சௌராட்டிர நாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சௌராட்டிர நாடு (Saurashtra Kingdom) என்பது தற்கால குசராத்து மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள சௌராட்டிர தீபகற்பம் எனும் கத்தியவார் தீபகற்ப பகுதியாகும். இத்தீபகற்ப பகுதியில் தற்கால ராஜ்கோட் மாவட்டம், போர்பந்தர் மாவட்டம், ஜாம்நகர் மாவட்டம், ஜூனாகாத் மாவட்டம், அம்ரேலி மாவட்டம், பவநகர் மாவட்டம், மோர்பி மாவட்டம், போடாட் மாவட்டம், சுரேந்திரநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதி, தேவபூமி துவாரகை மாவட்டம் மற்றும் கிர்சோம்நாத் மாவட்டம் 11ஆகிய மாவட்டங்களை கொண்டுள்ளது. குசராத்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள சூரத் என்ற நகரத்தின் பெயர் சௌராஷ்ட்டிரா என்ற சொல்லில் இருந்து வந்தது.

இதிகாச புராணங்களில் கூறப்படும் பரத கண்டத்தின் 56 தேசங்களில் சௌராட்டிர தேசமும் ஒன்றாகும்.
Remove ads
எல்லைகள்
இத்தேசம், தற்போதைய குசராத்து மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகள், வடக்கே கட்சு வளைகுடாவும், தெற்கே காம்பே வளைகுடாவும்இ[1][2][3] மேற்கே அரபியன் கடலும், கிழக்கே தற்போதைய குசராத்து மாநிலத்தின் இதர பகுதிகளால் சூழப்பட்டது. சௌராஷ்ட்ரதேசத்தின் நிலப்பரப்பு முக்கடல்களால் சூழப்பட்டதால் இதனை சௌராட்டிர தீபகற்பம் அல்லது கத்தியவார் தீபகற்பம் என்பர்.
சௌராட்டிர நாடும் யது குலத்தினரும்
பண்டைய பாரத நாட்டின் மையப்பகுதியிலும் மேற்கு பகுதியிலும் யது குலம் எனப்படும் யாதவர்கள் ஆண்ட பகுதிகளான துவாரகை, மற்றும் ஆனர்த்த தேசம், லாட தேசம் சௌராட்டிர நாட்டில் உள்ளது. யது குலத்தினர் ஆண்ட பிற நாடுகள், மதுரா, சேதி நாடு, தசார்ன நாடு, சூரசேனம், விரஜ நாடு, மகத நாடு, குந்தி நாடு, அவந்தி நாடு, மாளவம், ஹேஹேய நாடு மற்றும் விதர்ப்ப நாடு ஆகும். கத்தியவார் தீபகற்பத்தில் அமைந்துள்ள மேற்கு குசராத்து பகுதியை இன்றளவும் சௌராஷ்ட்டிரம் என்றே அழைக்கின்றனர். மேலும் இப்பகுதியில் வாழும் மக்கள் தங்களை சௌராஷ்ட்ரீகள் என்றே அழைத்துக் கொள்கிறார்கள்.
Remove ads
நிலவியல் அமைப்பு
பண்டைய காலத்தில் சௌராஷ்ட்ர நிலப்பரப்பு, ஆனர்த்தா, லாட்டா (லாடதேசம்), சௌராட்டிர தேசம் என முப்பெரும் பிரிவுகளாக பிரிந்து இருந்தது. இக்கால வடக்கு குசராத்தின் பகுதி ’ஆனர்ந்தா’வாக இருந்தது. அதன் தலைநகர் இக்கால ஆனந்தபூர் எனபடும் ஆனந்த். தெற்கு குசராத்தில் மகீ ஆற்றுக்கும், தப்தி ஆற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு, முன்பு லாட்டா (லாடதேசம்) பகுதியாக விளங்கியது. சௌராட்டிர தீபகற்பம் எனும் தீபகற்ப பகுதியே சௌராட்டிர தேசம் எனப்பட்டது. இப்பெயர் இப்பகுதி மக்களால் சௌராஷ்டிரா என்று பயன்படுத்தப்படுகிறது.
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் ஸௌராஷ்ட்ர தேசம்

இதிகாச, புராணங்களில் கூறப்படும் 56 நாடுகளில் சௌராஷ்ட்டிர தேசமும் ஒன்று. அதர்வண வேதத்தில், சௌராஷ்ட்ர தேசம் பற்றிய குறிப்பில், லலிதா ஆதிசக்தியின் அம்சமான பகளாமுகி தேவி, சௌராஷ்ட்ர தேசத்தில் மஞ்சள் நிற ஆடையில் தோன்றினாள் என்றும், பகளாமுகிக்கு பீதாம்பரீ என்ற பெயரும் உள்ளதாகவும் அறியப்படுகிறது.
திருமாலின் ஒன்பதாவது அவதாராமான ஸ்ரீகிருஷ்ணர், மதுராவை விட்டு யாதவர்களுடன் வெளியேறி, ஸௌராஷ்ட்ர நாட்டில் குடியேறி துவாரகை எனும் கடற்கரை நகரை அமைத்த கண்ணபிரான், சோமநாதரை வழிபட்டார்.
யது குலத்தினர் முனிவரின் சாபத்தால் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டு, யது குலம் அழிந்த பிறகு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சோமநாதபுரம் (குசராத்து) ஆலயம் அமைந்த பிரபாச பட்டினத்திலிருந்து வைகுந்தம் எழுந்தருளினார் என்பதை பாகவத புராணம் மற்றும் மகாபாரதம் கூறுகிறது. மேலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் துவாரகையில், உத்தவர் என்ற தன் பக்தருக்கு உத்தவ கீதை[4][5][6] உபதேசித்த்தார் என்பதை பாகவத புராணம் வாயிலாக அறியலாம்.
சௌராஷ்ட்ர தேசத்தில் உள்ள துவாரகையில் ராஸ நிருத்தியம் என்ற நாட்டியம் கண்ணபிரானால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த நாட்டியத்தை கண்ணனின் பேரனின் மனைவியான உஷாதேவிக்கு கற்பிக்கப்பட்டது. இவள் மூலமாக சௌராஷ்ட்ர தேச பெண்மணிகள் (ஒன்றாகக் கூடி ஆடும்) ராச நாட்டியத்தை கற்றுப் பரம்பரையாக இன்றும் ஆடி வருகின்றனர்.[7][8]
ஸௌராஷ்ட்ர தேசம் இந்து, சமணம் மற்றும் பௌத்தம் சமயங்களை ஆதரித்து வந்துள்ளது. பிரபாச பட்டணம் எனப்படும்[9] ஜூனாகாத் கடற்கரை நகரில் இந்துக்களுக்கு அடுத்து அதிக அளவில் சமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். சமணர்களும், சமணக் கோயில்களும் [10] இங்கு தான் அதிகமாக உள்ளது.
சந்திரனால் சிவலிங்கம் நிறுவப்பட்ட சோமநாதபுர,[11]ஆலயத்தைச் சுற்றி உள்ள கோட்டைக்கு வெளியே உள்ள மயான பூமிகளில் சைவ சமய கபாலிகர்கள் சுதந்திரமாக சுற்றி திருந்தார்கள். கோட்டைக்கு உட்புறம் இருந்த திருபுரசுந்தரி ஆலயத்தில் சைவ சமய சாக்தர்கள் வழிபட்டனர்.
சௌராஷ்ட்ர தேசத்தில் உள்ள போர்பந்தர் எனும் நகரம் முன்பு சுதாமபுரி என்று அழைக்கப்பட்டது. சுதாமர், ஸ்ரீகிருஷ்ணரின் பள்ளி பருவத்து ஆருயிர் நண்பர். அவருடைய பெயரால் அமைந்த ஊர் சுதாமபுரி.[12][13]

விசிஷ்டாத்துவைத சமய ஆச்சாரியரான இராமானுசர் மற்றும் துவைத சமய ஆச்சாரியரான மத்வர் ஆகியவர்கள், துவாரகை ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டனர். துவாரகை கோயில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று. முக்தி தரும் ஏழு நகரங்களில் துவாரகை நகரமும் ஒன்று. மகாராஷ்ட்ர மகான் ஞனேஸ்வரரும் துவாரகை இராஜகோபாலனை வழிபட்டார். கண்ணனின் பக்தையான மீராபாய் மார்வாரிலிருந்து, கண்ணனை காண துவாரகை வந்து கண்ணனுடன் கலந்தார்.
Remove ads
மகாபாரதத்தில் சௌராட்டிர நாடு
சகாதேவனின் படையெடுப்புகள்
மகாபாரதம், சபா பர்வம், அத்தியாயம் 30-இல் தருமரின் ராஜசூய யாகத்தின் பொருட்டு சகாதேவன் பௌரவ நாட்டை வென்று, பின் சௌராட்டிர நாட்டு யாதவர்களின் ஒரு பிரிவினரான விருஷ்ணிகள் ஆண்ட துவாரகை நாட்டின் மீது போர் தொடுத்தான். ஆனால் துவாரகை நாட்டு மன்னன் உக்கிரசேனர் சகாதேவனுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டான்.
குருச்சேத்திரப் போர்
மகாபாரதம், பீஷ்ம பர்வம், அத்தியாயம் 20-இல் சௌராட்டிர நாட்டின் யாதவகுலத்தின் உட்குலங்களான விருஷ்ணிகுல மன்னர், போஜகுல மன்னர், மற்றும் குந்தி குல மன்னர் ஆகியவர்கள் சௌராட்டிர நாட்டின் தலைமைப் படைத்தலைவர் கிருதவர்மன் தலைமையில் நாராயணீப்படை எனும் பெரும்படையுடன் கௌரவர் படையில் சேர்ந்து குருச்சேத்திரப் போரில் கலந்து கொண்டனர். ஆனால் கிருஷ்ணரும் சாத்தியகி மட்டுமே பாண்டவர் அணியில் சேர்ந்தனர்.
அருச்சுனனின் படையெடுப்புகள்
மகாபாரதம், அசுவமேத யாக பர்வம், அத்தியாயம் 83-இல் தருமரின் அசுவமேத யாகத்தின் பொருட்டு அருச்சுனன் யாக குதிரையுடன் ஆந்திரர்களின் நாட்டு வழியாக சென்று திரும்புகையில் சௌராட்டிர நாட்டின் பிரபாச பட்டினம் (சோமநாதபுரம் (குசராத்து)) கடற்கரையில் புனித நீராடிவிட்டு, விருஷ்ணிகள் (யாதவகுலத்தின் ஒரு பிரிவினர்) ஆண்ட துவாரகை நகரை அடைந்தான். அப்போது யாக குதிரையை துவாரகை நாட்டு விருஷ்ணி குல வீரர்கள் கட்டிப் போட்டனர். இதை அறிந்த துவாரகை நாட்டு மன்னர் உக்கிரசேனர், பாண்டவர்கள் நமது உறவினர் என்பதால் யாக குதிரையை விட்டு விடச் சொன்னார்.
Remove ads
மகாபாரதத்தில் துவாரகை
- மகாபாரத இதிகாசத்தில் வரும் பாண்டவர்கள் வன வாழ்க்கை காலத்தில் அருச்சுனன் சில ஆண்டுகள் சௌராட்டிர தேசத்தில் உள்ள துவாரகையில் தங்கி சுபத்திரையை மணந்தான்.
- பாண்டவர்கள் காடுறை வாழ்க்கையின் போது, பாண்டவர்களின் புதல்வர்களான அபிமன்யு, உபபாண்டவர்கள் மற்றும் பணியாட்கள், இந்திரசேனன் என்பவன் தலைமையில் துவாரகையில் தங்கினர். (4, 72)
- துவாரகைக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கு இடையே ஒரு பாலைவனம் (தார் பாலைவனம்) பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. (14-53, 55)
- மௌசல பர்வத்தில் யாதவகுலத்தினர் ஒருவருகொருவர் சண்டையிட்டு மடிந்த பின் பலராமர் துவாரகையை தீயிட்டு அழித்து சரசுவதி ஆற்றை நோக்கி புனிதப் பயணம் மேற்கொண்டார். (9, 35)
- துர்வாச முனிவர் நீண்டகாலம் துவாரகையில் தங்கி தவமிருந்தார். (13, 160)
Remove ads
பண்டைய வரலாற்றில் சௌராஷ்டிர தேசம்

கிரேக்கர்கள் மற்றும் உரோமானியர்கள், இங்குள்ள வரலாற்று புகழ் மிக்க துறைமுகப்பட்டினங்கள் மூலம் வணிகம் செய்தனர். பொ.ஊ.மு. இரண்டாம் நூற்றாண்டில் சௌராஷ்ட்ர தேசத்தையும் வெற்றி கொண்ட இந்தோ-கிரேக்க அரசன் முதலாம் மெண்டாண்டரின் செயலைப் புகழும் ஸ்ட்ராபோ எனும் கிரேக்க வரலாற்று அறிஞர் சௌராஷ்டிர தேசத்தை சரோஸ்டஸ் என்று (Saraostus) தனது நூலில் குறிப்பிடுகிறார்.[14]
சோமநாதபுரம் சிவாலயத்தை நேரில் கண்ட அரேபிய வரலாற்று அறிஞர் அல்பிருணி என்பவர், உலகப் புகழ்பெற்ற சோமநாதபுர சிவலிங்கத்திற்கு 750 மைல் தொலைவிலிருந்து கொண்டு வரப்படும் புனித கங்கை நீரால் நாள்தோறும் அபிஷேகம் செய்யப்பட்டதாக, தன் வரலாற்றுக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.
சூரிய, சந்திர கிரகணங்களின் முடிவின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சோமநாதபுரத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள சரசுவதி ஆறு, ஹிரண்ய நதி மற்றும் கபில நதிகள் ஒன்று கூடும் திருவேணி சங்கமத்தில் புனித நீராடி சோமநாதரை வணங்கினர் என்றும், இக்கோயிலின் வருமானமும், செல்வமும், குவிந்த காணிக்கைகளும் கணக்கிட முடியாதது என்று, இசுலாமிய வரலாற்று அறிஞர் இபின் அஷ்சூர் (Muhammad al-Tahir ibn Ashur) வியக்கிறார்.
பிரபாச பட்டினம் என்றும் ' என்றும் தேவ பட்டணம் என்றும் சோம்நாத் படான் (Somnath Patan) என்றும் [15] பல அடைமொழிகளுடன் அழைக்கப்படும் இவ்விடத்தில் அமைந்துள்ள சோமநாதர் கோயிலில் 2000 சௌராஷ்ட்ர வேதியர்கள் வேதம் ஓதிக்கொண்டே இருந்தனர்.
இசையில் சிறந்த 300 கலைஞர்களும், 500 நாட்டியப் பெண்களும் (Daughters of Royal Houses of India) சோமநாதரை எப்போதும் ஆடல் பாடல்களால் மகிழ்வூட்டினர். சோமநாதபுர சிவன் கோயிலுக்கு மன்னர்கள் 10,000 கிராமங்கள் மானியமாக வழங்கி இருந்தனர். 300 முடிதிருத்தும் கலைஞர்கள் பணியில் அமர்த்தப் பட்டிருந்தனர். இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை சிற்ப கலைஞர்கள் எவ்வித ஆதாரம் இன்றி அந்தரத்தில் நிலைநிறுத்தி நிர்மாணித்திருந்தார்கள்.
ஆதிசங்கரர் இங்கு துவாரகை மடம் என்ற அத்வைத மடத்தை நிறுவினார்.
சௌராஷ்ட்ர தேசத்தின் கட்ச் பகுதியில் 100 குடும்பங்கள் கொண்ட பன்னி (Banni) என்ற கிராமம் உள்ளது. இது இந்தியா-பாக்கிஸ்தான் எல்லையோர கிராமம் ஆகும். கால்நடைகள் வளர்த்தல், நெசவு நெய்தல், புடவைகளுக்கு பூ வேலைப்பாடுகள் செய்தல், புட்டா போடுதல் பன்னி கிராம மக்களின் தொழில். இவர்கள் சமயத்தால் இசுலாமியர் எனினும், புலால் உண்பது பாவம் என நினைப்பவர்கள். இவர்கள் மதம் மாறினாலும் தங்களின் பரம்பரை இந்து சமய உணவுப் பழக்க வழக்கங்களை இன்றும் பின்பற்றி வருகின்றனர்.[16]
Remove ads
சௌராட்டிர தேசத்திய மொழிகள்
சௌராஷ்ட்ர தேசத்தை இசுலாமியர்கள் கைப்பற்றுவதற்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் மற்றும் சமணர்கள் சமசுகிருத மொழியின் பேச்சு மொழியான பிராகிருதமொழியின் கிளை மொழிகளான சூரசேனி என்ற சௌரசேனி மொழியும், பெளத்தசமயத்தினர் பாலி மொழியையும் பேசினார்கள்.
சௌராஷ்ட்ர தேசத்தை ஆண்ட மன்னர்கள்


சௌராட்டிர தேசத்தை, யது குல யாதவர்கள்; மகத நாட்டு மெளரியர்; குப்தர்கள்; சுங்கர் குல மன்னர்கள்; சாதவாகனர் குல;[17] கூர்சர பிரதிகர குல[18][19][20] ; மைத்திரக குலத்தினர்; சாளுக்கியர், சோலாங்கி அரச குலம்[21] [22]. மற்றும் வகேலா குல மன்னர்கள்[23][24]; தில்லி சுல்தான்களும்; மொகலாயர்களும்; இராசபுத்திரர்களும், மராத்தியர்களும் ஆண்டனர்.[25]
- பொ.ஊ.மு. இரண்டாம் நூற்றாண்டில் மேனாண்டர் (Medander) எனும் பாக்திரியாவை ஆண்ட இந்தோ-கிரேக்க மன்னன் சிறிது காலம் சௌராஷ்ட்ர தேசத்தை தனது பேரரசுடன் இணைத்துக் கொண்டார்.[26]
- பொ.ஊ.மு. 322ல் சந்திரகுப்த மௌரியர் ஆட்சியின் கீழ் சௌராஷ்ட்ர தேசம் மேற்கிந்தியப் பகுதியில் அடங்கி இருந்தது. பேரரசர் சந்திரகுப்த மௌரியரின் படைத்தலைவரான புஷ்யமித்திர சுங்கன் சௌராஷ்ட்ர தேசத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார். புஷ்யமித்திர சுங்கனின் வாரிசுகள் பொ.ஊ.மு. 155 வரை சௌராஷ்ட்டிர தேசத்தை ஆண்டனர்.[27][28][29]
- பொ.ஊ.மு. 72ல் மேற்கு சத்ரபதிகள் சௌராஷ்ட்ர தேசத்தை வென்று, சக அரச பரம்பரையை தோற்றுவித்தனர். இந்நாட்டை புமகன் முதல் சுவாமி ருத்ர சிங்கன் ஈறாக 26 சக வம்ச அரசர்கள் ஆண்டனர்.[30]
- பொ.ஊ. 35 முதல் 405 வரை பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக சௌராஷ்டிர நாடு இருந்தது.
- பொ.ஊ. 126-இல் ஆந்திரா நாட்டு நபான அரசன் சௌராஷ்ட்ரா தேசத்தை கைப்பற்றி ஆண்டார். பின் பொ.ஊ. 145-இல் முதலாம் ருத்திரதாமன் எனும் சௌராஷ்டிரன், சக வம்ச மன்னனான இரண்டாம் பலுமாயியை வென்று சௌராஷ்ட்டிர தேசத்தை சுதந்திரமாக, ருத்திரதாமனின் வம்சத்தவர்கள் பொ.ஊ. 390 முடிய ஆண்டனர்.
- குப்தப் பேரரசர் இரண்டாம் சந்திரகுப்தர், சௌராஷ்ட்ர தேசத்தை வென்று, தனது மகனான முதலாம் குமாரகுப்தர் என்பவரை சௌராஷ்ட்ர தேசத்தின் ஆளுனராக நியமித்தார்.[31]
- பொ.ஊ. 413ல் முதலாம் குமாரகுப்தர் சௌராஷ்ட்ர தேசத்தை ஆண்டார். அவரது மறைவுக்குப் பின் ஸ்கந்த குப்தர் ஆட்சிக்காலத்தில், பர்ணதத்தன் என்பவர் சௌராஷ்ட்ர தேசத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின் சக்ரபலிதன் சௌராஷ்ட்ரத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார்.[32]
- பொ.ஊ. 470க்குப்பின் குப்த பேரரசின் சௌராஷ்டிர பகுதியின் படைத்தலைவர் பட்டாரகன் என்பவர மைத்திரகப் பேரரசை நிறுவினான். வல்லபி நகரை தலைநகராகக் கொண்ட மைத்திரகப் அரசர்கள் பட்டாரகன் முதல் சிலாதித்தியன் முடிய இருபது அரசர்கள், 300 ஆண்டுகள சௌராஷ்டிர தேசத்தை ஆட்சி செய்தனர். பொ.ஊ. 766 வரை நீடித்த வல்லபிபுர வம்சம் முகமதியர்களின் படையெடுப்பால் அழிந்தது. சீன பௌத்த துறவியான யுவான் சுவாங் என்பவர், வலபீபுரத்தை பற்றி, நாலந்த பல்கலைக் கழகத்திற்கு நிகராக வல்லபிபுரம் கல்விநிலையம் திகழ்ந்தாக தமது குறிப்புகளில் குறித்துளார்.[33]
- பொ.ஊ. 780 முதல் 1304 முடிய சோலாங்கிப் பேரரசு, தில்லி சுல்தான்கள் சௌராஷ்ட்ரத்தை கைப்பற்றும்வரை ஆண்டனர்.[34]
- வெள்ளையர்கள் இந்தியாவை முழுமையாக கைப்பற்றும் வரை, சௌராஷ்ட்ர தேசம், டெல்லி சுல்தான்களின் ஆட்சியிலும்[35] பின்னர் மொகலாயர்கள்ஆட்சிக்குட்பட்டும் இருந்தது.[36]
- பிரித்தானிய இந்தியப் பேரரசு காலத்தில், ஆங்கிலேய அரசுக்கு கப்பம் கட்டும் 122 இந்து, இசுலாமிய பெருநில மன்னர்களும், குறுநிலமன்னர்களும் மற்றும் ஜமீந்தார்களும் பெரும்பாலான சௌராஷ்ட்டிர தேசத்தின் பகுதிகளை, சுதேச சமஸ்தானங்கள் என்ற பெயரில் ஆண்டனர். அவைகளில் குறிப்பிடத்தக்க சமஸ்தானங்கள்: பரோடா அரசு, ஜூனாகத், பவநகர் அரசு, போர்பந்தர், ராஜ்கோட், ஜாம்நகர், கட்ச், காம்பாலியம், சோட்டா உதய்பூர், மோர்பி மற்றும் பாலன்பூர் ஆகும்.[37]
Remove ads
சௌராட்டிரதேசத்தைப் பற்றிய வெளிநாட்டு அறிஞர்களின் கூற்று
- கசினி முகமது [38]உடன் இந்தியா வந்த அரபு வரலாற்று ஆசிரியரும் கவியுமான அல்-பிருனி சௌராஷ்ட்டிர தேசத்தில் உள்ள சோமநாதர் கோயிலைப் பற்றியும், அதன் செல்வச் சிறப்புகள் பற்றியும் தமது பயணகுறிப்பில் குறித்துள்ளார்.[39]
- யுவான் சுவாங் என்ற சீன பெளத்த துறவி சௌராஷ்ட்டிர தேசத்தில் இருந்த வலபீபுர கல்விச்சாலையை நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு நிகராக உள்ளது என்று தமது பயண நூலில் குறிப்பிட்டுள்ளார்.[40]
- மேலும் சௌராட்டிரதேசத்தை ஆண்ட மன்னர்கள் சிலர், வலிமையான ஆட்களை ஆப்பிரிக்காவிலிருந்து அழைத்து வந்து தங்கள் படையில் சேர்த்தார்கள். ஆப்பிரிக்கர்களின் குடியிருப்புகள் சௌராஷ்ட்ர தேசத்தில் பார்த்தாக வரலாற்று அறிஞர்கள் தங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளனர்.[41]
Remove ads
இந்திய விடுதலைக்குப் பின் சௌராட்டிர தேசம்
ஜூனாகாத் சமஸ்தானத்தை ஆண்ட இசுலாமிய மன்னர், இந்திய விடுதலையின் போது, ஜூனாகத் சமஸ்தானத்தை பாகிஸ்தானுடன் இணைக்க வெள்ளையரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் இப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, ஜூனாகாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதனால் ஜூனாகாத் சமசுதான மன்னர் பாகிஸ்தானில் குடும்பத்துடன் குடியேறினார்.[42]
சுதந்திர இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலின் பெருமுயற்சியால் 217 சமஸ்தானங்களைக் கொண்ட சௌராஷ்ட்ர தேசத்தை சௌராஷ்டிர மாகாணம் அல்லது ‘ஐக்கிய கத்தியவார் அரசு’ (United State of Kathiyawar) என்ற பெயரில் 15.02.1948ல் உருவாக்கப்பட்டது.[43]
பின்னர் 01.01.1956ல் சௌராஷ்டிர மாகாணம் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
01.05..1960ல் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கும் போது சௌராஷ்டிர மாகாணம் குசராத்து மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
Remove ads
கோயில்கள், மடங்கள், மசூதிகள் மற்றும் சுற்றுலா இடங்கள்
- சோமநாதர் கோயில்[44]
- துவாரகை கோயில்[45] [46].
- நாகேசுவரர் கோயில்[47]
- ஆதிசங்கரர் பாரத நாட்டின் மேற்கு திசையில், சாம வேதத்திற்காக நிறுவிய காளிகா மடம் எனும் துவாரகை மடம்,[48][49]
- பாலிதானா சமணக் கோயில்கள்.[50][51]
- ஆசிய சிங்கங்களுக்கான கிர் தேசியப் பூங்கா[52]
சௌராஷ்ட்டிர தேசத்தில் பார்சி இன மக்கள்
பாரசீகத்தை பொ.ஊ. 651ல் முழுவதுமாக வெற்றி கொண்ட கலிபா உமர் தலைமையிலான அரபு இசுலாமியர்கள், அங்கு வாழ்ந்த ஜோரோஸ்ட்ரீய (Zorostrianism) மதத்தை பின்பற்றும் மக்களை கட்டாய மதமாற்றம் செய்தனர். பலர் கட்டாய மதமாற்றத்திற்கு அஞ்சி, பாரசீகத்தை விட்டு வெளியேறி இந்தியாவில், சிந்து பகுதியிலும், சௌராஷ்ட்ர தேசத்தின் குசராத்து கடற்கரை பகுதிகளில் 775ல் அடைக்கலம் அடைந்தனர். இவர்களைத்தான் பார்சி மக்கள் என்பர். பின்னர் இவர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சூரத், பம்பாய் போன்ற பகுதிகளில் குடியேறி தொழில் தொடங்கினர். [53] [54] [55][56][57][58][59][60][61]
சௌராட்டிரதேசமும், தமிழ்நாட்டுச் சௌராட்டிரர்களும்
கசினி முகமது 17வது முறையாகவும் இறுதியாகவும், சனவரித் திங்கள் முப்பதாம் நாள் 1025ம் ஆண்டு, வியாழக்கிழமை அன்று சோமநாதபுரம் (குசராத்து) ஆலயத்தை தரைமட்டமாக இடித்து, ஐம்பதாயிரம் பேர்களைக் கொன்று , இருபதாயிரம் பேரை அடிமைகளாக பிடித்துக் கொண்டு, சோமநாதபுரம் கோயில் செல்வங்களை கொள்ளையடித்து சூறையாடிய பிறகு மீதமுள்ள அப்பகுதியில் வாழ்ந்த சௌராட்டிர மக்கள், பெரும்பாலான சௌராட்டிரர்கள் சௌராட்டிர தேசத்தை விட்டு மாளவம், அவந்தி, உச்சையினி போன்ற நாடுகளில் குடியேறினர்.
தில்லி சுல்தான்களின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி, சௌராஷ்ட்ரர்கள் தென்னாட்டில் யாதவப் பேரரசில் குடியேறி 200 ஆண்டுகள் வாழ்ந்தனர். 1294ல் அலாவுதீன் கில்சி தேவகிரியைத் தாக்கி, கைப்பற்றிய பின்பு, சௌராட்டிரர்கள் பாஞ்சால நாட்டின் தலைநகரான ’காம்பாலியம்’ எனும் நகரில் குடியேறி அறுபது ஆண்டுகள் வாழ்ந்தனர்.
பின்னர் மீண்டும் தக்காணப் பீடபூமியில் யாதவர்கள் ஆண்ட தேவகிரியில் 200ஆண்டு காலம் வாழ்ந்த சௌராட்டிரர்கள் 1312ல் விசயநகர பேரரசில் குடியேறி வாழ்ந்தனர்.
பின்னர் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில், 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சௌராட்டிரர்கள், தமிழ்நாட்டில் குடிபெயர்ந்து, மதுரை நாயக்கர்கள் மற்றும் தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சிப் பகுதிகளிலான மதுரை, தஞ்சை, திருச்சி, கும்பகோணம், பரமக்குடி, சேலம், திண்டுக்கல் போன்ற பல்வேறு பகுதிகளில் குடியேறி வாழ்கின்றனர்.[62]
படக்காட்சியகம்
- மகாத்மா காந்தி பிறந்த வீடு, போர்பந்தர்
- மகாதேவர் கோயில், பவநாத்
- ஹரிசித்தி மாதா மலைக்கோயில்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads