முகலாயப் பேரரசு

1526-1857 காலகட்டத்தில் பெரும்பாலான இந்திய துணைக்கண்ட பகுதிகளை ஆண்ட வாரிசு வழிப் பேரரசு From Wikipedia, the free encyclopedia

முகலாயப் பேரரசு
Remove ads

முகலாயப் பேரரசு உச்ச நிலையில் இருக்கும்பொழுது, இந்திய துணைக்கண்டத்துக்கு உட்பட்ட தற்போதைய இந்தியா, ஆப்கானித்தான், பாக்கித்தான், வங்கதேசம் போன்ற நாடுகளின் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய பேரரசாக இருந்தது. கி. பி. 1526 தொடக்கம் முதல் 1712 வரையான காலப்பகுதியில் இந்த அரசு நிலைபெற்றிருந்தது. துருக்கிய-பாரசீக/ துருக்கிய-மங்கோலிய தைமூரியத் தலைவனான பாபர், 1526 ஆம் ஆண்டில் கடைசி டில்லி சுல்தானான, இப்ராஹிம் லோடி என்பவரை, முதலாவது பானிபட் போரில் தோற்கடித்து முகலாய அரசைத் தோற்றுவித்தார். பாபர் தற்கால உஸ்பெகிஸ்தானில் இருந்து வந்தவர் ஆவார். அவர் சஃபாவிட் மற்றும் உதுமானிய பேரரசுகளின் உதவியையும் இப்போரில் வெல்ல பயன்படுத்திக் கொண்டார்.[11] முகல் என்பது மங்கோலியர் என்பதற்கான பாரசீக மொழிச் சொல்லாகும். முகலாயர் இஸ்லாம் சமயத்தைச் சேந்தவர்கள்.[12] இதன் அதிக பட்ச பரப்பளவைக் கொண்டிருந்த சமயத்தில் முகலாயப் பேரரசு தெற்காசியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்றாக இருந்தது.[13]

விரைவான உண்மைகள் முகலாயப் பேரரசு, நிலை ...
Thumb
முகலாய அரண்மனையொன்றின் உள்தோற்றம் - ஆக்ரா கோட்டை

முகலாய ஏகாதிபத்திய அமைப்பானது 1600 களில் பாபரின் பேரன் அக்பர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவே அறியப்படுகிறது.[14] இந்த ஏகாதிபத்திய அமைப்பு கி. பி. 1720 வரை நீடித்தது. முகலாயப் பேரரசின் கடைசி முக்கியமான பேரரசரான அவுரங்கசீப்பின் இறப்பிற்கு பிறகு சிறிது காலம் வரை நீடித்தது.[15][16] மேலும் அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில்தான் முகலாயப் பேரரசு தனது பரப்பளவில் அதிகபட்ச அளவை எட்டியது. பின்னர் படிப்படியாக சிதைய ஆரம்பித்தது. பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி பெரும்பாலான இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த நேரத்தில் பழைய தில்லியை சுற்றியிருந்த பகுதிகளில் மட்டுமே முகலாய அரசு இருந்தது. 1857ல் சிப்பாய் கலகத்திற்கு பிறகு பிரித்தானிய அரசால் முகலாயப் பேரரசானது அதிகார பூர்வமாக நீக்கப்பட்டது.

முகலாயப் பேரரசு அதன் இராணுவ நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்பட்டு நீடித்த போதும்,[17][18][19] அது தன் ஆட்சிக்குள் வந்த கலாச்சாரங்கள் மற்றும் மக்களை கடுமையாக ஒடுக்கவில்லை. மாறாக புதிய நிர்வாக நடைமுறைகள் மூலம் அவர்கள் அனைவரையும் சமமாக்கியது.[20][21] பல்வேறுபட்ட ஆளும் வர்க்கத்தினர் காரணமாக திறமையான, மையப்படுத்தப்பட்ட மற்றும் தரப்படுத்தப்பட்ட ஆட்சி நடைபெற்றது.[22] 17-ஆம் நூற்றாண்டு முழுவதும் முகலாயப் பேரரசால் உருவாக்கப்பட்ட அமைதியானது இந்திய பொருளாதார விரிவாக்கத்தில் ஒரு முக்கிய காரணியாக அமைந்தது.[23] பேரரசின் செல்வத்திற்கு முக்கியமான அடித்தளமாக அமைந்தது விவசாய வரிகளாகும். இது மூன்றாம் முகலாய மன்னர் அக்பரால் கொண்டு வரப்பட்டது.[24][25] முகலாய இந்தியாவானது உற்பத்தித் துறையில் உலகிலேயே முதல் இடத்தில் இருந்தது.[26] 18 ஆம் நூற்றாண்டு வரை உலக தொழில்துறை உற்பத்தியில் 25% இந்தியாவில் இருந்து தான் பெறப்பட்டது.[27] இந்திய பெருங்கடலில் வளர்ந்து வந்த ஐரோப்பிய நடமாட்டம், மற்றும் இந்திய மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களுக்கான அதிகப்படியான தேவை ஆகியவை முகலாய அவைகளில் மேலும் செல்வத்தைப் பெருக்கின.[28]

முகலாய ஆளும் வர்க்கத்தினர் பகட்டான நுகர்வோராக இருந்தனர்.[29] இதன் காரணமாக ஓவியங்கள், இலக்கிய வடிவங்கள், ஜவுளிகள் மற்றும் கட்டட கலை ஆகியவை வளர்ச்சியடைந்தன. குறிப்பாக ஷாஜகானின் ஆட்சிக்காலத்தில் இவற்றிற்கான ஆதரவு அதிகமாக இருந்தது.[30] ஆக்ரா கோட்டை, பத்தேப்பூர் சிக்ரி, செங்கோட்டை, ஹுமாயூனின் கல்லறை, இலாகூர் கோட்டை மற்றும் தாஜ்மஹால் ஆகியவை தெற்காசியாவில் காணப்படும் முகலாயர்களால் உருவாக்கப்பட்ட உலக பாரம்பரிய களங்கள் ஆகும். இதில் தாஜ்மஹால் "இந்தியாவில் முஸ்லிம் கலையின் ஆபரணம் என்றும், உலக பாரம்பரியத்தின் உலக அளவில் போற்றப்படுகின்ற தலை சிறந்த படைப்புகளில் ஒன்று" எனவும் கருதப்படுகிறது.[31]

பேரரசின் பெரும்பகுதி, இரண்டாவது முகலாய மன்னனான ஹுமாயூனின் காலத்தில், பஷ்தூன் ஷேர் ஷா சூரி என்பவரால் கைப்பற்றப்பட்டது.

Remove ads

பெயர்க்காரணம்

பாபர் நிறுவிய இப்பேரரசை அப்போதைய வரலாற்றாளர்கள் தைமூரியப் பேரரசு என்று தான் எழுதியுள்ளனர்.[32] இப்பெயர் பாபரின் அரசமரபின் பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. முகலாயர்களும் தைமூரியப் பேரரசு எனும் பெயரை உபயோகிப்பதையே விரும்பினர்.[33]

முகலாயர்கள் தங்களது அரசமரபை குர்கானி (Persian: گورکانیان, குர்கானியன், பொருள் "மாப்பிள்ளைகள்") என்று அழைத்தனர்.[34] "மங்கோல்" என்ற வார்த்தை அரேபிய மற்றும் பாரசீக மொழிகளில் மருவியதால் "முகல்" என்ற வார்த்தை உருவானது. இப்பெயர் தைமூர் வம்சத்தின் மங்கோலிய பூர்வீகத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது.[35] முகல் என்ற வார்த்தை 19 ஆம் நூற்றாண்டின் போது பரவலாக பயன்பாட்டிற்கு வந்தது எனக் கூறப்படுகிறது. எனினும் இந்தியவியலாளர்கள் இதை மறுக்கின்றனர்.[36] முகலாயப் பேரரசைக் குறிக்க "மொகுல்" என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டது.[37][38] இருப்பினும், பாபரின் முன்னோர்கள் பாரம்பரிய மங்கோலியர்கள் கிடையாது. அவர்கள் பாரசீகக் கலாச்சாரத்தைப் பின்பற்றியவர்கள் ஆவர். துருக்கிய-மங்கோலியக் கலாச்சாரத்தை அவர்கள் பின்பற்றவில்லை.[39]

பேரரசின் மற்றொரு பெயர் இந்துஸ்தான் ஆகும். இப்பெயர் அயின்-இ-அக்பரி (அக்பரின் நிர்வாகம்) என்ற நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பேரரசின் அலுவல் ரீதியான பெயருக்கு இணையான பெயர் என்று இந்துஸ்தான் என்ற பெயரை பற்றி விளக்கப்பட்டுள்ளது.[40] மேற்கத்திய உலகில் "முகல்" என்ற சொல் பேரரசரைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. அதுவே பேரரசையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[41]

Remove ads

முகலாயப் பேரரசர்கள்

மேலதிகத் தகவல்கள் பேரரசன், ஆட்சியேற்பு ...

* ஆப்கானிய ஆட்சி (சேர் சா சூரியும், வழி வந்தோரும்)

வரலாறு

பாபர் மற்றும் ஹுமாயூன் (1526–1556)

Thumb
முகலாயப் பேரரசைத் தோற்றுவித்த பாபர் மற்றும் அவரது வீரர்கள் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள ஒரு இந்துக் கோயிலுக்கு வருகை புரிகின்றனர்.

முகலாயப் பேரரசைத் தோற்றுவித்த பாபர் முதலில் பெர்கானா என்னும் சமவெளியில் உள்ள நாட்டையே ஆண்டு வந்தார். இவரது முன்னோர்கள் ஆண்டு வந்த சாமர்கண்ட் பகுதியை மீண்டும் பிடிக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் தன்னுடைய பெர்கானாப் பள்ளத்தாக்கையும் இழந்ததால் இந்துகுஷ் மலையைத் தாண்டி வந்து காபூலைப் பிடித்து ஒரு சிற்றரச ஆட்சியை நிறுவினார். இவரது முன்னோர் காலத்தில் தைமூரின் கீழ் பஞ்சாப் பகுதியைத் திருப்பிக் கொடுக்கும்படி தில்லி சுல்தானான இப்ராகிம் லோடியை பாபர் வேண்டினார். அதற்கு தில்லி சுல்தான் மறுத்தார். இதனால் ஏற்பட்ட பானிப்பட் போரில் ஒரு இலட்சம் வீரர்களைக் கொண்ட தில்லி சுல்தானின் சேனையை வென்று முகலாயப் பேரரசை தோற்றுவித்தார். ராஜபுத்திரர்களையும் ஆப்கானியர்களையும் வென்று வட இந்தியாவில் பேரரசர் ஆனார்.

இவர் தன் இறுதிக்காலங்களில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்ட பாபரின் தங்கையின் கணவரான மாது காஜ்வா தன்னை அரசராக்கி கொள்ளலாம் என நினைத்திருந்தார். ஆனால் பாபரின் மகனான ஹூமாயூனால் இது தடைப்பட்டது. இவரின் ஆட்சிக்குப் பின் இவரது மகனான ஹுமாயூன் (ஆட்சிக்காலம் 1530–1556) ஆட்சிக்கு வந்தார். ஆனால் கலகம் காரணமாக அவர் பாரசீகத்தில் தஞ்சமடைந்தார். முகலாய ஆட்சியை சிறிது காலத்திற்கு சேர் சா சூரி (ஆட்சிக்காலம் 1540–1545) ஆல் நிறுவப்பட்ட சூர் பேரரசு (1540–1555) தடைபடுத்தியது.[42] ஹுமாயூன் பாரசீகத்தில் தஞ்சம் அடைந்ததன் காரணமாக சஃபாவிட் மற்றும் முகலாய அவைகளுக்கு இடையில் அரசியல் ரீதியான உறவு உருவானது. இதன் காரணமாக முகலாயப் பேரரசில் பாரசீகக் கலாச்சாரத் தாக்கமானது அதிகமானது.[சான்று தேவை] 1555 இல் பாரசீகத்திலிருந்து வெற்றிகரமாகத் திரும்பிய ஹுமாயூன் முகலாய ஆட்சியை மீண்டும் நிறுவினார். ஆனால் அடுத்த வருடம் நிகழ்ந்த விபத்தில் அவர் இறந்தார்.[42]

அக்பர் முதல் ஔரங்கசீப் வரை (1556–1707)

ஜலாலுதீன் முகமது[43] என்ற இயற்பெயருடைய அக்பர் (ஆட்சிக்காலம் 1556–1605) ராஜபுத்திரர்களின் உமர்கோட் கோட்டையில்,[44] ஹுமாயூனுக்கும் அவரது மனைவியான பாரசீக இளவரசி ஹமீதா பானு பேகத்திற்கும் மகனாக பிறந்தார்.[45] அக்பர், பைரம் கான் என்ற பிரதிநிதியின் கீழ் அரியணை ஏறினார். பைரம் கான் இந்தியாவில் முகலாயப் பேரரசு ஒருங்கிணைய உதவினார். இராணுவ நடவடிக்கைகள் மற்றும் அரசியல் தொடர்புகள் மூலம் அனைத்து திசைகளிலும் பேரரசின் எல்லைகளை அக்பர் விரிவாக்கினார். கோதாவரி ஆற்றுக்கு வடக்கே இருந்த இந்திய துணைக்கண்டத்தின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளையும் அக்பர் கட்டுப்படுத்தினார்.[சான்று தேவை] அக்பர் தனக்கு விசுவாசமான சிறந்த ஆளும் வர்க்கத்தை உருவாக்கினார். நவீனமான நிர்வாகத்தை செயல்படுத்தினார். கலாச்சார முன்னேற்றத்திற்கு ஆதரவளித்தார். ஐரோப்பிய வணிக நிறுவனங்களுடன் வணிகத்தை அதிகப்படுத்தினார்.[42] இந்தியா வலிமையான மற்றும் ஸ்திரத் தன்மையுடைய பொருளாதாரத்தை நோக்கி முன்னேறியது. இதன் காரணமாக வணிக வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டது.[சான்று தேவை] அக்பர் தனது அவையில் சமய சகிப்புத் தன்மைக்கு அனுமதி அளித்தார். தனது பேரரசில் இருந்த சமூக-அரசியல் மற்றும் கலாச்சார வேறுபாடுகளை ஒரு புதிய மதத்தை உருவாக்கி அதன் மூலம் களைய முயன்றார். ஆட்சியாளரை வழிபடும் வலுவான பண்புகள் கொண்ட அந்த மதத்தின் பெயர் தீன் இலாஹி.[42] அக்பர் தனது மகனுக்கு ஒரு ஸ்திரத் தன்மையுடைய அரசை விட்டு சென்றார். அவர் விட்டுச் சென்ற போது அரசானது அதன் பொற்காலத்தில் இருந்தது. அதற்குப் பிறகு காலம் கழித்து தான் அரசியல் பலவீனங்கள் வெளிப்படத் தொடங்கின.[42]

அக்பர் ஆட்சியில் முகலாய அரசு விரிவாக்கத்தில் மால்வா (1562), குஜராத் (1572), வங்காளம் (1574), காபூல் (1581), காஷ்மீர் (1586) மற்றும் காண்டேஷ் (1601) ஆகியவைகள் மற்றப் பகுதிகளில் வெற்றி கொண்டவைகளில் அடங்கும். அக்பர் தான் வெற்றி பெற்ற ஒவ்வொரு மாகாணத்திலும் அவருடைய அதிகாரத்தின் கீழ் ஒரு ஆளுனரை நியமித்தார்.

சலீம்[46] என்ற இயற்பெயருடைய ஜஹாங்கீர் (ஆட்சிக்காலம் 1605–1627) அக்பருக்கும் அவரது மனைவியான இந்திய ராஜபுதன இளவரசி மரியம்-உஸ்-ஜமானிக்கும் மகனாகப் பிறந்தார்.[47] அவர் "போதை பொருளுக்கு அடிமையாகி இருந்தார். அரசின் செயல்பாடுகளை ஒதுக்கி வைத்தார். அவையிலிருந்த எதிர் அமைப்பினரின் செல்வாக்கின் கீழ் வந்தார்".[42] ஜஹாங்கீர் மற்றும் அவரது மனைவியான ராஜபுதன இளவரசி ஜகத் கோசைனிக்கு மகனாக ஷாஜகான் (ஆட்சிக்காலம் 1628–1658) பிறந்தார்.[46] ஷாஜகானின் ஆட்சியின்போது முகலாய அவையின் சிறப்புகள் அதன் உச்ச அளவை எட்டின. இதற்கு எடுத்துக்காட்டாக நாம் தாஜ்மஹாலை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வரவை விட அவையை நடத்தும் செலவு அதிகமாக இருந்தது.[42]

Thumb
பல்வேறு மத நம்பிக்கைகளை கொண்டவர்களின் கூட்டத்தை அக்பர் பதேபூர் சிக்ரியின் இபாதத் கானாவில் நடத்துகிறார்.

ஒளரங்கசீப் (ஆட்சி காலம்:1658-1707) முகலாயப் பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். ஷாஜகான் மற்றும் மும்தாஜ் தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ஆலம்கீர் (பாரசீக மொழியில் ’ஆலம்கீர்’ எனில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் எனப் பொருள்) என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சிக் காலம் கி.பி. 1658 இலிருந்து கி.பி. 1707 வரையாகும். இவரது ஆட்சிக் காலத்தில் முகலாயப் பேரரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்து விரிந்திருந்தது. இந்தியாவை ஒருங்கிணைத்து, திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். முகலாய மன்னர்களில் அக்பரும், ஒளரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள்.

ராஜபுத்திரர்கள் சில காலங்களாக முகலாயப் பேரரசோடு நட்புறவு கொண்டே இருந்தனர். ஆனால் ஒளரங்கசீப் ஆட்சியில் நிலை மாறியது. ஒளரங்கசீப் மேவார் நாட்டு அரசர் இறந்தவுடன் அவரது இரண்டு மகன்களையும் இஸ்லாத்தை  தழுவச் சொல்லி வற்புறுத்தினார். இதனால் ராஜபுத்திரருக்கும் முகலாயருக்கும் பெரும்பகை ஏற்பட்டது. இரண்டு தரப்புமே மற்ற தரப்பு மதத்தின் வழிபாட்டு இடங்களை இடித்தனர். சீக்கியர் மதகுருவான குரு தேக் பகதூர், ஒளரங்கசீப்பை எதிர்த்ததால் அவருக்கு ஒளரங்கசீப் மரணதண்டனை கொடுத்துக் கொன்றார்.

இவரது சமகாலத்தில் பேரரசர் சிவாஜி தக்காணத்தில் பலமிக்க மராட்டியப் பேரரசை நிறுவியிருந்தார். இவரின் ஆட்சியில் மராட்டிய மன்னர் சிவாஜி இறந்ததால் மராட்டியர் நாட்டைப் பிடித்ததோடு, சிவாஜியின் மகனான சம்பாஜியைச் சிறைப் பிடித்தார். சம்பாஜியின் மகனான சாகுஜிவைக் கவனித்து வந்த இராசாராமோடு போரிட்டு, மராட்டியத்தில் சில கோட்டைகளை ஒளரங்கசீப் பிடித்துக் கொண்டார். இராசாராம் தமிழகத்தில் இருந்த செஞ்சிக் கோட்டைக்கு வந்துவிட்டார். இவ்வாறு சிவாஜியின் கீழ் இருந்த மராட்டியரோடு, ஏறக்குறைய தென்னிந்தியாவில் 25 வருடங்களுக்கு மேலாக ஒளரங்கசீப் பல போர்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. மேலும் மராட்டியப் பேரரசின் பல கோட்டைகளைப் பிடிக்க எண்ணி, முடியாத ஒளரங்கசீப் அந்த மனவருத்தத்தாலேயே ஆமத் நகரில் இறந்தார். பேரரசர் தெற்கே வந்ததால் வட இந்தியாவில் முகலாயப் பேரரசு சிதைய ஆரம்பித்து நாளடைவில் மறைந்தது.

வீழ்ச்சி (1707–1857)

Thumb
1650 இல் முகலாய அவையில் பேரரசர் ஷாஜகான் மற்றும் இளவரசன் அவுரங்கசீப்

அவுரங்கசீப்பின் மகன் முதலாம் பகதூர் ஷா தனது தந்தையின் மதக் கொள்கைகளை நீக்கினார். நிர்வாகத்தை சீர்படுத்த முயற்சித்தார். "எனினும் 1712 இல் அவரது இறப்பிற்குப் பிறகு முகலாய அரசமரபானது குழப்பம் மற்றும் வன்முறை சண்டைகளில் மூழ்கியது. 1719 இல் மட்டும் நான்கு பேரரசர்கள் வெற்றிகரமாக அரியணை ஏறினர்".[42]

முகம்மது ஷாவின் (ஆட்சிக்காலம் 1719–1748) ஆட்சிக் காலத்தின்போது பேரரசானது உடைய ஆரம்பித்தது. நடு இந்தியாவின் பெரும் நிலங்கள் முகலாயர்கள் கையிலிருந்து மராத்தியர்களின் கைக்கு மாறியது. பெரும்பாலான மேற்காசியா, காக்கேசியா மற்றும் நடு ஆசியா ஆகியவற்றின் மீது ஈரானிய ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்டிய நாதிர் ஷா கடைசியாக இந்தியாவின் மீது படையெடுத்து டில்லியை சூறையாடினார். எஞ்சியிருந்த முகலாய சக்தி மற்றும் மதிப்பை இல்லாமல் ஆக்கினார். பேரரசின் சக்தி வாய்ந்த ஆளும் வர்க்கத்தினர் தங்களது பிரச்சினைகளை தாங்களே கவனித்துக் கொள்ளவும், பேரரசில் இருந்து உடைந்து சுதந்திரமான ராஜ்ஜியங்களை அமைத்துக் கொள்ளவும் முயன்றனர்.[சான்று தேவை] ஆனால் சுகதா போசு மற்றும் ஆயிசா சலால் ஆகிய வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி முகலாயப் பேரரசர் அனைவருக்கும் உயர்ந்த தலைவராக இருந்தார். முஸ்லிம் உயர்குடியினர் மட்டுமல்லாது, மராத்தியர்கள், இந்துக்கள் மற்றும் சீக்கிய தலைவர்களும் இந்தியாவின் தலைவர் முகலாயப் பேரரசர் தான் என்று குறிக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.[48]

அதே நேரத்தில் மேலும் மேலும் உடைந்து கொண்டிருந்த முகலாய பேரரசின் மாகாண அரசியல் அமைப்புகள் தங்களையும் தங்களது அரசையும் உலக அளவிலான போர்களில் ஈடுபடுத்தின. ஆனால் அதில் தோல்வியும் நிலப்பகுதிகளை இழப்பதும் தான் நடந்தது. உதாரணமாக கர்நாடக மற்றும் வங்காளப் போர்களைப் பற்றிக் குறிப்பிடலாம்.

முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலம் (1759–1806) முகலாயப் பேரரசின் வீழ்ச்சியைத் தடுக்க முயற்சிகள் செய்தார். ஆனால் கடைசியில் ஆப்கானிஸ்தானின் அமீரான அப்தாலின் பாதுகாப்பை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இது 1761 ஆம் ஆண்டு அப்தாலி தலைமையிலான ஆப்கானியர்களுக்கும் மராத்திய பேரரசுக்கும் இடையில் மூன்றாம் பானிபட் போருக்கு வழி வைத்தது. 1771 இல் மராத்தியர்கள் தில்லியை ஆப்கானியர்களிடம் இருந்து கைப்பற்றினர். 1784 இல் மராத்தியர்கள் அதிகாரப்பூர்வமாக தில்லியில் இருந்த பேரரசரின் பாதுகாப்பாளர்களாக மாறினார்.[49] இந்த நிலை மூன்றாம் ஆங்கிலேய மராத்திய போர் வரை நீடித்தது. அதன் பிறகு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தில்லியில் இருந்த முகலாய அரசமரபின் பாதுகாவலர்களாக மாறியது.[48] உள்ளூர் ஆட்சியான நிசாமத் ஆட்சியை நீக்கிய பிறகு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனி முன்னாள் முகலாய மாகாணமான வங்காளம்-பீகாரை தனது கட்டுப்பாட்டுக்குள் 1793 இல் கொண்டு வந்தது. 1858 வரை இந்நிலை நீடித்தது. இந்திய துணைக்கண்டத்தின் மீதான பிரிட்டனின் காலனி ஆதிக்க காலத்தின் தொடக்கமாக இந்நிகழ்வு கருதப்படுகிறது. 1857 இல் பெரும்பாலான முன்னாள் முகலாய இந்தியாவின் பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. 1857–1858 இல் நடந்த போருக்கு பகதூர்ஷா ஜாஃபர் பெயரளவுக்கு தலைமை தாங்கினார். ஆனால் போரில் தோல்வியுற்றார். இதன் பிறகு 1858 இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கடைசி முகலாயரான அவரை பதவியிறக்கி நாடு கடத்தியது. இந்திய அரசுச் சட்டம் 1858 இன் படி பிரித்தானிய அரச குடும்பம் கிழக்கிந்திய கம்பெனி கட்டுப்படுத்திய இந்தியப் பகுதிகளை தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இதுவே பிரித்தானிய ராஜ் என அழைக்கப்பட்டது. 1876 இல் பிரித்தானிய ராணி விக்டோரியா இந்தியாவின் பேரரசி என்ற பட்டத்தைப் பெற்றார்.

வீழ்ச்சிக்கான காரணங்கள்

ஒரு நூற்றாண்டு வளர்ச்சி மற்றும் செழிப்புக்குப் பிறகு 1707 மற்றும் 1720 க்கு இடையில் முகலாயப் பேரரசு திடீரென வீழ்ச்சி அடைந்ததற்கான பல்வேறு காரணங்களை வரலாற்றாளர்கள் கொடுத்துள்ளனர். பொருளாதார ரீதியாக அரியணையில் இருந்தவர்கள் அவர்களது தலைமை அதிகாரிகள், அமீர்கள் (உயர்குடியினர்) மற்றும் அவர்களது பரிவாரங்களுக்கு வழங்கத் தேவையான வரவுகளை இழந்தனர். பல்வேறு பகுதிகளில் சிதறியிருந்த ஏகாதிபத்திய அதிகாரிகள் அதிகார மையம் மீது நம்பிக்கை இழந்திருந்தனர். உள்ளூரில் செல்வாக்கு மிகுந்த நபர்களுடன் தங்களது ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டனர். இதன் காரணமாக பேரரசு தனது அதிகாரத்தை இழந்தது. அதிக ஆக்ரோசம் உடைய மராத்தியர்களுக்கு எதிராக நீண்ட வீண் யுத்தங்களை புரிந்ததால் முகலாய ஏகாதிபத்திய இராணுவம் தனது போர் உணர்வை இழந்து இருந்தது. கடைசியாக அரியணையை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியான வன்முறை நிறைந்த அரசியல் சண்டைகள் நடைபெற ஆரம்பித்தன. 1719 இல் பேரரசர் பருக்சியார் கொல்லப்பட்ட பிறகு முகலாயப் பேரரசின் உள்ளூர் மாகாண அரசுகள் ஒன்றன் பின் ஒன்றாக தங்களது அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டன.[50]

அப்போதைய வரலாற்றாளர்கள் பேரரசின் இந்த சிதைவைக் கண்டு புலம்பினர். அவர்களின் இந்த கருத்துக்களை முதல் பிரித்தானிய வரலாற்றாளர்கள் எடுத்துக்கொண்டு பிரிட்டன் தலைமையிலான ஒரு மறுமலர்ச்சி தேவை என்பதை அடிக்கோடிட்டு காட்ட அதனை பயன்படுத்திக் கொண்டனர்.[51]

வீழ்ச்சியைப் பற்றிய தற்போதைய பார்வைகள்

1970களில் இருந்து வரலாற்றாளர்கள் வீழ்ச்சி பற்றி பல்வேறு கோணங்களில் கூறியுள்ளனர். ஆனால் எது வீழ்ச்சிக்கு முக்கியமான காரணி என்பதற்கு அவர்கள் சிறிதளவே முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். உளவியல் ரீதியான விளக்கங்கள் படி, ஆளும் வர்க்கத்தில் ஏற்பட்ட சீரழிவு, அதிகப்படியான ஆடம்பரம் மற்றும் அதிகரித்துக் கொண்டு வந்த குறுகிய மனப்பான்மைகள் ஆகியவை வெளிப்புற சவால்களுக்கு ஆட்சியாளர்களை தயார் இல்லாதவர்களாக ஆக்கியிருந்தது. அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை அடிப்படையாக கொண்ட இர்ஃபான் ஹபீப் தலைமையிலான மார்க்சிய சிந்தனையாளர்கள், விவசாயிகள் அதிகப்படியாக சுரண்டப்பட்டதை காரணமாகக் கூறுகின்றனர். இதன் காரணமாக சாதாரண மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். அவர்கள் ஆளும் வர்க்கத்தை ஆதரிக்கத் தயாராக இல்லை.[52] கரேன் லியோனார்ட் என்ற வரலாற்றாசிரியர், ஆளும் வர்க்கத்தினரால் இந்து வங்கியாளர்களுடன் பணியாற்றுவதில் ஏற்பட்ட தோல்வியைக் காரணமாகக் கூறுகிறார். ஏனெனில் இந்து வங்கியாளர்களின் நிதி ஆதரவு அதிகப்படியாகத் தேவைப்பட்டது. அந்த வங்கியாளர்கள் பின்னர் மராத்தியர் மற்றும் பிரித்தானியர்களுக்கு உதவி புரிந்தனர்.[53] மதரீதியாகக் கொடுக்கப்படும் விளக்கப்படி, சில அறிஞர்கள் இந்து சக்திகள் முஸ்லிம் அரச மரபின் ஆட்சிக்கு எதிராகப் புரட்சி செய்தனர் என்று கூறுகின்றனர்.[54] கடைசியாக மற்ற அறிஞர்களின் கூற்றுப்படி, பேரரசின் செழிப்பானது மாகாணங்கள் அதிகப்படியான தன்னாட்சியை அடைய உதவிகரமாக இருந்தது. இதனால் ஏகாதிபத்திய அவையானது பலவீனம் அடைந்தது.[55]

ஜெப்ரே ஜி. வில்லியம்சன் என்ற வரலாற்றாளர், முகலாயப் பேரரசின் வீழ்ச்சியின் மறைமுகத் தாக்கம் காரணமாக பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் இந்திய பொருளாதாரமானது தொழில்மயமழிதல் காரணமாக வீழ்ச்சியை சந்தித்தது என்கிறார். பின்னர் பிரித்தானிய ஆட்சியின் காரணமாக மீதமிருந்த தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.[56] மேலும் வில்லியம்சனின் கூற்றுப்படி, முகலாயப் பேரரசின் வீழ்ச்சியானது விவசாய உற்பத்தியில் வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது. தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய சம்பளம் அதிகமானது. பிறகு ஜவுளிகளின் விலை அதிகமானது. இது பிரிட்டன் உயர்ந்த தொழிற்சாலை தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் முன்னரே இந்தியா உலக ஜவுளித் துறையில் தனது பங்கை பிரிட்டனிடம் இழக்கும் நிலைக்கு இட்டுச் சென்றது.[57] எனினும் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இந்திய ஜவுளிகள் பிரித்தானிய ஜவுளிகளுடன் போட்டி போட்டு வெல்லும் தரத்திலேயே இருந்தன.[58]

Remove ads

நிர்வாகப் பிரிவுகள்

சுபா (உருது: صوبہ) என்பது முகலாயப் பேரரசின் மாகாணத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லாகும். இச்சொல் அரபு மொழியில் இருந்து பெறப்பட்டது. மாகாணத்தின் ஆளுநர் சுபேதார் என்று அழைக்கப்பட்டார். (சிலநேரங்களில் ஆளுநரும் "சுபா" என்றே அழைக்கப்பட்டார்[59]). இந்திய இராணுவத்தில் உள்ள அதிகாரியை அழைப்பதற்கும் இதே சுபேதார் என்ற வார்த்தை தான் பிற்காலத்தில் பயன்பாட்டுக்கு வந்தது. சுபாக்கள், பாட்ஷா (பேரரசர்) அக்பரால் அவரது 1572–1580 ஆம் ஆண்டு நிர்வாக சீர்திருத்தங்களின் போது நிறுவப்பட்டன. ஆரம்பத்தில் 12 சுபாக்கள் மட்டுமே இருந்தன. ஆனால் அக்பரின் போர் வெற்றிகள் காரணமாக அவரது ஆட்சியின் முடிவின் போது சுபாக்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. சுபாக்கள் பிரிக்கப்பட்டு அவை சர்க்கார்கள் அல்லது மாவட்டங்கள் என்று அழைக்கப்பட்டன. சர்க்கார்கள் மேலும் பிரிக்கப்பட்டு பர்கனாக்கள் அல்லது மஹால்கள் என்று அழைக்கப்பட்டன. அக்பரின் வழிவந்தவர்கள், குறிப்பாக அவுரங்கசீப் தனது படையெடுப்புகள் மூலம் சுபாக்களின் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தினார். 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முகலாயப் பேரரசு வீழ்ச்சி அடைய ஆரம்பித்தபோது பல சுபாக்கள் சுதந்திரமானவையாக மாறின அல்லது மராத்தியர்கள் அல்லது பிரித்தானியர்களால் வெல்லப்பட்டன.

அக்பரின் நிர்வாகச் சீர்திருத்தம் காரணமாக உருவாக்கப்பட்ட 12 சுபாக்கள்:

  • ஆக்ரா சுபா
  • அஜ்மீர் சுபா
  • அவாத் சுபா
  • வங்காள சுபா
  • பீகார் சுபா
  • டில்லி சுபா
  • குஜராத் சுபா
  • காபூல் சுபா
  • இல்லாகாபாத் சுபா
  • லாகூர் சுபா
  • மால்வா சுபா
  • முல்தான் சுபா
Remove ads

பொருளாதாரம்

முகலாயப் பேரரசின் கீழ் இந்தியப் பொருளாதாரமானது பெரியதாகவும் மற்றும் வளமானதாகவும் இருந்தது.[60] முகலாய சகாப்தத்தின் போது கி. பி. 1600 இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது உலகப் பொருளாதாரத்தில் 22% ஆக இருந்தது. அந்நேரத்தில் மிங் அரசமரபால் ஆளப்பட்ட சீனாவிற்கு பிறகு உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாக அது இருந்தது. ஐரோப்பாவின் பொருளாதாரத்தை விட பெரியதாக இந்தியாவின் பொருளாதாரம் இருந்தது. 1700 இல் முகலாய இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது உலக பொருளாதாரத்தில் 24% ஆக அதிகரித்தது. அந்நேரத்தில் இந்திய பொருளாதாரம் தான் உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக இருந்தது. கிங் அரசமரபால் ஆளப்பட்ட சீனா மற்றும் மேற்கு ஐரோப்பா ஆகிய இரண்டையும் விட இந்தியப் பொருளாதாரம் பெரியதாக இருந்தது.[61] உற்பத்தித்துறையில் உலகிலேயே முதல் நாடாக முகலாய இந்தியா இருந்தது.[26] பதினெட்டாம் நூற்றாண்டு வரை உலகின் மொத்த தொழில்துறை உற்பத்தியில் 25% இந்தியாவில் இருந்துதான் பெறப்பட்டது.[27] இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முகலாயப் பேரரசின் கீழ் அதிகமாக இருந்தது. முகலாய சகாப்தத்திற்கு முந்தைய 1,500 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வேகமாக வளர்ந்தது .[61] முகலாய இந்தியாவின் பொருளாதார வடிவமானது தொழில்மயமாக்கப்படுவதற்கு முந்தைய பொருளாதார வடிவம் என விளக்கப்படுகிறது. இது பதினெட்டாம் நூற்றாண்டிற்கு முந்தைய, தொழிற்புரட்சிக்கு முந்தைய மேற்கு ஐரோப்பாவின் பொருளாதார வடிவத்துடன் ஒப்பிடப்படுகிறது.[62]

நீண்ட சாலை அமைப்பு, ஒரு சீரான பணம் உருவாக்கப்பட்டதற்கும் மற்றும் நாடு ஒருங்கிணைக்கப்பட்டதற்கும் முகலாயர்கள் தான் காரணம்.[10]:185–204 முகலாயப் பேரரசில் விரிவான சாலை அமைப்பு இருந்தது. பொருளாதார உள்கட்டமைப்புக்கு இது மிகவும் உதவியாக இருந்தது. முகலாயர்களால் அமைக்கப்பட்ட பொதுப்பணித்துறை இச்சாலைகளை அமைத்தது. பொதுப்பணித்துறையானது பேரரசு முழுவதும் இருந்த பட்டணங்கள் மற்றும் நகரங்களை இணைக்கும் சாலைகளை வடிவமைத்து உருவாக்கி பராமரித்தது. இதன் காரணமாக வணிகமானது எளிதாக நடைபெற்றது .[60]

பேரரசின் மொத்த செல்வ வளத்திற்கும் அடிப்படை காரணமாக இருந்தது விவசாய வரிகளாகும். இவை மூன்றாம் முகலாயப் பேரரசர் அக்பரால் கொண்டு வரப்பட்டன.[24][25] விவசாய உற்பத்தியாளரின் உற்பத்தியில் பாதிக்கும் மேல் இருந்த இந்த வரிகள்,[63] நன்றாக ஒழுங்குபடுத்தப்பட்ட வெள்ளி பணத்தில் செலுத்தப்பட்டன.[22] இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் கலைஞர்களால் பெரிய சந்தைகளுக்குள் நுழைய முடிந்தது.[64]

நாணயங்கள்

முகலாயர்கள் குறுகிய காலமே ஆட்சி செய்த சூர் பேரரசின் சேர் சா சூரியின் ரூபாய் (வெள்ளி) மற்றும் டாம் (செம்பு) பணங்களை தரப்படுத்தி பின்பற்றினர்.[65] அக்பரின் ஆட்சியின் போது ஒரு ரூபாயின் மதிப்பு 48 டாம்களாக இருந்தது. 1580களில் அது 38 ஆக குறைந்தது. 17ஆம் நூற்றாண்டில் டாமின் மதிப்பு மேலும் அதிகரித்தது. வெண்கலப் பீரங்கிகள் மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் என செம்பிற்கான புதிய தொழில்துறை பயன்பாடுகள் காரணமாக டாமின் மதிப்பு இவ்வாறு அதிகரித்தது. ஆரம்பத்தில் அக்பரின் காலத்தில் டாம் தான் பொதுவான நாணயமாக இருந்தது. ஆனால் அதற்கு பின் வந்த ஆட்சிக்காலங்களில் ரூபாய் பொதுவான நாணயமாக மாறியது.[10] ஜஹாங்கீரின் ஆட்சிக்காலத்தின் முடிவின் போது ஒரு ரூபாய்க்கு 30 டாம்கள் சமம் என மதிப்பிருந்தது. 1660 களில் ஒரு ரூபாய்க்குப் 16 டாம்கள் சமம் என டாமின் மதிப்பு அதிகரித்து இருந்தது.[66] முகலாயர்கள் நாணயங்களை அதிக கலப்படமில்லாமல் அச்சிட்டனர். உலோகத்தின் சுத்த தன்மையானது 96% க்கு கீழே குறையாமல் அச்சடித்தனர். 1720 கள் வரை கலப்படமே இல்லாமல் அச்சடித்தனர்.[67]

இந்தியாவிடம் அதற்கெனத் தங்கம் மற்றும் வெள்ளி இருப்புகள் இருந்தபோதிலும் முகலாயர்கள் சிறிதளவு தங்கத்தையே உற்பத்தி செய்தனர். பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியில் இருந்தே நாணயங்களை அச்சடித்தனர். பேரரசின் வலிமையான ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமும் இதற்கு உறுதுணையாக இருந்தது. உலக அளவில் இந்திய விவசாய மற்றும் தொழில்துறை பொருட்களுக்கான தேவையானது இந்த விலை உயர்ந்த உலோகங்களை இந்தியாவிற்குள் வர வைத்தது.[10] முகலாய இந்தியாவின் இறக்குமதியில் 80% விலையுயர்ந்த உலோகங்களாக இருந்தன. அந்த 80%லும் பெரும் பகுதி வெள்ளியாகத் தான் இருந்தது.[68] புதிய உலக நாடுகள் மற்றும் ஜப்பானில் இருந்து முகலாய இந்தியா விலையுயர்ந்த உலோகங்களை இறக்குமதி செய்தது.[67] மாறாக அந்நாடுகள் பெருமளவில் ஜவுளி மற்றும் பட்டு ஆடைகளை வங்காள சுபா மாகாணத்தில் இருந்து இறக்குமதி செய்தன.[10]

தொழிலாளர்கள்

17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முகலாயப் பேரரசில் இருந்தவர்களில் 64% பேர் முதல் நிலை துறையிலும் (விவசாயம் உட்பட), 11%க்கும் மேற்பட்டோர் இரண்டாம்நிலை துறையிலும் (உற்பத்தித்துறை) மற்றும் சுமார் 25% பேர் மூன்றாம் நிலை துறையிலும் (சேவைத்துறை) பணி புரிந்தனர்.[69] முகலாய இந்தியாவில் முதல் நிலை துறையைத் தவிர மற்ற துறைகளில் வேலை பார்த்தவர்களின் சதவீதமானது ஐரோப்பாவை விட அந்நேரத்தில் அதிகமாக இருந்தது. 1700 இல் ஐரோப்பாவில் விவசாயத் துறையில் வேலை பார்த்தவர்களின் சதவீதமானது 65% முதல் 90% ஆகும். 1750 இல் இந்த சதவீதமானது 65% முதல் 75% ஆக இருந்தது. 1750 இல் சுமார் 65% பேர் இங்கிலாந்தில் விவசாயத் துறையில் வேலை புரிந்தனர்.[70] வரலாற்றாளர் சிரீன் மூஸ்வியின் மதிப்பீட்டின்படி 16ஆம் நூற்றாண்டில் முகலாயப் பொருளாதாரத்திற்கு முதல் நிலை துறை 52%, இரண்டாம் நிலை துறை 18% மற்றும் மூன்றாம் நிலை துறை 29% பங்களிப்பைக் கொடுத்தன. இரண்டாம் நிலைத் துறையின் பங்களிப்பு சதவீதமானது ஆரம்பகால இருபதாம் நூற்றாண்டு பிரித்தானியாவின் இந்தியாவின் பங்களிப்பை விட அதிகமாக இருந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இரண்டாம் நிலை துறையானது பிரித்தானிய இந்தியாவின் பொருளாதாரத்திற்கு 11% பங்களிப்பை கொடுத்தது.[71] கிராமப்புற மற்றும் நகர்ப்புறத் தொழிலாளர்களின் பங்களிப்பைப் பார்ப்போமேயானால் முகலாய இந்தியாவின் தொழிலாளர்களில் 18% பேர் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்களாகவும், 82% பேர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். பொருளாதாரத்திற்கு நகர்ப்புற தொழிலாளர்கள் 52% பங்களிப்பையும் கிராமப்புற தொழிலாளர்கள் 48% பங்களிப்பையும் அளித்தனர்.[72]

18ம் நூற்றாண்டில் முகலாய வங்காளம் மற்றும் தென்னிந்தியாவின் தொழிலாளர் சம்பளம் மற்றும் வாழ்க்கை தரமானது பிரிட்டனை விட அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் ஐரோப்பாவில் உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நாடாக பிரிட்டன் தான் இருந்தது.[56][73] பொருளாதார வரலாற்றாளர் பால் பைரோச்சின் கூற்றுப்படி, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் சராசரி தனிநபர் மொத்த தேசிய உற்பத்தியானது பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஐரோப்பாவை விட அதிகமாக இருந்தது.[74][75] 1800 க்குப் பின்னர் மேற்கு ஐரோப்பாவின் சராசரி வருமானம் இந்தியா மற்றும் சீனாவை விட அதிகரிக்க ஆரம்பித்தது.[76] மூஸ்வியின் கூற்றுப்படி 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாய இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானமானது ஆரம்பகால 20 ஆம் நூற்றாண்டு பிரித்தானிய இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானத்தை விட 1.24% அதிகமாக இருந்தது .[77] எனினும் செல்வமானது ஆளும் வர்க்கத்திடம் சேரும் இந்த அமைப்பில் கூலித் தொழிலாளர்களுக்கான சம்பளமானது குறைவாகவே இருந்தது.[78] அந்நேரத்தில் ஐரோப்பாவில் கூலி தொழிலாளிகளுக்கு என்ன சம்பளமோ அதைவிட அதிகமாகவே இந்தியாவில் கூலித் தொழிலாளர்களுக்கான சம்பளம் இருந்தது.[73] முகலாய இந்தியாவில் கூலித் தொழிலாளர்கள் மீது பொதுவாக சகிப்புத் தன்மையுடைய அணுகுமுறையே இருந்தது. வட இந்தியாவில் இருந்த சில மத வழிபாட்டு முறைகள் கூலித் தொழிலாளர்களை உயர்ந்த நிலை உடையவர்கள் என உறுதிப்படுத்தி இருந்தன. அடிமைத்தனமானது பரவியிருந்த போதிலும் பெரும்பாலும் வீட்டு வேலை செய்பவர்கள் மட்டுமே அடிமைகளாய் இருந்தனர்.[78]

விவசாயம்

இந்தியாவின் விவசாய உற்பத்தி முகலாயப் பேரரசின் கீழ் அதிகரித்தது.[60] பல்வேறு வகையான பயிர்கள் விளைவிக்கப்பட்டன. கோதுமை, நெல் மற்றும் வாற்கோதுமை ஆகிய உணவு பயிர்கள், மற்றும் பஞ்சு, அவுரி மற்றும் அபினி ஆகிய உணவுப்பயிரல்லாத பணப்பயிர்கள் ஆகியவையும் விளைவிக்கப்பட்டன. பதினேழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து இந்திய விவசாயிகள் அமெரிக்கக் கண்டங்களில் இருந்து வந்த இரண்டு புதிய பயிர்களான சோளம் மற்றும் புகையிலையை அதிகமாகப் பயிர் செய்ய ஆரம்பித்தனர்.[60]

முகலாய நிர்வாகமானது விவசாய சீர்திருத்தங்கள் மீது கவனம் செலுத்தியது. இந்த சீர்திருத்தங்கள் முகலாயர் அல்லாத சேர் சா சூரியால் ஆரம்பிக்கப்பட்டன. அக்பர் இந்த சீர்திருத்தங்களை ஏற்று மேலும் பல சீர்திருத்தங்களுடன் அவற்றை முன்னெடுத்துச் சென்றார். சிவில் நிர்வாகமானது தகுதியின் அடிப்படையில் ஒரு படிநிலை முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.[5] முகலாய அரசாங்கமானது பேரரசு முழுவதும் நீர்ப்பாசன அமைப்புகளை கட்டுவதற்கு நிதி அளித்தது. இந்த அமைப்புகளால் பயிர்களின் மகசூல் மற்றும் லாபமானது அதிகரித்தது. இதன் காரணமாக விவசாய உற்பத்தி அதிகரித்தது.[60]

அக்பரால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கியமான முகலாய சீர்திருத்தமானது ஜப்த் என்று அழைக்கப்பட்ட புதிய நில வருவாய் அமைப்பாகும். அவர் இந்தியாவில் பொதுவாக இருந்ததும் மற்றும் தோகுகவா ஜப்பானில் அந்நேரத்தில் பயன்படுத்தப்பட்டதுமான திறை செலுத்தும் அமைப்பை மாற்றினார். ஒழுங்குபடுத்தப்பட்ட பணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பண வரி அமைப்பை கொண்டு வந்தார்.[67] இந்த வருவாய் அமைப்பானது பஞ்சு, அவுரி, கரும்பு, மரப் பயிர்கள் மற்றும் அபினி ஆகிய உயர் மதிப்புடைய பணப் பயிர்களுக்கு ஆதரவாக இருந்தது. இந்த பணப் பயிர்கள் சந்தையில் அவற்றின் தேவை அதிகரிப்பை பொருத்து பயிர் செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் இவற்றை பயிர் செய்ய அரசாங்கம் சலுகைகளையும் அளித்தது.[10] ஜப்த் அமைப்பின் கீழ் முகலாயர்கள் உழவு செய்யப்பட்ட நிலப்பகுதிகளை மதிப்பீடு செய்ய விரிவான நில அளவியலையும் செய்தனர். புதிய நிலப்பகுதிகளை விவசாய நிலங்களாக மாற்றுபவர்களை ஊக்குவிப்பதற்காக முகலாய அரசாங்கமானது குறிப்பிட்ட காலத்திற்கு வரியை ரத்து செய்ய முன்வந்தது.[67] விவசாய விரிவாக்கம் மற்றும் சாகுபடியானது அவுரங்கசீப் உள்ளிட்ட பிற்கால முகலாய பேரரசர்கள் காலத்திலும் தொடர்ந்தது. அவுரங்கசீப்பின் 1665 ஆம் ஆண்டு ஆணையானது பின்வருமாறு குறிப்பிடுகிறது: "பேரரசரின் முழு கவனமும், விருப்பங்களும் பேரரசின் மக்கள் தொகை மற்றும் சாகுபடி அதிகரிப்பு, அனைத்து விவசாயிகள் மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது."[79]

அந்நேரத்தில் முகலாய விவசாய முறைகளானவை ஐரோப்பிய விவசாய முறைகளை விட சில வழிகளில் முன்னேறி இருந்தன. உதாரணமாக விதைக் கலப்பையானது முகலாய இந்தியாவில் விவசாயிகளால் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இங்கிருந்தே அது ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.[80] உலகத்தின் ஒரு சராசரி விவசாயி சில பயிர்களை சாகுபடி செய்யும் திறமை பெற்றிருந்த சமயத்தில், சராசரி இந்திய விவசாயி பல்வேறு உணவு மற்றும் உண்ணத் தகாத பயிர்களையும் சாகுபடி செய்யும் திறமை பெற்றிருந்தார். இதன் காரணமாக இந்திய விவசாயியின் உற்பத்தி திறனும் அதிகமாக இருந்தது.[81] இந்திய விவசாயிகள் லாபத்தைக் கொடுக்கக் கூடிய புதிய பயிர்களான சோளம் மற்றும் புகையிலை ஆகியவற்றைப் புதிய உலகத்தில் இருந்து சீக்கிரமே பயிர் செய்யக் கற்றுக் கொண்டனர். 1600 மற்றும் 1650க்கு இடையில் முகலாய இந்தியாவில் இந்தப் பயிர்கள் பரவலாக சாகுபடி செய்யப்பட்டன. வங்காள விவசாயிகள் முசுக்கொட்டை சாகுபடி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு ஆகிய நுட்பங்களை சீக்கிரமே கற்றுக் கொண்டனர். இதன் காரணமாக வங்காள சுபா மாகாணம் உலகின் முக்கியமான பட்டு உற்பத்தி செய்யும் பிராந்தியமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.[10] சர்க்கரை ஆலைகள் முகலாயர் சகாப்தத்திற்கு சற்று முன்னரே இந்தியாவில் காணப்பட்டன. சர்க்கரை ஆலைக்கு தேவையான இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் 1540லேயே டில்லியில் காணப்பட்டன. அவை இன்னும் கூட சற்று முன்னரே பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். இந்த இயந்திரங்கள் வட இந்திய துணைக் கண்டத்திலேயே பொதுவாக பயன்படுத்தப்பட்டன. பற்சக்கரங்கள் கொண்ட சர்க்கரை ஆலைகள் முதன்முதலாக முகலாய இந்தியாவில் காணப்பட்டன. இந்த ஆலைகள் 17ஆம் நூற்றாண்டிலேயே உருளைகளை பயன்படுத்தும் கொள்கை மற்றும் திருகு பற்சக்கர இயக்கி ஆகியவற்றைப் பயன்படுத்தின.[82]

பொருளாதார வரலாற்று ஆய்வாளர்களான இம்மானுவேல் வாலர்ஸ்டெய்ன், இர்பான் ஹபீப், பெர்சிவல் ஸ்பியர் மற்றும் அசோக் தேசாய் ஆகியவர்கள் மேற்கோள் காட்டும் ஆதாரங்களின் படி 17 ஆம் நூற்றாண்டு முகலாய இந்தியாவின் தனிநபர் விவசாய உற்பத்தி மற்றும் நுகர்வு தரமானது 17 ஆம் நூற்றாண்டு ஐரோப்பா மற்றும் ஆரம்ப கால இருபதாம் நூற்றாண்டு பிரித்தானிய இந்தியாவை விட அதிகமாக இருந்தது.[83] விவசாய உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக உணவுப் பொருட்களின் விலையானது குறைந்தது. இதன் காரணமாக இந்திய ஜவுளித்துறை பலன் அடைந்தது. வெள்ளி நாணயங்களை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டின்படி ஒப்பிடும்போது தானியங்களின் விலையானது தென்னிந்தியாவில் பிரிட்டனை போல் பாதி அளவாகவும், வங்காளத்தில் மூன்றில் ஒரு பங்காகவும் இருந்தது. இதன் காரணமாக இந்திய ஜவுளிகளின் வெள்ளி நாணய விலையானது குறைவாகவே இருந்தது. எனவே உலகச் சந்தையில் குறைவான விலைக்கு விற்கப்பட்டதால் இந்திய ஜவுளிகளுக்கு அனுகூலம் கிடைத்தது.[73]

தொழில்துறை உற்பத்தி

பதினெட்டாம் நூற்றாண்டு வரை உலக வணிகத்தில் முகலாய இந்தியா தான் மிக முக்கியமான உற்பத்தி மையமாக இருந்தது.[26] 1750 வரை உலகின் மொத்த தொழில்துறை உற்பத்தியில் 25% இந்தியாவிலிருந்து தான் கிடைத்தது .[56] முகலாயப் பேரரசில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணப்பயிர்கள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டன. முக்கியமான துறைகளாக இருந்தவை ஜவுளி, கப்பல் கட்டுமானம் மற்றும் எஃகு ஆகியவையாகும். முகலாய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பொருட்கள் பஞ்சு ஆடைகள், நூல்கள், பட்டு, சணல் பொருட்கள், உலோகப் பொருட்கள், மற்றும் சர்க்கரை, எண்ணெய் மற்றும் வெண்ணெய் ஆகிய உணவுப் பொருட்கள் ஆகியவை ஆகும்.[60] 17 முதல் 18 ஆம் நூற்றாண்டுகளில் முகலாய சகாப்தத்தின் போது இந்திய துணைக்கண்டத்தில் உற்பத்தி தொழிற்சாலைகளின் வளர்ச்சியானது தொழில்மயமாக்கலுக்கு முந்தைய அமைப்பு என்று குறிப்பிடப்படுகிறது. இது தொழிற்புரட்சிக்கு முந்தைய பதினெட்டாம் நூற்றாண்டு மேற்கு ஐரோப்பாவுடன் ஒப்பிடப்படுகிறது.[62]

ஆரம்ப கால நவீன ஐரோப்பாவில், முகலாய இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அதிகமான தேவை இருந்தது. குறிப்பாக பஞ்சு ஆடைகள், நறுமணப் பொருட்கள், மிளகுத்தூள், அவுரி, பட்டு மற்றும் சால்ட்பீட்டர் (வெடி மருந்துகளில் பயன்படுத்தப்படுவதற்காக) ஆகிய பொருட்களுக்கு அதிகமான தேவை இருந்தது.[60] ஐரோப்பிய ஃபேஷனானது, உதாரணமாக முகலாய இந்தியாவின் ஜவுளிகள் மற்றும் பட்டு ஆடைகளைச் சார்ந்திருப்பது அதிகரித்தது. பிந்தைய 17 ஆம் நூற்றாண்டு மற்றும் ஆரம்ப கால 18 ஆம் நூற்றாண்டுகளின் போது ஆசியாவிலிருந்து பிரிட்டன் இறக்குமதி செய்த 95% பொருட்கள் முகலாய இந்தியாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டன. வங்காள சுபா மாகாணம் மட்டும் டச்சுக்காரர்கள் ஆசியாவில் இருந்து இறக்குமதி செய்த பொருட்களில் 40% ஐக் கொடுத்தது.[84] மாறாக முகலாய இந்தியாவில் ஐரோப்பிய பொருட்களுக்கான தேவை மிகக் குறைவாகவே இருந்தது. முகலாய இந்தியா தன்னிறைவு அடைந்து இருந்தது. சில கம்பளி ஆடைகள், பதப்படுத்தப்படாத உலோகங்கள் மற்றும் வெகு சில ஆடம்பரப் பொருட்கள் தவிர ஐரோப்பிய பொருட்களுக்கான தேவை முகலாய இந்தியாவில் இல்லாமல் இருந்தது. இந்த வணிக ஏற்றத்தாழ்வு காரணமாக தெற்காசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த ஐரோப்பியர்கள் பெருமளவில் தங்கம் மற்றும் வெள்ளியை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தனர்.[60] இந்தியப் பொருட்கள், குறிப்பாக வங்காளத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் பெருமளவிற்கு இந்தோனேசியா மற்றும் ஜப்பான் போன்ற ஆசிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.[10]

ஜவுளி துறை

Thumb
கி.பி. 1665 இல் மஸ்லின் அங்கிகளை அணிந்துள்ள முகலாய இளவரசர்கள்.

முகலாயப் பேரரசின் பெரிய உற்பத்தி தொழில் துறையானது ஜவுளி உற்பத்தி ஆகும். கலிகோக்கள் மற்றும் மஸ்லின்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்த பஞ்சு ஜவுளி உற்பத்தி துறையே இதில் பிரதானமாக இருந்தது. இந்த ஆடைகள் சாயமிடப்படாமலும் மற்றும் பல்வேறு வண்ணங்களிலும் கிடைத்தன. முகலாயப் பேரரசின் சர்வதேச வணிகத்தின் பெரும் பகுதிக்கு முக்கிய காரணமாயிருந்தது நெசவுத் தொழிற்துறையாகும்.[60] 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலக ஜவுளி வர்த்தகத்தில் இந்தியா 25% பங்கை கொண்டிருந்தது.[85] இந்திய பருத்தி ஆடைகளே பதினெட்டாம் நூற்றாண்டில் உலக வணிகத்தில் மிக முக்கியமான உற்பத்திப் பொருட்களாக இருந்தன. அமெரிக்கா முதல் ஜப்பான் வரை உலகெங்கிலும் இந்த ஆடைகள் பயன்படுத்தப்பட்டன.[26] 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா, அமெரிக்க கண்டங்கள், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பகுதிகள் முழுவதும் முகலாய இந்திய ஆடைகள் மக்களால் பயன்படுத்தப்பட்டன.[57] பஞ்சு உற்பத்தி செய்வதில் மிக முக்கியமான மையமாக இருந்தது வங்காள மாகாணம் ஆகும். குறிப்பாக அதன் தலைநகரான டாக்காவை சுற்றியிருந்த பகுதிகளில் பஞ்சு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டது.[86]

டச்சுக்காரர்கள் ஆசியாவில் இருந்து இறக்குமதி செய்ததில் 50%க்கும் மேற்பட்ட ஜவுளி ஆடைகள் மற்றும் 80% பட்டு ஆடைகள் வங்காளத்தில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டன.[84] வங்காள பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் ஐரோப்பா, இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகிய இடங்களுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன.[10]:202 டாக்காவில் தயாரிக்கப்பட்ட வங்காள மஸ்லின் ஆடைகள் நடு ஆசியாவில் விற்பனை செய்யப்பட்டன. அங்கு இவை டாக்கா ஜவுளிகள் என்று அழைக்கப்பட்டன.[86] இந்தியப் பெருங்கடல் வணிகத்தில் நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜவுளிகள், அட்லாண்டிக் பெருங்கடல் வணிகத்திலும் விற்பனையாயின. பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கு ஆப்பிரிக்க வணிகத்தில் 38% ஐ இந்திய ஜவுளிகள் கொண்டிருந்தன. இந்திய கலிகோ ஆடைகள் ஐரோப்பாவில் முக்கிய பொருளாக இருந்த சமயத்தில், இங்கிலாந்து பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தெற்கு ஐரோப்பாவுடன் செய்த வணிகத்தில் 20% இந்திய ஜவுளிகளாக இருந்தன.[56]

திருகு பற்சக்கர இயக்கி உருளை பருத்தி அரவை ஆலையானது 13-14 ஆம் நூற்றாண்டுகளில் தில்லி சுல்தானக சகாப்தத்தின் ஆரம்ப காலத்தில் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. இது முகலாய பேரரசில் 16 ஆம் நூற்றாண்டு வாக்கில் பயன்பாட்டுக்கு வந்தது.[82] இது இந்தியாவில் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.[87] மற்றொரு கண்டுபிடிப்பாக, பருத்தி அரவை ஆலையில் நழுவி வணரி இயங்கமைவானது தில்லி சுல்தானகத்தின் கடைசி காலம் அல்லது முகலாயப் பேரரசின் ஆரம்ப காலத்தில் இந்தியாவில் முதன்முதலாக இணைக்கப்பட்டது.[88] ஆரம்பத்தில் பஞ்சு உற்பத்தியானது பெரும்பாலும் கிராமங்களில் நூற்கப்பட்டிருக்கலாம். பிறகு அவை நூல் உருண்டைகளாக பட்டணங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு துணிகள் நெய்யப்பட்டன. நூற்புச் சக்கரத்தின் பரவலுக்கு பிறகு பஞ்சு ஆடை உற்பத்தியானது முன்னேற்றம் அடைந்தது. நூற்புச் சக்கரமானது முகலாய சகாப்தத்திற்கு சற்றே முன்னர் இந்தியாவில் பரவியது. இதன் காரணமாக நூல் உருண்டைகளின் விலை குறைந்தது. இது பருத்திக்கான தேவை அதிகமாக உதவி புரிந்தது. நூற்புச் சக்கரத்தின் பரவல், மற்றும் உருளை பருத்தி அரவை ஆலையில் திருகு பற்சக்கர இயக்கி மற்றும் நழுவி வணரி இயங்கமைவு பிடி ஆகியவற்றின் இணைப்பு காரணமாக முகலாய சகாப்தத்தின் போது இந்திய பருத்தி ஆடை உற்பத்தியானது பெருமளவு அதிகரித்தது.[89]

கப்பல் கட்டுமானத் துறை

முகலாய இந்தியா ஒரு பெரிய கப்பல் கட்டுமான தொழில் துறையை கொண்டிருந்தது. இந்தத் துறையும் பெரும்பாலும் வங்காள மாகாணத்தை மையமாகக் கொண்டுதான் அமைந்திருந்தது. பொருளாதார வரலாற்றாளர் இந்திரஜித் ரேயின் மதிப்பீடுகளின் படி 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் வங்காளத்தின் கப்பல் கட்டுமான துறையின் உற்பத்தி அளவானது வருடத்திற்கு 2,23,250 டன்களாக இருந்தது. அதேநேரத்தில் 1769 முதல் 1771 வரை வட அமெரிக்காவில் இருந்த பிரிட்டனின் 19 காலனிகளும் மொத்தமாக சேர்ந்து 23,061 டன்களையே உற்பத்தி செய்தன.[90] மேலும் அவர் வங்காளத்தின் கப்பல் பழுதுபார்க்கும் நுட்பமானது பெரும் அளவிற்கு முன்னேறி இருந்ததாகக் கூறுகிறார்.[90]

இந்திய கப்பல் கட்டுமானம், குறிப்பாக வங்காள கப்பல் கட்டுமானமானது அந்நேரத்தில் இருந்த ஐரோப்பிய கப்பல் கட்டுமானத் துறையை விட முன்னேறி இருந்தது. அந்த நேரத்தில் இந்தியர்கள் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு கப்பல்களை விற்றுக் கொண்டிருந்தனர். கப்பல் கட்டுமானத்தில் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாக இருந்தது வங்காள நெல் கப்பல்களில் ஃப்ளஸ் அடுக்கு வடிவமைப்பை அறிமுகப்படுத்தியதாகும். பாரம்பரிய ஐரோப்பிய கப்பல்கள் படி அடுக்கு வடிவமைப்பை கொண்டிருந்தன. ஐரோப்பிய கப்பல்களை விட இந்தியக் கப்பல்கள் வலிமையானதாகவும் மற்றும் கசியும் தன்மை மிகவும் குறைவானதாகவும் இருந்தன. 1760 களில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வங்காள நெல் கப்பல்களில் இருந்த ஃப்ளஸ் அடுக்கு வடிவமைப்பை தங்களது கப்பல்களிலும் பயன்படுத்த ஆரம்பித்தது. இதன் காரணமாக தொழில் புரட்சியின் போது ஐரோப்பிய கப்பல்களின் வலிமையும் கடலில் செல்லும் தன்மையும் அதிகரித்தது.[91]

வங்காள சுபா

Thumb
டாக்காவில் உள்ள கேரவன்சேராயின் சிதிலங்கள்.

1590 இல் முகலாயர்கள் கைப்பற்றியதிலிருந்து 1757 இல் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றும் வரை வங்காள சுபா மாகாணமானது செழிப்பானதாக இருந்தது.[92] இதுவே முகலாய பேரரசின் செழிப்பான மாகாணமாகும்.[93] இது முகலாயப் பேரரசின் பொருளாதார அதிகார மையமாக இருந்தது. முகலாயப் பேரரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% இந்த மாகாணத்தில் இருந்து தான் உற்பத்தி செய்யப்பட்டது.[94] உள்நாட்டு ரீதியாக, பெரும்பாலான இந்தியாவானது நெல், பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் ஆகிய வங்காள பொருட்களை சார்ந்தே இருந்தது. வெளிநாட்டு ரீதியாக, ஐரோப்பியர்கள் வங்காளப் பொருட்களான பருத்தி ஆடைகள், பட்டு மற்றும் அபினியை சார்ந்து இருந்தனர். ஆசியாவிலிருந்து டச்சுக்காரர்கள் இறக்குமதி செய்த மொத்த இறக்குமதியில் 40% வங்காளத்தில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டது. உதாரணமாக 50%க்கும் மேற்பட்ட ஜவுளிகள் மற்றும் சுமாராக 80% பட்டுகளும் இங்கு இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டன.[84] வங்காளத்திலிருந்து சால்ட்பீட்டர் ஐரோப்பாவுக்கு கப்பலில் அனுப்பப்பட்டது. அபினி இந்தோனேசியாவில் விற்கப்பட்டது. மூலப் பொருளான பட்டு ஜப்பான் மற்றும் நெதர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஐரோப்பா, இந்தோனேசியா மற்றும் ஜப்பானுக்கு பருத்தி மற்றும் பட்டு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.[10] வங்காளத்தை ஒரு முன்னணி பொருளாதார மையமாக நிறுவுவதில் அக்பர் முக்கியப் பங்காற்றினார். பெரும்பாலான காடுகளை விளைநிலங்களாக அக்பர் தான் மாற்றினார். சாகுபடி அதிகரிப்பதற்காக இப்பகுதியை கைப்பற்றிய உடனேயே அவர் கருவிகள் மற்றும் ஆட்களைக் கொண்டு காடுகளை அப்புறப்படுத்தினார். காடுகளை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக சூபிக்களை கொண்டு வந்தார்.[79] பிற்காலங்களில் முகலாயப் பேரரசர்களால் வங்காளமானது நாடுகளின் சொர்க்கம் என்று அழைக்கப்பட்டது.[95] முகலாயர்கள் நவீன வங்காள நாட்காட்டி முதலிய விவசாய சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.[96] அறுவடைகளை வளர்ப்பதற்கும், ஒழுங்கமைப்பதற்கும், வரி வசூலித்தல், மற்றும் புது வருடம் மற்றும் இலையுதிர்கால விழாக்கள் உட்பட பொதுவான வங்காள கலாச்சாரத்திற்கும் இந்த நாட்காட்டி முக்கியப் பங்காற்றியது. தானியங்கள், உப்பு, பழங்கள், மதுபானங்கள் மற்றும் ஒயின்கள், விலையுயர்ந்த உலோகங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றை தயாரிப்பதில் இந்த மாகாணம் முன்னோடியாக இருந்தது.[97] வங்காளத்தின் கைத்தறி தொழில் துறையானது அரசாங்க ஆதரவினால் செழித்து வளர்ந்தது. உலக அளவிலான மஸ்லின் துணி வர்த்தகத்தில் வங்காளத்தை ஒரு மையம் ஆக்கியது. மஸ்லின் வர்த்தகமானது பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உச்சத்தை அடைந்தது. மாகாண தலைநகர் டாக்கா முகலாயப் பேரரசின் வணிக தலைநகரம் ஆனது. சூபிக்களின் தலைமையில் முகலாயர்கள் வங்காள டெல்டா பகுதியில் இருந்த அறுவடை நிலங்களை விரிவாக்கினார். இதன் காரணமாக வங்காள முஸ்லிம் சமூகத்தின் அடித்தளமும் ஒருங்கிணைக்கப்பட்டது.[98]

முகலாய அரசப் பிரதிநிதிகளின் ஆட்சியின்கீழ் 150 வருடங்களுக்கு பிறகு 1717 இல் வங்காள நவாப்பின் கீழ் வங்காளமானது ஒரு அரசாட்சியாக பகுதி அளவு சுதந்திரம் அடைந்தது. நவாப்கள் வங்காள பகுதி முழுவதும் வணிக இடங்களை அமைக்க ஐரோப்பிய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தனர். பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுக்கல் மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் வணிகத் தொடர்பை ஏற்படுத்தின. முக்கிய நகரங்கள் மற்றும் பட்டணங்களில் வங்கி மற்றும் கப்பல் கட்டுமானத்தில் ஒரு ஆர்மீனிய சமூகமும் ஆதிக்கம் செலுத்தியது. வணிகத்திற்கு ஏற்ற செழிப்பான பகுதியாக வங்காளத்தை ஐரோப்பியர்கள் கருதினர்.[97] 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டன் நாட்டுக்காரர்கள் வங்காளத்தின் ஆளும் வர்க்கத்தினரான முகலாயர்களை அப்புறப்படுத்தி இருந்தனர்.

Remove ads

விளக்கம்

மக்கள் தொகை

முகலாயப் பேரரசின் கீழ் இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கமானது அதிகரித்தது. அதுவரை இந்தியா கண்டிராத பொருளாதார மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக இந்திய மக்கள் தொகையானது 60% முதல்[99] 253% வரை 1500 முதல் 1700 வரையிலான 200 ஆண்டுகளில் அதிகரித்தது.[100] முகலாய சகாப்தத்திற்கு முன்னர் இந்திய வரலாற்றிலேயே எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய மக்கள் தொகையானது முகலாய சகாப்தத்தின் போது அதிகப்படியான வேகத்தில் வளர்ந்தது.[61][99] மக்கள் தொகை அதிகரிப்பானது முகலாய விவசாய சீர்திருத்தங்கள் மூலம் விவசாய உற்பத்தி அதிகரித்ததால் நிகழ்ந்தது.[10]:190 அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தின் போது முகலாயப் பேரரசில் 4,55,698 கிராமங்கள் இருந்தன.[101]

கீழ்க்கண்ட அட்டவணையானது முகலாயப் பேரரசு, நவீன பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்தியா, மற்றும் உலகின் மக்கள் தொகை ஆகியவற்றின் மதிப்பீடுகளை கொடுக்கிறது:

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, முகலாயப் பேரரசின் மக்கள் தொகை ...

நகரமயமாக்கல்

நகரங்கள் மற்றும் பட்டணங்கள் முகலாயப் பேரரசின் காலத்தில் செழித்து வளர்ந்தன. முகலாயப் பேரரசில் நடந்த நகரமயமாக்கலானது அக்காலத்தை ஒப்பிடும்போது அதிகமாக இருந்தது. முகலாயப் பேரரசின் 15% மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்ந்து வந்தனர்.[103] இந்த சதவீதமானது அந்த நேரத்தில் ஐரோப்பிய நகர்ப்புற மக்கள் சதவீதத்தை விட அதிகமாகும். மேலும் இந்த சதவீதமானது பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரித்தானிய இந்தியாவை விட அதிகமாகும்;[103] ஐரோப்பாவில் நகரமயமாக்கலானது 19 ஆம் நூற்றாண்டு வரை 15% ஐ எட்ட வில்லை.[104]

அக்பரது ஆட்சியின் கீழ் கி.பி. 1600 இல் முகலாயப் பேரரசின் நகர்ப்புற மக்கள் தொகையானது 1.7 கோடி வரை இருந்தது. இது பேரரசின் மொத்த மக்கள் தொகையில் 15% ஆகும். அந்நேரத்தில் ஐரோப்பாவின் மொத்த நகர்புற மக்கள் தொகையை விட இந்த எண்ணிக்கை அதிகமாகும். ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும் கூட 1700 இல் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்சின் நகர்ப்புற மக்கள் தொகையானது அவற்றின் மொத்த மக்கள் தொகையில் 13% ஐ எட்டவில்லை.[101] 1800 இல் பிரித்தானிய இந்தியாவின் நகர்புற மக்கள் தொகையானது அதன் மொத்த மக்கள் தொகையில் 13%க்கும் குறைவாக இருந்தது. 1881 இல் இந்த சதவீதம் 9 ஆக குறைந்தது. இந்த இரண்டு சதவீதங்களுமே முகலாய சகாப்தத்தை விட குறைவாகவே இருந்தன.[105] 1700 இல் முகலாய இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகையானது 2.3 கோடி ஆகும். அதே நேரத்தில் 1871 இல் பிரித்தானிய இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகையானது 2.23 கோடியே ஆகும்.[106]

வரலாற்றாளர் நிஜாமுதீன் அகமதின் (1551–1621) கூற்றுப்படி அக்பரின் ஆட்சியின் கீழ் 120 பெரிய நகரங்கள் மற்றும் 3200 பட்டணங்கள் இருந்தன.[103] இந்தியாவில் பல நகரங்கள் இரண்டரை இலட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரை மக்கள் தொகையை கொண்டிருந்தன.[103] அந்நேரத்தில் ஆக்ராவில் 8 லட்சம் மக்களும் இலாகூரில் 7 லட்சம் மக்களும் வசித்தனர்.[107] டாக்காவில் 10 லட்சம் மக்களும்,[108] மற்றும் டெல்லியில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் வசித்தனர்.[109]

நகரங்கள் பொருட்களை விற்பதற்கான சந்தைகளாக திகழ்ந்தன. பல்வேறு வகையான வியாபாரிகள், வர்த்தகர்கள், கடைக்காரர்கள், கைவினைஞர்கள், வட்டிக்காரர்கள், நெசவாளர்கள், கை தொழில் செய்பவர்கள், அதிகாரிகள் மற்றும் மத பிரமுகர்கள் ஆகியவர்களுக்கு தங்கும் இடங்களை நகரங்கள் வழங்கின.[60] எனினும் குறிப்பிடப்படும் படியான நகரங்கள் உற்பத்தி அல்லது வர்த்தக மையங்களாக இல்லாமல் இஇராணுவ மற்றும் அரசியல் மையங்களாக திகழ்ந்தன.[110]

Remove ads

கலாச்சாரம்

தெற்காசியாவின் வரலாற்றில் நவீன ஆரம்ப காலம் மற்றும் ஆரம்ப காலங்களில் முகலாயப் பேரரசானது உறுதியான இடத்தைப் பெற்றிருந்தது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் முகலாயப் பேரரசின் மரபானது கீழ்க்கண்ட கலாச்சார பங்களிப்புகளில் காணப்படுகிறது:

Thumb
இந்தியாவின் ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹால்
  • தெற்காசியாவில் இருந்த சிற்றரசர்களை முகலாயப் பேரரசின் மையப்படுத்தப்பட்ட ஏகாதிபத்திய ஆட்சியானது ஒருங்கிணைத்தது.[111]
  • இந்தியக் கலை உடன் பாரசீக கலை மற்றும் இலக்கியத்தை இணைத்தது.[112]
Thumb
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் லாகூரில் உள்ள பாட்ஷாகி மசூதி.
  • தெற்காசிய, ஈரானிய மற்றும் நடு ஆசிய சமையல் முறைகளின் கலவையான முகலாய உணவுகளை உருவாக்கியது.
  • மஸ்லின், பட்டு, ப்ரோகேட் மற்றும் வெல்வெட் ஆகிய அலங்கரிக்கப்பட்ட துணிகளைக் கொண்டு முகலாய ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் ஃபேஷன் ஆகியவற்றை உருவாக்கியது.
  • இந்திப் படங்களின் பேச்சு வழக்குப் மொழியான இந்துஸ்தானி மொழியை தரப்படுத்தியது. இதன் மூலம் இந்தி மற்றும் உருது ஆகிய மொழிகள் வளர்ந்தன.[113]
  • முகலாய தோட்டங்கள் மூலம் நவீன ஈரானிய பாணியிலான தண்ணீர் அலங்காரங்கள் மற்றும் தோட்ட கலையை அறிமுகப்படுத்தியது.[114]
  • துருக்கிய குளியல் முறைகளை இந்தியத் துணைக் கண்டத்திற்கு அறிமுகப்படுத்தியது.
  • முகலாய மற்றும் இந்திய கட்டடக் கலைகளை பரிணாமப்படுத்தி மெருகேற்றியது. இதன் மூலம் பிற்கால ராஜபுத்திர மற்றும் சீக்கிய அரண்மனை கட்டடக்கலையும் முன்னேற்றம் கண்டது. முகலாய கட்டடக்கலையின் புகழ்பெற்ற மைல் கல்லாக உள்ளது தாஜ் மஹால் ஆகும்.
  • பயில்வான் பாணியிலான இந்திய மல்யுத்தத்தை உருவாக்கியது. இது இந்திய மல்ல-யுத்தம் மற்றும் பாரசீக வர்சேஷ்-இ பஸ்டானி ஆகியவற்றின் கலவை ஆகும்.[115][116]
  • மக்தப் பள்ளிக்கூடங்களை கட்டியது. அங்கு இளைஞர்களுக்கு குரான் மற்றும் பட்வா-இ-ஆலம்கிரி ஆகிய இஸ்லாமிய சட்டங்கள் உள்ளூர் மொழிகளில் கற்றுக் கொடுக்கப்பட்டது.
  • பாரம்பரிய இந்துஸ்தானி இசை,[117] மற்றும் சிதார் போன்ற இசைக் கருவிகளை முன்னேற்றியது.[118]
Thumb
இந்தியாவின் ஆக்ராவின் பதேபூர் சிக்ரியில் உள்ள புலந்த் தர்வசா.

கட்டடக்கலை

முகலாயர்கள் இந்திய துணைக் கண்டத்திற்கு அவர்களது தனித்துவமான இந்தோ-பாரசீக முகலாய கட்டடக்கலையினை உருவாக்கியதன் மூலம் முக்கியமான பங்களிப்பை கொடுத்துள்ளனர். முகலாய சகாப்தத்தின் போது முஸ்லிம் பேரரசர்களால் பல்வேறு நினைவுச் சின்னங்கள் கட்டப்பட்டன. இதில் முக்கியமாக ஷாஜகானை பற்றி குறிப்பிடலாம். அவர் கட்டிய தாஜ்மஹால் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களம் ஆகும். இது "இந்தியாவில் உள்ள முஸ்லிம் கலையின் ஆபரணமாகவும், உலக பாரம்பரியத்தின் எல்லோராலும் போற்றப்படுகின்ற தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகவும் உள்ளது". இதை காண்பதற்கு மட்டுமே ஒரு வருடத்திற்கு 70 முதல் 80 லட்சம் பேர் வருகின்றனர். அரண்மனைகள், கல்லறைகள், தோட்டங்கள் மற்றும் கோட்டைகள் என இந்த அரச மரபினால் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்று ஆக்ரா, அவுரங்காபாத், தில்லி, டாக்கா, பத்தேப்பூர் சிக்ரி, ஜெய்ப்பூர், லாகூர், காபூல், சேக்குபுரா மற்றும், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் பல்வேறு பிற நகரங்களில் நிற்கின்றன.[119] அவற்றுள் ஒரு சில:

Thumb
காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள வெரினாக் தோட்டங்கள்.
Thumb
காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷாலிமார் பக்.
மேலதிகத் தகவல்கள் இந்தியா, பாகிஸ்தான் ...

கலை மற்றும் இலக்கியம்

Thumb
பதினேழாம் நூற்றாண்டு முகலாய கலைஞர் உஸ்தாத் மன்சூரின் விளக்கப்படம்.

முகலாய கலை பாரம்பரியமானது பன்முகத் தன்மை கொண்டதாக இருந்தது. ஈரானிய, இந்திய, ஏன் ஐரோப்பிய பாணி மற்றும் கருப்பொருள் கூறுகளை கூட அது எடுத்துக்கொண்டது.[120] முகலாயப் பேரரசர்கள் அடிக்கடி ஈரானிய புத்தக ஒட்டுபவர்கள், விளக்கப்படகாரர்கள், ஓவியர்கள் மற்றும் எழுத்தழகியல்காரர்களை தங்களது அவைக்கு சஃபாவிட் அவையிலிருந்து வரவழைத்தனர். இதற்கு காரணம் சஃபாவிட் அரசவையில் இருந்தவர்களுக்கும் தைமூரிய பாணி கலைக்கும் இருந்த ஒற்றுமை மற்றும், ஈரானிய கலை மற்றும் எழுத்துழகியல் மீது முகலாயர்களுக்கு இருந்த ஈர்ப்பு ஆகியவையே ஆகும்.[121] முகலாய காலத்தின்போது உருவாக்கப்பட்ட பாரசீக சிறு வரைபடங்களானவை ஈரானிய மற்றும் இந்திய புராணங்கள்/வீரம், முக்கிய யுத்தங்கள், அரசவை வாழ்க்கை மற்றும் திருமணங்கள் ஆகிய வரலாற்று அல்லது அரசியல் நிகழ்வுகளை காட்டின. மேலும் இயற்கை உலகின் அமைதி மற்றும் அழகையும் அவை காட்டின.[122] உதாரணமாக பேரரசராக ஜஹாங்கீர், உஸ்தாத் மன்சூர் போன்ற திறமையான கலைஞர்களை பேரரசு முழுவதும் இருந்த அசாதாரண விலங்குகள் மற்றும் தாவரங்களை தத்ரூபமாக வரைவதற்காக பணித்தார்.

Thumb
பதின்மூன்றாம் நூற்றாண்டு இந்திய கவிஞர் அமீர் குஸ்ரவு திலவியின் புத்தகத்தில் உள்ள 16ஆம் நூற்றாண்டு இந்திய கலைஞர் பசவனின் "அலெக்சாண்டர், ஞானி பிளாட்டோவை அவரது மலைக்குகையில் சந்தித்தல்" விளக்கப்படம்.

ஜஹாங்கீரால் ஆணையிடப்பட்ட இலக்கிய வேலைகளானவை, "ரஸ்ம்நாமா" (இந்து இதிகாசமான "மகாபாரதத்தின்" பாரசீக மொழிபெயர்ப்பு) முதலிய இதிகாசங்களில் இருந்து ஜஹாங்கீரின் ஆட்சி வரலாற்றை பற்றிய விளக்கத்துடன் கூடிய "தசுக்-இ ஜகாங்கிரி" போன்ற வரலாற்று நினைவுகள் மற்றும் நிகழ்ச்சிகள் வரை இருந்தன. எழுத்தழகியல் மற்றும் கலை காட்சிகளால் அலங்கரிக்கப்பட்ட அழகாக-முடிக்கப்பட்ட தொகுப்புகள் அலங்கார எல்லைகளைக் கொண்ட பக்கங்களில் ஏற்றப்பட்டன. பின்னர் முத்திரையிடப்பட்டு, மற்றும் தங்க முலாம் அல்லது வர்ணம் பூசப்பட்டு, மற்றும் சாயம் பூசப்பட்ட தோல் அட்டைகளுடன் பிணைக்கப்பட்டன.[123]

மொழி

Thumb
ஜுபன்-இ உருது-யி முவல்லா ("மேன்மைமிகு நாடோடி கூட்டத்தின் மொழி") என்கிற சொற்றொடர் நஸ்தலிக் எழுத்து முறையில் எழுதப்பட்டுள்ளது.
Thumb
லஷ்கரி ஜபான் ("இராணுவ முகாம் மொழி" அல்லது "நாடோடிக் கூட்ட மொழி") தலைப்பானது நஸ்தலிக் எழுத்துமுறையில் எழுதப்பட்டுள்ளது

பாரசீகமே ஆதிக்கமான மற்றும் பேரரசின் "அலுவல்" மொழியாக இருந்த போதிலும் ஆளும் வர்க்கத்தினரின் மொழியாக இருந்தது பாரசீக தாக்கம் அதிகமுடைய இந்துஸ்தானி மொழியாகிய உருது ஆகும். உருது மொழியானது நஸ்தலிக் என்ற அழைக்கப்பட்ட பாரசீக-அரேபிய எழுத்துமுறையில் எழுதப்பட்டது. இலக்கிய மரபுகள் மற்றும் அம்மொழிக்கு என்ற சொல் அகராதியானது பாரசீக, அரேபிய மற்றும் துருக்கிய மொழிகளில் இருந்து பெறப்பட்டு இருந்தது. பேச்சு வழக்கில் இருந்த அம்மொழி இறுதியாக அதற்கென்று உருது என்ற பெயரை பெற்றது.[சான்று தேவை] முகலாயர்கள் உருது மொழியை பேசினர்.[124] 1700ஆம் ஆண்டு முகலாயர்கள் அம்மொழியை தரப்படுத்தினர்.[125] சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட சொல்லகராதி மற்றும் பாரசீக-அரேபிய மொழிகளில் கடன் பெற்ற சொற்களை பயன்படுத்தக் கூடிய நவீன இந்தி மொழியானது உருது மொழியுடன் பரஸ்பரம் புரிந்து கொள்ளக் கூடியதாகும் .[சான்று தேவை]

Remove ads

இராணுவம்

வெடிமருந்து போர்முறை

Thumb
16ஆம் நூற்றாண்டின் முகலாய திரி இயக்க துப்பாக்கி.
Thumb
16ஆம் நூற்றாண்டின் முகலாய மசுகெத்தியர்.

உதுமானியப் பேரரசு மற்றும் சஃபாவிட் பாரசீகம் ஆகிய நாடுகளுடன் சேர்த்து முகலாய இந்தியாவும் மூன்று இஸ்லாமிய வெடிமருந்து பேரரசுகளில் ஒன்றாகும்.[35][126][127] லோடி சுல்தான் இப்ராஹிம் லோடிக்கு எதிரான கிளர்ச்சிக்கு ஆதரவாக, லாகூரில் லோடி கவர்னரான தவுலத் கான் பாபரை அழைத்தபோது அவருக்கு வெடிமருந்து சுடுகலன்கள் மற்றும் கள பீரங்கிகள் ஆகியவற்றைப் பற்றி நன்கு தெரியும். அவற்றை எவ்வாறு களத்தில் பயன்படுத்துவது என்ற முறையையும் அவர் அறிந்து வைத்திருந்தார். பாபர் உதுமானிய பேரரசின் நிபுணரான உஸ்தாத் அலி குலியை பணி அமர்த்தி இருந்தார். அவர் மையத்தில் தேர்களால் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு பீரங்கிகள் மற்றும் வெடிமருந்து ஆயுதங்களை ஏந்திய காலாட்படை, இரு புறங்களிலும் ஏற்ற வில்வித்தையாளர்களைக் கொண்ட உதுமானிய பேரரசின் பொதுவான போர் வியூகத்தை பாபருக்கு கற்றுக் கொடுத்தார். பாபர் இந்த வியூகத்தை 1526 இல் நடந்த முதலாம் பானிபட் யுத்தத்தில் பயன்படுத்தினார். அந்த போரில் தில்லி சுல்தானகத்திற்கு விசுவாசமான ஆப்கானிய மற்றும் ராஜபுத்திர படைகள் ஏராளமான எண்ணிக்கையில் இருந்த போதிலும் வெடிமருந்து ஆயுதங்கள் இல்லாத காரணத்தால் தோற்கடிக்கப்பட்டன. தைமூரிய படைகளின் தீர்க்கமான வெற்றியே அவர்களது எதிரிப்படைகள் முகலாய பேரரசின் வரலாற்றில் முகலாயருக்கெதிராக நேரடி யுத்தம் செய்யாததற்கு காரணம் ஆகும்.[128] இந்தியாவில் கோழிக்கோடு (1504) மற்றும் டையூ (1533) ஆகிய இடங்களிலிருந்து வெண்கலத்தால் செய்யப்பட்ட துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.[129]

அக்பரிடம் பணியாற்றிய பாரசீக பல்துறை வல்லுநர் மற்றும் இயந்திர பொறியாளரான பதுல்லா சிராசி (அண். 1582) ஆரம்பகால பலமுறை சுடும் துப்பாக்கியை உருவாக்கினார். பண்டைய கிரேக்கத்தில் பயன்படுத்தப்பட்ட பாலிபோலோக்கள் மற்றும் சீனாவில் பயன்படுத்தப்பட்ட தொடர்ந்து சுடும் குறுக்கு வில்கள் போல இல்லாமல் சிராசியின் தொடர்ந்து சுடும் துப்பாக்கியானது வெடி மருந்து நிரப்பப்பட்ட பல்வேறு துமுக்கிக் குழல்களை கொண்ட கை பீரங்கிகளை கொண்டிருந்தது. பிற்காலத்தில் தயாரிக்கப்பட்ட சரமாரியாக சுடக்கூடிய துப்பாக்கிகளின் ஒரு வடிவமாக இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.[130]

17ஆம் நூற்றாண்டின் போது இந்தியர்கள் பல்வேறு வகையான வெடிமருந்து ஆயுதங்களை தயாரித்து கொண்டிருந்தனர்; தஞ்சாவூர், டாக்கா, கர்நாடகாவின் பீஜப்பூர், பர்தாபாத் ஆகிய இடங்களில் பெரிய பீரங்கிகள் காணப்பட்டன.[131] 17 ஆம் நூற்றாண்டின் போது வெடிமருந்து போர் முறைகளில் பயன்படுத்துவதற்காக ஐரோப்பாவிற்கு சால்ட்பீட்டரை குஜராத் வழங்கியது.[132] முகலாய வங்காளம் மற்றும் மால்வா ஆகிய பகுதிகளும் சால்ட்பீட்டர் உற்பத்தியில் பங்கெடுத்தன.[132] டச்சுக்காரர்கள், பிரஞ்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள் மற்றும் இங்கிலாந்துகாரர்கள் பீகாரின் சப்ராவை சால்ட்பீட்டர் சுத்திகரிப்பு மையமாக பயன்படுத்தினர்.[133]

ஏவுகணையியல் மற்றும் வெடிபொருட்கள்

அக்பர் தான் பதினாறாம் நூற்றாண்டில், சன்பால் யுத்தத்தில், குறிப்பாக போர் யானைப் படைகளுக்கு எதிராக உலோக உருளைகளை கொண்ட பான்ஸ் என்ற ஏவூர்திகளை முதன் முதலில் பயன்படுத்தினார்[134] 1657 இல் பிடார் முற்றுகையின் போது முகலாய இராணுவம் படைவாணங்களை பயன்படுத்தியது.[135] மதில் சுவர்களில் ஏறும் போது இளவரசன் அவுரங்கசீப்பின் படைகள் படைவாணங்கள் மற்றும் கையெறி குண்டுகளை பயன்படுத்தின. சிதி மர்ஜான் அவரது பெரிய வெடிமருந்து கிடங்கை ஒரு படைவாணம் தாக்கியபோது படுகாயம் அடைந்தார். 27 நாட்கள் கடுமையான யுத்தத்திற்குப் பிறகு வெற்றிகரமான முகலாயர்களால் பிடார் கைப்பற்றப்பட்டது.[135]

கிரேக்க நெருப்பு மற்றும் வெடிமருந்து ஆகியவற்றின் ஒரு வரலாறு என்ற புத்தகத்தில் ஜேம்ஸ் ரிடிக் பர்டிங்டன் இந்திய படைவாணங்கள் மற்றும் நில கண்ணிவெடிகளை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்:[129]

ஐரோப்பாவில் அவை பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் இந்திய போர் படைவாணங்கள் வல்லமை மிக்க ஆயுதங்களாக இருந்தன. அவை மூங்கில் கம்புகளையும், படைவாணத்தின் உடல்பாகமானது கம்புகளுடன் கட்டப்பட்டு, நுனியில் இரும்பு நுனிகள் பொருத்தப்பட்டிருக்கும். அவை இலக்கு மீது குறி வைக்கப்பட்டு திரியை பற்ற வைப்பதன் மூலம் பறக்கவிடப்படும். ஆனால் அவற்றின் பயணப்பாதையானது ஒழுங்கற்றதாகவே இருந்தது. கண்ணிவெடிகள் மற்றும் அவற்றுக்கு எதிரான வெடிமருந்துகளை பயன்படுத்துவது என்பது அக்பர் மற்றும் ஜஹாங்கிர் காலத்திலேயே இருந்துள்ளது.

பிற்காலத்தில் முகலாய படைவாணங்களின் மேம்படுத்தப்பட்ட வடிவமான மைசூர் படைவாணங்களை செஞ்சிக் கோட்டை முற்றுகையின் போது ஆற்காடு நவாபின் சந்ததியினர் பயன்படுத்தினர். புடிகோட்டில் கான்ஸ்டபிளாக இருந்த ஹைதர் அலியின் தந்தை ஃபடா முகம்மது ஆற்காடு நவாபிற்காக 50 படைவாண மனிதர்களை (குஷூன்) கொண்ட ஒரு படைக்கு தலைமை தாங்கினார். படைவாணங்களின் முக்கியத்துவத்தை ஐதர் அலி உணர்ந்திருந்தார். எனவே முன்னேற்றப்படுத்தப்பட்ட உலோக உருளைகளைக் கொண்ட படைவாணங்களை அறிமுகப்படுத்தினார். இரண்டாவது ஆங்கிலேய மைசூர் யுத்தத்தின்போது இந்த படைவாணங்கள் மைசூர் சுல்தானகத்திற்கு மிகவும் உதவிகரமாக இருந்தன. குறிப்பாக பொல்லிலூர் யுத்தத்தின் போது இவை உதவிகரமாக இருந்தன. கான்கிரீவ் படைவாணமானது மைசூர் படைவாணங்களை அடிப்படையாக கொண்டதாகும். இந்த கான்கிரீவ் படைவாணங்களை தான் பிரிட்டன், பிரான்சுக்கு எதிரான நெப்போலிய போர்களின் போதும், ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிரான 1812 ஆம் ஆண்டு போரின் போதும் பயன்படுத்தியது.[136]

Remove ads

அறிவியல்

வானியல்

முகலாய வானியலாளர்கள் தத்துவார்த்த வானியலுக்கு சிறிதளவே முக்கியத்துவம் அளித்தது போல் தோன்றினாலும், அவர்கள் கண்காணிப்பு வானியலில் முன்னேற்றம் அடைந்திருந்தனர். அவர்கள் கிட்டத்தட்ட நூறு ஜீஜ் ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதினர். ஹூமாயூன் தனக்கெனவே ஓர் ஆய்வு மையத்தை கட்டினார். ஜஹாங்கீர் மற்றும் ஷாஜகான் ஆய்வு மையங்களை கட்டும் எண்ணத்தில் இருந்தனர். ஆனால் அவர்களால் இயலவில்லை. முகலாய ஆய்வு மையங்களில் பயன்படுத்தப்பட்ட வானியல் கருவிகள் மற்றும் கண்காணிப்பு நுட்பங்கள் பெரும்பாலும் இஸ்லாமிய வானியலிலிருந்து பெறப்பட்டவையாகும்.[137][138] 17 ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசானது இஸ்லாமிய மற்றும் இந்து வானியலுக்கு இடையில் இருந்த ஒரு தொகுப்பை கண்டது. முகலாயப் பேரரசில் இஸ்லாமிய கண்காணிப்பு உபகரணங்கள் இந்து கணக்கீட்டு நுட்பங்களுடன் இணைத்து பயன்படுத்தப்பட்டன.[137][138]

முகலாயப் பேரரசின் வீழ்ச்சியின் போது இந்து அரசரான ஆம்பரின் இரண்டாம் ஜெய் சிங் முகலாய வானியலை தொடர்ந்து நடத்தினார். 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அவர் உலுக் பெக்கின் சமர்கண்ட் ஆய்வு மையத்திற்கு போட்டியாக எந்திரா மந்திர்கள் என்று அழைக்கப்பட்ட பல்வேறு பெரிய ஆய்வகங்களை கட்டினார். இந்து சித்தாந்தங்களில் இருந்த ஆரம்பகால இந்து கணக்கீடுகள் மற்றும் ஜீஜ்-இ-சுல்தானியில் இருந்த இஸ்லாமிய கண்காணிப்பு முறைகளை முன்னேற்றுவதற்காக அவர் இந்த ஆய்வகங்களை கட்டினார். அவர் பயன்படுத்திய உபகரணங்களானவை அதிகமான இஸ்லாமிய வானியல் தாக்கத்தையும், கணக்கீட்டு நுட்பங்களானவை அதிகமான இந்து வானியல் தாக்கத்தையும் கொண்டிருந்தன.[137][138]

வேதியியல்

சேக் டீன் முகமது பெரும்பாலான முகலாய வேதியியலை கற்றிருந்தார். சாம்பு தயாரிக்க தேவைப்படும் பல்வேறு நீர்க்காரம் மற்றும் சோப்புகளை தயாரிப்பதற்கான நுட்பங்களை அறிந்து இருந்தார். மேலும் இவர் ஒரு குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் ஆவார். இவர் முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலமை பற்றி விளக்கியுள்ளார். அலகாபாத் மற்றும் தில்லி நகரங்களை பற்றியும் பல்வேறு விவரங்களுடன் இவர் எழுதியுள்ளார். முகலாயப் பேரரசின் பெருமைகளைப் பற்றியும் இவர் எழுதியுள்ளார்.

பிரிட்டனின் அரசர்களான நான்காம் ஜார்ஜ் மற்றும் நான்காம் வில்லியம் ஆகிய இருவருக்குமே சாம்பு ஆலோசகராக சேக் டீன் முகமது நியமிக்கப்பட்டார்.[139]

உலோகவியல்

முகலாய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிக முக்கியமான வானியல் உபகரணங்களில் ஒன்றானது இசைவான வான பூகோளம் ஆகும். இது காஷ்மீரில் ஹிஜ்ரி வருடம் 998 இல் (கி. பி. 1589–90) அலி கஷ்மிரி இபின் லுக்மனால் உருவாக்கப்பட்டது. முகலாயப் பேரரசின் காலத்தின்போது லாகூர் மற்றும் காஷ்மீரில் பிற்காலத்தில் இதேபோன்ற 20 பூகோளங்கள் தயாரிக்கப்பட்டன. இந்தப் பூகோளங்கள் 1980களில் மீண்டும் கண்டெடுக்கப்படுவதற்கு முன்னர் இசைவான அமைப்புடைய உலக பூகோளங்களை தயாரிப்பது என்பது தொழில்நுட்ப ரீதியாக இயலாத காரியம் என நவீன உலோகவியலாளர்கள் நம்பினர்.[140]

Remove ads

முகலாயப் பேரரசர்களின் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் ஓவியம், பட்டம் ...
Remove ads

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

  1. The title (Mirza) descends to all the sons of the family, without exception. In the royal family it is placed after the name instead of before it, thus, Abbas Mirza and Hosfiein Mirza. Mirza is a civil title, and Khan is a military one. The title of Khan is creative, but not hereditary.[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads