப்பாட்டை பாத்திமியர் பெற்றனர். 969இல் இறுதியாக எகிப்தை வென்றனர். புசுதாத்துக்கு அருகில் தங்களது தலைநகரமான கெய்ரோவை அவர்கள் நிறுவினர்.[101][102] அந்த நூற்றாண்டின் முடிவு வாக்கில் சன்னி இசுலாம் மற்றும் அப்பாசியர்களுக்கு முதன்மையான அரசியல் மற்றும் சித்தாந்தச் சவால்களில் ஒன்றாக அவர்கள் திகழ்ந்தனர். இசுலாமிய உம்மாவின் (முசுலிம் சமூகம்) தலைமை பட்டத்து அதிகாரத்திற்கு அப்பாசியர்களுடன் அவர்கள் போட்டியிட்டனர்.[103][104][105] 12ஆம் நூற்றாண்டில் அவர்களின் வீழ்ச்சியுடன் மட்டுமே பாத்திமிய கலீபகத்தின் சவாலானது முடிவுக்கு வந்தது.[106]
கலீபா அல்-ரதிக்குக் கீழ் (ஆ. 934–941) தலைநகரத்திற்கு பணம் செலுத்த உள்ளூர் ஆளுநர்கள் மறுத்ததால் பகுதாதுவின் அதிகாரம் மேலும் குறைந்தது. பாத்திமியர் கைப்பற்றுவதற்கு முன்னர் எகிப்து மற்றும் சிரியாவை இக்சிதியர் ஆண்டு வந்தனர். ஈராக்கிலும் கூட பல ஆளுநர்கள் சொல் படி நடக்க மறுத்தனர். ஆளுநர்களுக்கு எதிராக இராணுவங்களை அனுப்ப கலீபாவால் இயலவில்லை.[107] அமீர் அல்-உமரா ("தளபதிகளின் தளபதி") என்ற புதிதாக உருவாக்கப்பட்ட பதவிக்குக் கீழ் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள வசித்தின் ஆளுநரான முகம்மது இப்னு ரைக்கை அழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு அல்-ரதி தள்ளப்பட்டார்.[107] இப்னு ரைக் கலீபாவின் சம்பளம் பெற்ற இராணுவத்தைக் கலைத்தார். அரசாங்கத்தின் அரசுத் துறை உட்கட்டமைப்பில் பெரும்பாலானவற்றைக் குறைத்தார். இதில் பாரம்பரிய விசியர் அலுவலகமும் அடங்கும். இவ்வாறாக, அப்பாசிய அரசின் அதிகாரத்திற்கான அடித்தளத்தில் பெரும்பாலானவற்றை நீக்கினார். இவர் 938ஆம் ஆண்டு பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். தொடர்ந்து வந்த ஆண்டுகளானவை அரசியல் அமளியில் முன்னேறாத நிலைக்கு இழுக்கப்பட்டன.[108]
அல்-முசுதக்பி 944 முதல் 946 வரை ஒரு குறுகிய ஆட்சிக் காலத்தைக் கொண்டிருந்தார். இக்காலகட்டத்தின் போது தான் தய்லத்தைச் சேர்ந்த புயியர்கள் என்று அறியப்பட்ட ஒரு பாரசீகப் பிரிவினர் அதிகாரத்திற்கு வந்தனர். பகுதாதுவில் இருந்த அரசுத் துறை நிர்வாகம் மீது கட்டுப்பாட்டைப் பெற்றனர். மிசுகவயின் வரலாற்றின் படி தங்களது ஆதரவாளர்களுக்கு இக்தாக்களை அளிக்க அவர்கள் தொடங்கினர். உள்ளூர் மயமாக்கப்பட்ட சமயச் சார்பற்ற கட்டுபாட்டின் இந்தக் காலமானது கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு நீடித்தது.[8][109]
ஈராக்கிற்கு வெளியே அனைத்து சுயாட்சியுடைய மாகாணங்களும் மெதுவாக மரபு வழி ஆட்சியாளர்கள், இராணுவங்கள் மற்றும் வருவாய்களை உடைய நடைமுறை ரீதியிலான தனி நாடுகளின் பண்பைப் பெற்றன. இவை கலீபாவின் மேலாண்மைக்குக் கீழ் பெயரளவில் மட்டுமே செயல்பட்டன. கருவூலத்திற்கு அளிக்கப்பட்ட எந்த ஒரு பங்களிப்பாலும் இது பிரதிபலிக்கப்படத் தேவையில்லை. சிந்துவின் கட்டுப்பாட்டைப் பெற்று, தங்களது தலைநகரான மன்சுராவிலிருந்து ஒட்டு மொத்த மாகாணத்தையும் ஆட்சி செய்த சூம்ரோ எமீர்கள் போன்றோரை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.[39] மிகப் பொதுவான பயன்பாட்டில் இருந்த அமீர் என்ற பட்டத்துக்கு மாறாக கசினியின் மகுமூது சுல்சுல்தான்தான் என்ற பட்டத்தைப் பயன்படுத்தினார். கலீபாவின் அதிகாரத்திலிருந்து கசனவியப் பேரரசு சுதந்திரமடைந்திருந்தது என்ற முக்கியத்துவத்தை இது வெளிக் காட்டியது. சன்னி மரபு வழி மற்றும் கலீபாவுக்குப் பெயரளவுக்கு அடி பணிந்தது ஆகியவற்றை மகுமூது பகட்டாரவாரமான நடையில் வெளிக் காட்டிக் கொண்ட போதும் இவ்வாறான நிலை இருந்தது. 11ஆம் நூற்றாண்டில் கலீபாக்களின் மதிப்பு இழக்கப்பட்டதானது தொடர்ந்தது. ஏனெனில், சில இசுலாமிய ஆட்சியாளர்கள் வெள்ளிக் கிழமை குத்பாவில் கலீபாவின் பெயரைக் குறிப்பிடவில்லை அல்லது அவரது பெயரைத் தங்களது நாணயங்களிலிருந்து நீக்கினர்.[39]
புயியரும், செல்யூக் கட்டுப்பாடும் (945–1118)
![]() | இக்sectionயைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |

புயிய அமீர்கள் சக்தியுடன் திகழ்ந்த போதும் பகுதாதுவில் ஒரு பெருமளவு சம்பிரதாய அரசவையை அப்பாசியர்கள் தக்க வைத்துக் கொண்டனர். இதை புயிய அரசுத் துறை அதிகாரியான இலால் அல்-சபி குறிப்பிட்டுள்ளார். பகுதாது மீது ஒரு குறிப்பிட்ட அளவு செல்வாக்கு, மேலும் சமய வாழ்க்கையையும் அவர்கள் தக்க வைத்துக் கொண்டனர். பகா அல்-தௌலாவின் ஆட்சியுடன் புயிய சக்தியானது பலவீனமடைந்து கொண்டிருந்த நேரத்தில் ஓரளவுக்கு வலிமையை மீண்டும் பெற கலீபகத்தால் முடிந்தது. எடுத்துக்காட்டாக, கலீபா அல்-காதிர் பகுதாது அறிக்கை போன்ற அறிவிப்புகளுடன் சியா பிரிவினருக்கு எதிராகச் சித்தாந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கலீபாக்கள் பகுதாதுவிலேயே ஒழுங்கை நிறுவினர். தலை நகரத்தில் பித்னாக்கள் (சண்டைகள்) பரவுவதைத் தடுக்க முயற்சித்தனர். அடிக்கடி அய்யருன் எனும் போர் வீரர்களின் குழுக்களுடன் போட்டியிட்டனர்.
புயிய அரசமரபானது பலவீனமடைந்து கொண்டிருந்த போது ஒரு வெற்றிடமானது உருவாக்கப்பட்டது. இது இறுதியாக செல்யூக்குகள் என்று அறியப்பட்ட ஒகுஸ் துருக்கியர்களின் ஓர் அரசமரபால் இறுதியாக நிரப்பப்பட்டது. 1055 வாக்கில் செல்யூக்குகள் புயியர் மற்றும் அப்பாசியர்களிடமிருந்து கட்டுப்பாட்டைப் பறித்தனர். தற்காலிக சக்தியைப் பெற்றனர்.[8] அமீரும் முன்னாள் அடிமையுமான பசசிரி பகுதாதுவில் 1056-57இல் சியா பாத்திமிய பதாகையைப் பயன்படுத்திய போது வெளிப்புற உதவியின்றி கலீபா அல்-கைமால் அவரைத் தோற்கடிக்க இயலவில்லை. செல்யூக் சுல்தானான துக்ரில் பகுதாதுவில் மீண்டும் சன்னி ஆட்சியை நிறுவினார். தன் அரசமரபுக்காக ஈராக்கை எடுத்துக் கொண்டார்.
இசுலாமிய சமூகத்தின பெயரளவு தலைவராக அப்பாசியக் கலீபா தொடர்ந்து திகழ்ந்தாலும் தங்களால் சரிக்குச் சமமாகச் செயல்பட இயலாத ஓர் இராணுவ சக்தியை மீண்டும் ஒரு முறை எதிர் கொள்ள வேண்டிய நிலைக்கு அப்பாசியர்கள் தள்ளப்பட்டனர். பின் வந்த தொடர்ச்சியான சுல்தான்களான அல்ப் அர்சலான் மற்றும் மாலிக் ஷா, மேலும் அவர்களது விசியரான நிசாம் அல்-முல்க் ஆகியோர் பாரசீகத்தில் தங்களது குடியிருப்பை அமைத்துக் கொண்டார். ஆனால், பகுதாதுவில் அப்பாசியர்கள் மீதான தங்களது அதிகாரத்தைக் கொண்டிருந்தனர். 12ஆம் நூற்றாண்டில் அரசமரபானது பலவீனமுடையத் தொடங்கிய நேரத்தில் அப்பாசியர்கள் முன்னை விடப் பெரிய சுதந்திரத்தை மீண்டும் ஒரு முறை பெற்றனர்.
கலீபக அரசின் புத்தெழுச்சி (1118–1258)

ஓர் இராணுவத்தைக் கட்டமைத்த முதல் கலீபாவாக கலீபா அல்-முசுதர்சித் (ஆ. 1118–1135) திகழ்ந்தார். 10ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு யுத்தத்தில் அதற்குத் தலைமை தாங்கிய முதல் கலீபாவானார்.[111] இவர் குர்திய மற்றும் அரேபிய பெதோயின் பழங்குடியினங்களை இராணுவத்தில் சேர்த்தார். பகுதாதுவின் காப்பரண்களை மீண்டும் உருவாக்கினார். இவரது முதன்மையான கவலை செல்யூக்கியர் கிடையாது. ஆனால், நாடு ஈராக்கில் கில்லாவைச் சேர்ந்த மசியதியர் ஆவர். இவர்களுடன் 1123ஆம் ஆண்டு யுத்தத்தில் சந்தித்தார். சுதந்திரத்திற்கான இவரது முயற்சி இறுதியாகத் தோல்வியடைந்தது. 1135ஆம் ஆண்டு ஒரு செல்யூக் இராணுவத்தால் இவர் தோற்கடிக்கப்பட்டார். இதற்குப் பிறகு சீக்கிரமே அரசியல் கொலை செய்யப்பட்டார்.[112]
அல்-முக்தபிக்குக் (ஆ. 1136–1160) கீழ் அவருடைய விசியர் இப்னு உபய்ராவின் உதவியுடன் ஒரு புதிய கலீபக அரசானது தோன்றத் தொடங்கியது.[113] ஈராக்கில் அதிகாரத்தை மீண்டும் நிலை நாட்டுவதில் இப்னு உபய்ரா கவனம் செலுத்தினார். அதே நேரத்தில், செல்யூக் பேரரசானது சிதைவடைந்த கொண்டிருந்தது. 1157ஆம் ஆண்டின் முற்றுகையின் போது செல்யூக்குகளுக்கு எதிராகப் பகுதாதுவை அப்பாசியர்கள் வெற்றிகரமாகத் தற்காத்தனர். பிறகு 1162இல் கில்லாவில் தங்களது மசியதிய எதிரிகளை வென்றனர்.[113] அல்-முக்தபியின் ஆட்சிக் காலத்தின் முடிவு வாக்கில் தெற்கே பசுராவில் இருந்து, வடக்கே மோசுலின் விளிம்புகள் வரை விரிவடைந்து இருந்த ஒரு அரசை பகுதாது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.[114] அயல் நாட்டு அரசமரபுகளுக்கு இரு நூற்றாண்டுக்கும் மேலாக அப்பாசியர்கள் அடி பணிந்து இருந்ததற்குப் பிறகு கலீபா அல்-முசுதன்சித் (ஆ. 1160–1170) அப்பாசிய நாணயங்களில் இருந்து செல்யூக் சுல்தான்களின் பெயர்களை நீக்கியதற்குப் பிறகு 1165இல் அவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வமாக சுதந்திரத்தை அறிவித்தார்.[115] தொடக்கத்தில் கலீபாக்கள் இன்னும் விசியர்களின் அதிகாரத்துக்கு முன் பலவீனமானவர்களாகத் திகழ்ந்தனர்.[115] பகுதாது பொது மக்களிடமிருந்து ஓரளவு ஆதரவைச் சேர்த்தது, மேலும் அயூப்பிய சுல்தான் சலாகுத்தீன் மற்றும் உரூம் செல்யூக் சுல்தான் இரண்டாம் கிலிச் அர்சலான் ஆகியோரிடம் இருந்து குறியீட்டு அளவிலான ஆதரவை வெளியிலிருந்து பெற அல்-முசுதாதியால் (ஆ. 1170–1180) முடிந்தது.[116]

கலீபா அல்-நசீரின் (ஆ. 1180–1225) நீண்ட கால ஆட்சியானது பிந்தைய அப்பாசிய அதிகாரத்தில் ஒரு முழு நிறைவான மாற்றத்தைக் குறித்தது. கலீபகத்தின் மதிப்பு பொது இடங்களில் வெளி காட்டப்படுவதற்கு புதிய ஆற்றலை இவர் ஊட்டினார். மிகவும் சக்தி வாய்ந்த அதிகாரிகளை நீக்கினார். ஈராக்கைத் தாண்டி இருந்த பகுதிகளுடன் தூதரக உறவு முறைகளில் ஈடுபட்டார். இசுபகான், அமாதான், கசுவின் மற்றும் சஞ்சன் உள்ளிட்ட மேற்கு ஈரானின் முந்தைய செல்யூக்கிய நிலப்பரப்புகள் மீது தனது கட்டுப்பாட்டை விரிவாக்கினார்.[118] வெளி நாடுகளில் இருந்த முசுலிம் ஆட்சியாளர்கள் மத்தியில் தன்னுடைய செல்வாக்கை அதிகரிக்க இவர் விரும்பினார். பெரும்பாலும் சூபித்துவத்தால் அகத்தூண்டுதல் பெற்ற, இவர் தலைமை தாங்கிய புதுவ்வா சகோதரத்துவத்தின் மூலம் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.[119] கலீபா அல்-முசுதன்சீரின் (ஆ. 1226–1242) ஆட்சிக் காலத்தின் கீழ் அப்பாசிய அரசானது குறிப்பிடத்தக்க நிலைத் தன்மையை எட்டியது. பல முந்தைய கொள்கைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டன.[120] 1234ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட முசுதன்சிரியா மதராசாவை இவர் கட்டினார். அனைத்து நான்கு சன்னி மதப்புகள் (நீதித்துறைப் பள்ளிகளை) கற்றுக் கொடுத்த முதல் மதராசாவாகவும், அப்பாசிய கலீபாவால் உருவாக்கப்பட்ட முதல் மதராசாவாகவும் இது திகழ்ந்தது.[121]
மங்கோலியப் படையெடுப்பும், முடிவும்

1206இல் செங்கிஸ் கான் நடு ஆசியாவின் மங்கோலியர்கள் மத்தியில் ஒரு சக்தி வாய்ந்த அரசமரபை நிறுவினார். 13ஆம் நூற்றாண்டின் போது இந்த மங்கோலியப் பேரரசானது ஐரோவாசியாவின் நிலப்பரப்பில் பெரும்பாலானவற்றை வென்றது. இதில் கிழக்கே சீனா மற்றும் மேற்கே பழைய இசுலாமியக் கலீபகத்தின் (மேலும் கீவ ருஸ்) பெரும்பாலான பகுதிகளில் உள்ளடங்கும். 1258இல் பகுதாதுவை குலாகு கான் அழித்ததானது பாரம்பரியமாக இசுலாமியப் பொற்காலத்தின் தோராயமான முடிவாகப் பார்க்கப்படுகிறது.[122]
மங்கோலியர்கள் சூறையாடியதற்குப் பிறகு மசூதிகள், அரண்மனைகள், நூலகங்கள் மற்றும் மருத்துவமனைகளை அழித்தனர் என சமகால நூல்கள் குறிப்பிடுகின்றன. 36 பொது நூலகங்களைச் சேர்ந்த விலை மதிப்பற்ற நூல்கள் கிழித்தெறியப்பட்டன. சூறையாடியவர்கள் நூல்களின் தோல் அட்டைகளைக் காலணிகளாகப் பயன்படுத்தினர்.[123] பல தலைமுறைகளாக பணி செய்து உருவாக்கிய பெரும் கட்டடங்கள் எரித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. ஞான வீடு (பகுதாதுவின் பெரும் நூலகம்) எனும் நூலகமானது மருத்துவம் முதல் வானியல் வரையிலான தலைப்புகளில் எண்ணிலடங்கா விலை மதிப்பற்ற வரலாற்று ஆவணங்கள் மற்றும் நூல்களைக் கொண்டிருந்தது. இவை அழிக்கப்பட்டன. கொல்லப்பட்ட அறிவியலாளர்கள் மற்றும் தத்துவவாதிகளின் இரத்தத்தால் தைகிரிசு ஆறானது சிவப்பு நிறமாக ஓடியதாகச் சிலர் கூறினர்.[124][125] குடிமக்கள் தப்பித்து ஓட முயற்சித்தனர். ஆனால், மங்கோலியர்களால் அவர்கள் இடை மறித்துத் தடுக்கப்பட்டனர். மங்கோலியர்கள் அவர்களைப் பெருமளவில் கொன்றனர். ஒருவரைக் கூட விடவில்லை. குழந்தைகளையும் கூட விடவில்லை.
கலீபா அல்-முசுதசீம் பிடிக்கப்பட்டார். அவரது குடிமக்கள் கொல்லப்படுவதையும், அவரது கருவூலம் சூறையாடப்படுவதையும் நேரில் காணுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். முரண் தொடையாக, முகம்மதுவின் சிறிய தந்தையாரான அப்பாசு இப்னு அப்த் அல்-முத்தலிப்பின் ஒரு நேரடி வழித்தோன்றலும்,[126] பகுதாதுவில் கடைசியாக ஆட்சி செய்யும் அப்பாசியக் கலீபாவுமான அல்-முசுதசீமின் இரத்தமானது தரையில் சிந்தினால் ஒரு பேரழிவு ஏற்படுமென மங்கோலியர்கள் அஞ்சினர். கர்பலா யுத்தத்தில் இமாம் உசைனின் இறப்புக்குப் பிறகு இத்தகைய எந்த ஓர் அழிவும் ஏற்படவில்லை என பாரசீகத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர். எவ்வாறாயினும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் இரத்தம் தரையில் படுவதைத் தடுத்த ஒரு மங்கோலிய நம்பிக்கையின் படியும், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் அல்-முசுதசீமை ஒரு போர்வையில் சுற்றி அதன் மேல் குதிரைகளை ஓட விட்டதன் மூலம் 20 பெப்பிரவரி 1258 அன்று அவரைக் குலாகு கொன்றார். கலீபாவின் நெருங்கிய குடும்பத்தினரும் கூட கொல்லப்பட்டனர். இதில் விதி விலக்காக இருந்தவர்கள் மங்கோலியாவுக்கு அனுப்பப்பட்ட அவரது கடைசி மகனும், குலாகுவின் அந்தப்புரத்தில் ஓர் அடிமையான ஒரு மகளும் ஆவர்.[127]
கெய்ரோவின் அப்பாசியக் கலீபகம் (1261–1517)
எகிப்தைச் சேர்ந்த பிந்தைய அயூப்பிய சுல்தான்கள் மம்லூக் என்று அழைக்கப்படும் அடிமைகளிலிருந்து ஓர் இராணுவத்தைக் கட்டமைத்தனர். 1250இல் ஓர் அரசியல் மற்றும் இராணுவப் பிரச்சினையின் போது மம்லூக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். எகிப்தின் மம்லுக் சுல்தானகம் என்று தற்போது அறியப்படும் அரசை நிறுவினர்.[128] 1258இல் பகுதாதுவின் அழிவைத் தொடர்ந்து மற்றும் எகிப்தின் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படாத புதிய அரசுக்கு அரசியல் முறைமைத் தன்மையைக் கொடுக்கும் ஒரு முயற்சியாகவும் மம்லூக் ஆட்சியாளரான பைபர்சு அப்பாசியக் குடும்பத்தின் ஓர் எஞ்சிய உறுப்பினரைக் கெய்ரோவில் வந்து அரசை நிறுவுமாறு 1260-1261இல் அழைப்பு விடுத்தார். புதிய கலீபாவாக இரண்டாம் அல்-முசுதன்சீர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முந்தைய கலீபா அல்-முசுதன்சீரின் ஒரு சகோதரர் ஆவார்.[129][130] 1262இல் பகுதாதுவை மங்கோலியர்களிடம் இருந்து மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ஒரு சிறிய இராணுவத்திற்குத் தலைமை தாங்கிச் சென்ற நேரத்தில் இவர் காணாமல் போனார். பைபர்சு இறுதியாக அவருக்குப் பதிலாக முதலாம் அல்-அக்கீமை கலீபாவாக அறிவித்தார். இவர் அப்பாசியக் குடும்பத்தின் மற்றொரு உறுப்பினர் ஆவார். அலெப்போவில் இவர் கலீபாவாக அறிவிக்கப்பட்டார்.[129][131]
இதற்குப் பிறகு கெய்ரோவில் இருந்த அப்பாசியக் கலீபாக்கள் பெரும்பாலும் ஒரு பெயரளவு கலீபாக்களாகவே தொடர்ந்தனர். ஆனால், இருந்த போதிலும், மம்லூக் சுல்தானகத்திற்குள் முக்கியமானவர்களாகத் திகழ்ந்தனர். மம்லூக்குகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மதிப்பை இவர்கள் வழங்கினர்.[129][132] 14ஆம் நூற்றாண்டு வரை பிற முசுலிம் ஆட்சியாளர்களுக்கும் கூட இவர்கள் முக்கியமானவர்களாகத் தொடர்ந்தனர். எடுத்துக்காட்டாக, தில்லி சுல்தான்கள், முசாபரிய சுல்தான் முகம்மது, சலயிரிய சுல்தான் அகமது, மற்றும் உதுமானிய சுல்தானான முதலாம் பயேசித் ஆகிய அனைவரும் கலீபாவிடம் இருந்து மதிப்பைப் பெற விரும்பினர் அல்லது பெயரளவுக்கு அவருடன் கூட்டணியில் இணைந்தவர்களாகத் தங்களை அறிவித்துக் கொண்டனர்.[133] கலீபா அல்-முசுதைன் கெய்ரோவில் சுல்தானாக 1412இல் ஒரு குறுகிய ஆறு மாதங்களுக்கு ஆட்சியும் கூட செய்தார்.[134]
எனினும், 15ஆம் நூற்றாண்டின் போது கலீபாவின் முக்கியத்துவமானது குறைந்தது.[134] கெய்ராவில் கடைசி அப்பாசியக் கலீபாவாக மூன்றாம் அல்-முதவக்கில் திகழ்ந்தார். 1516இல் மம்லூக்குகளை உதுமானிய சுல்தான் இரண்டாம் செலீம் தோற்கடித்த போது இவர் பதவியில் இருந்தார். உதுமானியர்கள் 1517இல் எகிப்தை வென்றனர். மம்லூக் சுக்தானகத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். எகிப்துக்குள் அணி வகுப்பதற்கு முன்னர் 1516இல் இரண்டாம் செலீம் மூன்றாம் அல்-முதவக்கிலுடன் அலெப்போவில் சந்தித்தார். கலீபா பிறகு உதுமானியத் தலைநகரான கான்ஸ்டண்டினோபிலுக்கு (தற்கால இசுதான்புல்) அனுப்பி வைக்கப்பட்டார். அப்பாசியக் கலீபகமானது இவ்வாறாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.[129][135] ஒரு "கலீபகம்" என்ற கருத்துருவானது இறுதியாக தெளிவற்ற ஒன்றாக மாறியது. இது பிந்தைய முசுலிம் ஆட்சியாளர்கள் மற்றும் சிந்தனைவாதிகளால் அரசியல் அல்லது சமயக் காரணங்களுக்காக அவ்வப்போது மீண்டும் பயன்படுத்தப்பட்டது.[136] அன்றிலிருந்து மேற்கு ஆசியா மற்றும் நடுநிலக் கடல் பகுதியில் மிக சக்தி வாய்ந்த முசுலிம் ஆட்சியாளர்களாகத் திகழ்ந்த உதுமானியச் சுல்தான்கள் 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முன்னர் "கலீபா" என்ற பட்டத்தைப் பயன்படுத்தவேயில்லை. அதற்குப் பிறகும் தெளிவற்ற மற்றும் தொடர்ச்சியற்ற முறையிலேயே பயன்படுத்தினர்.[137] மூன்றாம் அல்-முதவக்கில் கலீபா பட்டத்தை உதுமானியச் சுல்தானுக்கு அலெப்போவில் நடந்த அவர்களது சந்திப்பின் போது "இடம் மாற்றினார்" என்ற கோரலானது 19ஆம் நூற்றாண்டில் கவனமாகக் கூறப்பட்ட ஒரு கதை என்று குறிப்பிடப்படுகிறது. சமகால நூல்களால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.[129][137]
Remove ads
பண்பாடு
இசுலாமியப் பொற்காலம்

பொ. ஊ. 1258இல் பகுதாதுவை மங்கோலியர்கள் வென்றது வரை நீடித்திருந்த அப்பாசிய வரலாற்றுக் காலமானது இசுலாமியப் பொற்காலமாகக் கருதப்படுகிறது.[140] 8ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அப்பாசியக் கலீபகம் ஆட்சிக்கு வந்தது மற்றும் அவர்களது தலைநகரம் திமிஷ்குவிலிருந்து பகுதாதுவுக்கு மாற்றப்பட்டது ஆகியவற்றால் இசுலாமியப் பொற்காலம் தொடங்கி வைக்கப்பட்டது என்று கருதப்படுகிறது[141]. "ஒரு தியாகியின் இரத்தத்தை விட ஓர் அறிஞனின் மையானது மிகவும் புனிதமானது" போன்ற குர்ஆனிய வழிகாட்டுதல்கள் மற்றும் ஹதீஸ் ஆகியவற்றால் அப்பாசியர்கள் தாக்கம் பெற்றிருந்தனர். அறிவின் முக்கியத்துவத்திற்கு ஆதரவளித்தனர். அப்பாசியர்கள் அறிவுக்கு மதிப்பளித்தது மற்றும் பகுதாதுவில் ஞான வீடு போன்ற பெரும் நூலகத்தை நிறுவியது ஆகியவற்றால் அறிவியல், தத்துவம், மருத்துவம் மற்றும் கல்வி[141] ஆகியவற்றுக்கான ஒரு சிந்தனை இன்ப மையமாக முசுலிம் உலகமானது இந்தக் காலகட்டத்தின் போது உருவானது. பகுதாதுவில் பெரும் நூலகத்தில் முசுலிம் மற்றும் முசுலிம் அல்லாத அறிஞர்கள் ஆகிய இரு பிரிவினரும் உலகின் அனைத்து அறிவையும் அரபி மொழிக்கு மொழி பெயர்த்து சேகரிக்க விரும்பினர்.[141] மொழி பெயர்க்கப்பட்டிருக்காவிட்டால் தொலைந்து போயிருக்க வேண்டிய பண்டைக் காலத்தின் பல செவ்வியல் நூல்களானவை அரபி மற்றும் பாரசீக மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டன. பின்னர் அவற்றிலிருந்து துருக்கிய மொழி, ஹீப்ரு மற்றும் இலத்தீன் மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டன.[141] இந்த காலகட்டத்தின் போது முசுலிம் உலகமானது பண்பாடுகளின் ஒரு கலனாக இருந்தது. அது உரோமானிய, சீன, இந்திய, பாரசீக, எகிப்திய, வட ஆப்பிரிக்க, பண்டைக் கால கிரேக்க மற்றும் நடுக் கால கிரேக்க நாகரிகங்களிலிருந்து பெறப்பட்ட அறிவைச் சேகரித்து, ஒருங்கிணைத்து, குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றியது.[141] "வானியல், இரசவாதம், கணிதம், மருத்துவம், ஒளியியல் மற்றும் பிற உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவிலும் கலீபகத்தின் அறிவியலாளர்கள் அறிவியல் முன்னேற்றத்தின் முன்னிலையில் இருந்தனர்" என ஹஃப் என்ற வரலாற்றாளார் குறிப்பிடுகிறார்.[142]
இலக்கியம்

இசுலாமிய உலகத்தைச் சேர்ந்த மிகவும் நன்றாக அறியப்பட்ட புனைகதையானது ஆயிரத்தொரு இரவுகள் ஆகும். நாட்டுப்புற புனை கதைகள், தொன்மக் கதைகள் மற்றும் நீதிக் கதைகளின் ஒரு தொகுப்பு இதுவாகும். இது முதன்மையாக அப்பாசிய சகாப்தத்தின் போது சேகரிக்கப்பட்டது. ஒரு சாசானிய சகாப்த பாரசீக மூலப் படிவத்தின் ஓர் அரேபிய மொழி பெயர்ப்பில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு தொகுப்பாக இது பதிவிடப்பட்டுள்ளது. இந்திய இலக்கியப் பாரம்பரியங்களில் அநேகமாக இக்கதைகள் அதன் பூர்வீகத்தைக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அரேபிய, பாரசீக, மெசொப்பொத்தேமிய மற்றும் எகிப்திய நாட்டுப் புறக் கதைகள் மற்றும் இலக்கியத்தைச் சேர்ந்த கதைகளானவை பின்னர் இதில் சேர்க்கப்பட்டன. இந்தக் கதைகளானவை 10ஆம் நூற்றாண்டின் போது வடிவம் பெற்றன என்று நம்பப்படுகிறது. 14ஆம் நூற்றாண்டு வாக்கில் இது அதன் இறுதி வடிவத்தை அடைந்தது. கதைகளின் எண்ணிக்கை மற்றும் வகையானது ஒரு கையெழுத்துப் பிரதியிலிருந்து மற்றொரு கையெழுத்துப் பிரதிக்கு மாறுபடுகிறது.[143] ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்படும் போது அனைத்து அரேபிய கனவுருப்புனைவு கதைகளும் பொதுவாக "அரேபிய இரவுகள்" என்றே அழைக்கப்படுகின்றன. ஆயிரத்தொரு இரவுகள் நூலில் இவை இடம் பெற்றிருந்தாலும், இடம் பெற்றிருக்காவிட்டாலும் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.[143] 18ஆம் நூற்றாண்டில் முதலில் அந்தோயின் காலன்டால் இது மொழி பெயர்க்கப்பட்டதிலிருந்து மேற்கு உலக நாடுகளில் இக்கதைகளானவை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவையாக உள்ளன.[144] இதையொத்த பல கதைகள் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக, பிரான்சு நாட்டில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளன.[145] இக்கதைகளில் உள்ள பல்வேறு கதாபாத்திரங்கள் மேற்குலகப் பண்பாட்டில் பண்பாட்டுச் சின்னங்களாக உருவாகியுள்ளன. இதில் அலாவுதீன், சிந்துபாத் மற்றும் அலி பாபா ஆகிய கதாபாத்திரங்களைக் குறிப்பிடலாம்.
காதல் குறித்த இசுலாமியக் கவிதைக்கு ஒரு பிரபலமான எடுத்துக்காட்டானது லைலாவும் மஜ்னுனும் ஆகும். இது உண்மையில் ஓர் அரபு மொழிக் கதையாகும். இது பாரசீக, அசர்பைசானி மற்றும் துருக்கிய மொழிகளில் ஈரானிய, அசர்பைசானிய மற்றும் பிற கவிஞர்களால் மேம்படுத்தப்பட்டது.[146] பிந்தைய காலத்தில் எழுதப்பட்ட ரோமியோ ஜூலியட்டைப் போலவே அழியாத காதலின் ஒரு சோகமான கதை இதுவாகும்.[சான்று தேவை]
அரபுக் கவிதையானது அதன் உச்சபட்ச உயரத்தை அப்பாசிய சகாப்தத்தின் போது அடைந்தது. குறிப்பாக, மைய அதிகாரம் இழக்கப்படுவதற்கு முன்னரும், பாரசீக அரசமரபுகளின் எழுச்சிக்கு முன்னரும் அடைந்தது. அபு தம்மம் மற்றும் அபு நுவாஸ் போன்ற எழுத்தாளர்கள் 9ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தின் போது பகுதாதுவில் கலீபாவின் அரசவையுடன் நெருக்கமான தொடர்புடையவர்களாக இருந்தனர். அதே நேரத்தில், அல்-முதனப்பி போன்ற பிறர் தங்களது சன்மானங்களை மாகாண அரசாங்கங்களில் இருந்து பெற்றனர்.
அருன் அல்-ரசீத்தின் கீழ் பகுதாதுவானது அதன் புத்தக விற்பனை அங்காடிகளுக்காகப் புகழ் பெற்றிருந்தது. காகிதத்தின் தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு புத்தக விற்பனை அங்காடிகள் பெருமளவுக்கு அதிகரித்தன. 751இல் தலாசு யுத்தத்தில் அரேபியர்களால் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களில் சீன காகிதத் தயாரிப்பாளர்களும் இருந்தனர். போர்க் கைதிகளாக அவர்கள் சமர்கந்துவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதல் அரபு காகித ஆலையைக் கட்டமைக்க அவர்கள் உதவி புரிந்தனர். காலப்போக்கில் எழுதுவதற்கான பொருளாக காகிதத் தோலை காகிதமானது இடம் மாற்றியது. நூல்களின் உற்பத்தியானது பெருமளவுக்கு அதிகரித்தது. மேற்குலகில் அச்சு எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் பெருமளவுக்கு ஒப்பிடக் கூடியதாக இந்த நிகழ்வுகள் கல்வி மற்றும் சமூக தாக்கத்தை ஏற்படுத்தின. தொடர்பு மற்றும் ஆவணப்படுத்துவதற்கு காகிதம் உதவி புரிந்தது. தொழில்கள், வங்கியியல் மற்றும் பொதுப்பணித் துறைக்கு ஒரு புதிய செம்மையாக்கம் மற்றும் சிக்கலான அமைப்பையும் கூட இது கொடுத்தது. 794இல் சபா அல்-பர்மக் பகுதாதுவில் முதல் காகித ஆலையைக் கட்டமைத்தார். அங்கிருந்து தொழில் நுட்பமானது பரவியது. அரசாங்க ஒப்பந்தங்களில் இந்தக் காகிதத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவை கலீபா அருனுக்கு இருந்தது. ஏனெனில், காகிதத்தின் மீது பதியப்பட்ட எதுவும் எளிதாக மாற்றப்படவோ அல்லது நீக்கப்படவோ இயலாததாக இருந்தது. இறுதியாக, பகுதாதுவின் வணிக மாவட்டத்தில் ஒரு முழு வீதியும் காகிதம் மற்றும் நூல்களை விற்பதற்கென்றே அர்ப்பணிக்கப்பட்டது.[147]
தத்துவம்
"இசுலாமியத் தத்துவம்" என்பதற்கான பொதுவான வரையறைகளில் ஒன்று "இசுலாமியப் பண்பாடு வரைச் சட்டத்திற்குள் உருவாக்கப்பட்ட தத்துவ பாணி" என்பதாகும்.[148] இந்த வரையறையில் இசுலாமியத் தத்துவமானது சமய விவகாரங்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டிய தேவையுள்ளதாகவோ அல்லது முழுமையாக முசுலிம்களால் உருவாக்கப்பட்டதாகவவோ இருக்க வேண்டிய தேவை இல்லை.[148] பண்டைக் கால கிரேக்கர்களிடமிருந்து இசுலாமிய உலகம் மற்றும் மேற்குலகத்திற்கு கற்றலை கை மாற்றியதில் ஒரு முக்கிய படியாக அரிசுட்டாட்டில் குறித்த இவர்களது நூல்கள் விளங்கின. இவை அடிக்கடி தத்துவவாதியின் கருத்துக்களைச் சரி செய்தன. இஜ்திகாது வழியில் ஓர் உயிரோட்டமான விவாதத்திற்கு ஊக்குவித்தன. இவர்கள் தாக்கத்தை ஏற்படுத்திய தங்களது சொந்த தத்துவ நூல்களையும் கூட எழுதினர். நடுக் காலங்களின் போது கிறித்தவ மெய்யியலுக்குள் இவர்களது சிந்தனைகளானவை இணைக்கப்பட்டன. குறிப்பாக, தாமஸ் அக்குவைனசால் இவை இணைக்கப்பட்டன.[149]
அல்-கிந்தி, அல்-பராபி, மற்றும் இப்னு சீனா ஆகிய மூன்று ஊக அடிப்படையிலான சிந்தனையாளர்கள் அரிசுட்டாட்டிலியம் மற்றும் புது பிளாட்டோயியத்தை இசுலாம் வழியாக அறிமுகப்படுத்தப்பட்ட பிற கருத்துக்களுடன் இணைத்தனர். அவிசென்னியம் எனும் தத்துவமானது இதன் விளைவாக பின்னர் நிறுவப்பட்டது. அல்-சகிசு மற்றும் இபின் அல் ஹய்தம் (அல்கசன்) உள்ளிட்ட பிறர் தாக்கத்தை ஏற்படுத்திய அப்பாசியத் தத்துவவாதிகள் ஆவர்.
Remove ads
பெண்கள் நிலை
அப்பாசியக் கலீபகத்தில் சமூகத்தின் மத்திய விவகாரங்கள் சார்ந்த எந்த செயற்களங்களிலும், செயற்றுறைகளிலும் பெண்கள் இடம் பெறவில்லை.[150] அப்பாசியக் கலீபகப் பெண்கள் தனித்தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டனர். பிற நாட்டவர் மீது கொண்ட வெற்றிகள், அப்பாசியக் கலீபக உயர்ந்தோர் குழுவிற்கு மகத்தான செல்வத்தையும், பெரும் எண்ணிக்கையிலான அடிமைகளையும் கொண்டு வந்தன. அந்த அடிமைகளில் பெரும்பான்மையானவர்கள் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.[151] அவர்களில் பலர் தோற்கடிக்கப்பட்ட சாஸானிய (Sassanian) மேல்தட்டு சார்பாளர்களாகவோ அல்லது ஹரேம் உறுப்பினர்களாகவோ இருந்தனர்.[152]
பிரிவினைவாதிகள் - அரச வம்சங்கள் - பின்னவர்கள்
அப்பாசியக் கலீபகம் மற்ற கலீபகங்களிலிருந்து மாறுபட்டது. இது மற்ற கலீபகங்கங்களைப் போன்று மாறாத எல்லைகளையும், இஸ்லாம் போன்ற பரிமாணங்களையும் பெற்றிருக்கவில்லை. குறிப்பாக, அப்பாசியக் கலீபகத்தின் மேற்குப் பகுதியில், பல சிறிய கலீபகங்கங்கள் இருந்தன. அவை அப்பாசியக் கலீபகத்துடன் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருந்தன.[8] தங்கள் பொது புவியியல் இருப்பிட அமைப்பின் அடிபடையில் அப்பாசியக் கலீபகத்திலிருந்து பிரிந்து வளர்ந்த இஸ்லாமிய வாரிசுகளின் பட்டியல்
- பெரும்பாலும் குறிப்பிட்ட பேரரசின் ஆட்சிக் காலத்தில் மற்றொரு பேரரசின் ஆட்சிக் காலம் போது மேற்பொருந்தும் வகையில் உள்ளன. இந்நிலையில் ஒரு வேலையாள் அல்லது அடிமை கிளர்ந்தெழுந்து ஆட்சியைக் கைப்பற்றி தன்னுடைய ஆட்சியை நிறுவுகிறார்.
- போட்டிக் காலகட்டங்களில் ஆதிக்கம் செலுத்தும் சக்தி தெளிவற்றதாக இருப்பின் அவை இடைவெளிகளால் குறிக்கப்பட்டிருக்கும்.
- வடமேற்கு ஆப்பிரிக்கா: இத்ரிசிட்கள் (Idrisids) (788-974) → அல்மொரோவிட்கள் (Almoravids) (1040-1147) → அல்மொஹாதிகள் (Almohads) (1120-1269)
- இஃப்ரிகியா (Ifriqiya) [நவீன துனிசியா (Tunisia), கிழக்கு அல்ஜீரியா (Algeria), மற்றும் மேற்கு லிபியா: அக்லாபிட்கள் (Aghlabids) (800–909 CE) → எகிப்தின் பாத்திம கலீபகம் (909–973) →சிரிட்கள் (Zirids) (973–1148) → அல்மொஹாதிகள் (Almohads) (1148–1229) →ஹஃப்சித்கள் (Hafsids) (1229–1574)
- எகிப்து மற்றும் பாலஸ்தீனம்: துல்யூனிட்கள் (Tulunids) (868-905 CE) → இக்ஷிடிட்கள் (Ikhshidids) (935-969) → பாத்திம கலீபகம் (909-1171) → அய்யூப்பிய வம்சம் (1171-1250) → எகிப்தின் மம்லுக் சுல்தானகம் (Mamluks) (1250-1517)
- அல்-ஜசீரா (Al-Jazira) (நவீன சிரியா மற்றும் வடக்கு ஈராக்): ஹாம்தானிகள் (Hamdanids) (890-1004 CE) → மார்வானித்கள் ( Marwanids) (990-1085) மற்றும் உக்காயிலித்கள் (Uqaylids) (990-1096) → செல்யூக் பேரரசு (1034-1194) → மங்கோலியப் பேரரசு மற்றும் இல்கனாதே (Ilkhanate) (1231-1335)
- தென்மேற்கு ஈரானில்: பையிடுகள் (Buyids) (934-1055) → செல்யூக் பேரரசு (1034-1194) → மங்கோலியப் பேரரசு
- கொராசான் (Khorasan) (நவீன ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான்: தாஹிரித்கள் (Tahirids) (821 -873) → சபாரித்து வம்சம் (873-903) → சாமனித்து பேரரசு (903-995) → கசானவித்து வம்சம் (995-1038) → செல்யூக் பேரரசு (1038-1194) → குரித்கள் (1011-1215) ) → குவாராசிமியர்கள் (Khwarazmians) (1077-1231) → மங்கோலியா பேரரசு மற்றும் இல்கானகம் (1231-1335)
- டிரான்ஸாக்சியானா (Transoxiana) நவீன நடு ஆசியா: சாமனித்து பேரரசு (819–999) →கரகானித்கள் (Karakhanids) (840–1219 →குவாராசிமியர்கள் (1077–1231) →மங்கோலியா பேரரசு மற்றும் சகட்டை கானகம் (Chagatai Khanate) (1225–1687)
Remove ads
குறிப்புகள்
- The Abbasid Revolution against the உமையா கலீபகம் adopted black for its rāyaʾ for which their partisans were called the musawwids.[1] Their rivals chose other colours in reaction; among these, forces loyal to Marwan II adopted red.[2] The choice of black as the colour of the Abbasid Revolution was already motivated by the "black standards out of Khorasan" tradition associated with the மகதி. The contrast of white vs. black as the Umayyad vs. Abbasid dynastic colour over time developed in white as the colour of Shia Islam and black as the colour of Sunni Islam: "The proselytes of the ʿAbbasid revolution took full advantage of the eschatological expectations raised by black banners in their campaign to undermine the Umayyad dynasty from within. Even after the ʿAbbasids had triumphed over the Umayyads in 750, they continued to deploy black as their dynastic colour; not only the banners but the headdresses and garments of the ʿAbbasid caliphs were black... The ubiquitous black created a striking contrast with the banners and dynastic color of the Umayyads, which had been white ... The Ismaili Shiʿite counter-caliphate founded by the Fatimids took white as its dynastic color, creating a visual contrast to the ʿAbbasid enemy ... white became the Shiʿite color, in deliberate opposition to the black of the ʿAbbasid 'establishment'."[3] After the revolution, Islamic apocalyptic circles admitted that the Abbasid banners would be black but asserted that the Mahdi's standard would be black and larger.[4] Anti-Abbasid circles cursed "the black banners from the East", "first and last".[5]
- The Abbasids resided in Cairo as ceremonial figures under the Mamluk sultans after the fall of Baghdad in 1258. See article for details.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads