புதுச்சேரி (நகரம்)
இந்திய அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில், புதுச்சேரி மாவட்டத்தில் அமைந்துள்ள நகராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாண்டிச்சேரி (Pondicherry) அல்லது புதுச்சேரி (Puducherry) இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில், புதுச்சேரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சிப் பகுதியும், ஒன்றியப் பகுதியின் தலைநகரமும் ஆகும்.
இதனை சுருக்கமாக பாண்டி என்றும், புதுவை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நகரம் 2006 ஆம் ஆண்டிலிருந்து புதுச்சேரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்படுகிறது.
Remove ads
வரலாறு

முதலாம் நூற்றாண்டின் மத்தியில் உரோமானிய வணிகவிடங்களில் பொடுகெ அல்லது பொடுகா எனப்படும் இடம் குறிப்பிடப்படுகிறது. இது நான்காம் நூற்றாண்டில், காஞ்சிபுரத்து பல்லவப் பேரரசின் பகுதியாக இருந்தது. பத்தாம் நூற்றாண்டிலிருந்து 13ஆம் நூற்றாண்டு வரை தஞ்சாவூர் சோழர்களின் வசம் இருந்தது. 13ஆம் நூற்றாண்டில் பாண்டியர்கள் கைப்பற்றினர். 14ஆம் நூற்றாண்டிலிருந்து, 1638இல் பீஜப்பூர் சுல்தான் கைப்பற்றும்வரை விசயநகரப் பேரரசின் பகுதியாக இருந்தது. 1674இலிருந்து பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சியில் இருந்து வந்தது, இடையிடையே ஆங்கிலேயர்களிடமும் டச்சுக்காரர்களிடமும் குறுகிய காலத்திற்கு இருந்த்து. 1962ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதி புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் இருந்த 178 மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 170 பேர் சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் 8பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி புதுச்சேரிக்கு விடுதலை அளிக்கப்பட்டது.
ஆனால் ஆகத்து மாதம் 16 ஆம் தேதியே முறைப்படி உடன்படிக்கை கையெழுத்தானது. அதனால் இன்று வரை ஆகத்து 16 ஆம் தேதியே புதுச்சேரியின் சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது. பிரெஞ்ச் அமைப்புகளின் கோரிக்கைகளை அடுத்து அப்போதைய முதல்வர் திரு. ந. ரங்கசாமியால், நவம்பர் 1 ஆம் தேதி புதுச்சேரியின் சுதந்திர தினமாகவும், ஆகத்து 16 ஆம் தேதி குடியரசு தினமாகவும் அறிவிக்கப்பட்டது.
Remove ads
மக்கள் தொகை
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 244,377 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இதில் 124,947 பெண்கள் மற்றும் 119,430 ஆண்கள் உள்ளனர். பாண்டிச்சேரியின் சராசரி கல்வியறிவு விகிதம் 80.6% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 84.6%, பெண் கல்வியறிவு 76.7% ஆகும். பாண்டிச்சேரியில், மக்கள்தொகையில் 10% ஆறு வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.[2]
பெரும்பான்மையானவர்கள் பாண்டிச்சேரியில் தமிழ் பேசுகிறார்கள். இங்கு பிரெஞ்சு மக்கள் மற்றும் பாண்டிச்சேரியில் பிரான்சின் துணைத் தூதரகம், பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம் மற்றும் எல்'அலியன்ஸ் ஃபிராங்காயிஸ் போன்ற பல பிரெஞ்சு நிறுவனங்கள் உள்ளன.[4]
Remove ads
பொருளாதாரம்
புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (2011–12) ரூபாய் 12,082 கோடிகள் ஆகும். புதுச்சேரியின் தனி நபர் வருமானம் (2011–12) ரூபாய் 98719.
லெனோவா மடிக்கணினி, எச். சி. எல் மடிக்கணினி புதுச்சேரியில் இருந்து தயாரிக்கப்படுகிறது.[5][6]
1898 ஆம் ஆண்டு லண்டனை தலைமையகமாக கொண்ட ஒரு பிரிட்டிசு நிறுவனத்தால், புதுச்சேரியில் ரோடியர் மில் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த மில்லில் ராணுவத்துக்கு தேவையான சீருடைகள், பாராசூட் துணிகள் என 93 ரக துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் நிதிபற்றாக்குறை காரணம் காட்டி, ஏப்ரல் 30, 2020 அன்று, இந்த மில் மூடப்பட்டது.[7]
புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல தொழிற்சாலைகள் உள்ளன. லாசுபேட்டை, மேட்டுப்பாளையம், சேதராப்பட்டு, வில்லியனூர் ஆகிய பகுதியில் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. திருபுவனை மற்றும் திருவாண்டார்கோயில் பகுதியில் பிப்டிக் என்னும் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது. டிவிஎஸ், போக்லைன் ஹைட்ராலிக்ஸ், ரானே மெட்ராஸ், விப்ரோ, வேர்ல்பூல், எல்&டி, சுப்ரீம் போன்ற குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகள் ஆகும். நெட்டப்பாக்கத்தில், லூகாஸ் டிவிஎஸ் தொழிற்சாலை உள்ளது.
நகரமைப்பு
புதுச்சேரி நகரத்தில் பிரெஞ்சுக்காரர்களால் அமைக்கப்பட்ட சாலைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் அமைந்தவை என்பது புதுவையின் ஓர் சிறப்பு. அது குறித்தான ஒரு சொலவடை, ‘நீதி அழகு இல்லையென்றாலும், வீதி அழகு உண்டு’ என்பதாகும். புதுச்சேரியின் கிழக்குப் பகுதியில் கடற்கரை உள்ளது.
புதுவை மாவட்டத்தில் உள்ள வட்டங்கள் (4)
- புதுவை
- உழவர்கரை
- வில்லியனூர்
- பாகூர்
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வட்டங்கள் (2)
- காரைக்கால்
- திருநள்ளார்
மாகே துணை வட்டம் (1)
- மாஹி
ஏனாம் துணை வட்டம் (1)
- ஏனாம்
Remove ads
புவியியல்
இங்கிருந்து வடக்கு பகுதியில் சென்னை 150 கி.மீ தொலைவிலும், மேற்கு பகுதியில் விழுப்புரம் 40 கி.மீ தொலைவிலும், தெற்கு பகுதியில் கடலூர் 24 கி.மீ தொலைவிலும், திருக்கோவிலூர் 75 கி. மீ தொலைவிலும் உள்ளது.
புதுச்சேரியில் இலக்கிய வளர்ச்சி
புதுச்சேரியில் இலக்கிய வளர்ச்சி என்பது மகாகவி பாரதி, புதுவைக்கு வருவதற்கு முன்பிருந்தே துவங்கிய ஒன்று. அந்த வழியில், மகாகவி பாரதியார், பெருஞ்சித்திரனார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர், முதலான அறிஞர் பெருமக்கள் இலக்கியத் தொண்டினை பின்பற்றி, புதுவையின் கவிஞர் பெருமக்கள், பண்ணார் தமிழன்னைக்கு முத்தாரம் சூட்டி, உலக அரங்கில் முன்னிறுத்த பெரும்பாடுபட்டனர் என்று சொன்னால் அது மிகையல்ல.
புதுச்சேரியின் வரலாற்றில் ஒரு பெரும்பகுதி பிரெஞ்சு ஆட்சியின்கீழ் இருந்ததன் விளைவாக இங்கு பிரெஞ்சு மொழி இலக்கியமும் வளர்ச்சி பெற்றது. பல பிரெஞ்சு இலக்கியக் கழகங்கள் இன்றும் இங்கு இயங்கி வருகின்றன.
Remove ads
போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து

பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலையானது, மாமல்லபுரம் வழியாக சென்னையுடன் இணைக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து பல முக்கிய நிறுத்தங்களில் இருந்து தினசரி பேருந்து சேவைகள் உள்ளன.
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. இது புதுவையிலிருந்து சென்னை, பெங்களூர், திருப்பதி, நாகப்பட்டினம், காரைக்கால், நாகர்கோயில், மாகி, நெய்வேலி, கடலூர், விழுப்புரம், திண்டிவனம், ஒசூர், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய நகரங்களுக்கு நேரடி பேருந்து சேவையை வழங்குகின்றது.
மேலும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, பெங்களூர், திருவனந்தபுரம், எர்ணாகுளம், செங்கோட்டை, திருச்செந்தூர் ஆகிய நகரங்களுக்கு விரைவுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம், புதுவையிலிருந்து வேலூர், திருவண்ணாமலை,திருக்கோவிலூர், ஆரணி ,காஞ்சிபுரம், சேலம், திருத்தணி, ஓசூர், சென்னை, வந்தவாசி, காரைக்கால், வேளாங்கண்ணி ஆகிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
தொடருந்து நிலையம்
புதுச்சேரி விழுப்புரம் மற்றும் சென்னையுடன் ஐந்து இணைப்பு தொடர்வண்டி அகல பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி, வேலூர் - காட்பாடி, மும்பை, கொல்கத்தா, புது தில்லி முதலிய பல பெருநகர்களுக்கு விரைவுத் தொடருந்து இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து தொடர்வண்டி வழியாக புதுச்சேரியை அடைய நான்கு மணிநேரம் ஆகும்.
வானூர்தி நிலையம்
புதுச்சேரியின் விமான நிலையம் இலாஸ்பேட்டையில் அமைந்துள்ளது. இது 2012 ஆம் ஆண்டு புதுபிக்கப்பட்டு பெரிய விமானங்களும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டது.[8] இப்புதிய விமான நிலையம் சனவரி 2013இல் திறக்கப்பட்டு பெங்களூருக்கு செல்லும் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.[9] காரைக்காலில் கட்டப்படும் புதிய விமான நிலையம் 2014இல் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முழுதும் தனியார் மூலதனத்தோடு ஆரம்பிக்கப்படும் முதல் விமான நிலையம் இது ஆகும்.[10]
Remove ads
மருத்துவமனைகள்

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையானது, இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும். இந்த மருத்துவமனை இந்திய நடுவணரசின் நிதியுதவியுடன் இயங்குகிறது. இந்த மருத்துவமனையில் பெரும்பாலான வசதிகள் உள்ளன. இந்த மருத்துவமனைக்கு புதுச்சேரி மக்கள் உட்பட, தமிழ்நாட்டில் இருந்தும் பெரும்பாலானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். இது புதுச்சேரி திண்டிவனம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

புதுச்சேரி நகரில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உள்ளது. இது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது மற்றும் புதுச்சேரி அரசு பெரிய மருத்துவமனை கடற்கரை அருகில் உள்ளது.
Remove ads
வானிலை
பாண்டிச்சேரியின் காலநிலை, கோப்பன் காலநிலை வகைப்பாட்டால் வெப்பமண்டலம், ஈரப்பதம் மற்றும் வறண்ட (என) என வகைப்படுத்தப்படுகிறது. இது கடலோர தமிழ்நாட்டைப் போன்றது. கோடை காலம் ஏப்ரல் முதல் சூன் ஆரம்பம் வரை நீடிக்கும், அதிகபட்ச வெப்பநிலை 41 °C (106 °F) ஐ எட்டும் மற்றும் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 36 °C (97 °F) ஆகும். குறைந்தபட்ச வெப்பநிலை 28-32 °C (82-90 °F) ஆக இருக்கும். இதைத் தொடர்ந்து சூன் முதல் செப்டம்பர் வரை அதிக ஈரப்பதம் மற்றும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அக்டோபர் நடுப்பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது, மேலும் அக்டோபர் முதல் திசம்பர் வரையிலான காலகட்டத்தில் பாண்டிச்சேரி அதன் வருடாந்திர மழையின் பெரும்பகுதியைப் பெறுகிறது. ஆண்டு சராசரி மழை 1,240 மிமீ (49 அங்குலம்) ஆகும்.
Remove ads
கல்வி நிறுவனங்கள்
புதுச்சேரியில் 1985ல் நிறுவப்பட்ட புதுவைப் பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. இது இந்திய அரசின் மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 59 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. புதுவையில் உள்ள மக்களின் கல்வி வளர்ச்சிக்கு, இந்த பல்கலைக்கழகம் பெரும்பங்கு வகிக்கிறது.
கல்லூரிகள்
- மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகம்
- அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி
- பாண்டிச்சேரி மருத்துவ அறிவியல் கழகம்
- சிறீ வெங்கடேசுவரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
- சிறீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி
- பாண்டிச்சேரி பிரெஞ்சுக் கழகம்
- பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி
- பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம்
- ராஜீவ் காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- ராஜீவ் காந்தி கால்நடை அறிவியல் கல்லூரி
- பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி* டாக்டர்.அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி
Remove ads
சுற்றுலா
புதுச்சேரி தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். புதுச்சேரி அரவிந்தரின் (1872-1950) வசிப்பிடமாக இருந்தது, ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் இன்னும் புதுச்சேரியில் இயங்குகிறது. ஒரு தனித்துவமான நகரமான ஆரோவில் ஆனது, உலகின் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்களால் ஈர்க்கப்படுகிறார்கள், இது நகரின் புறநகரில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல கோவில்கள், தேவாலயங்கள், நினைவுச்சின்னங்கள், பூங்காக்கள் மற்றும் மசூதிகள் உள்ளன.
Remove ads
குறிப்பிடத்தக்க நபர்கள்
- பாரதிதாசன், தமிழ் கவிஞர்
- ஆனந்த் ராஜ், தமிழ்த் திரைப்பட நடிகர்
- கல்கி கோய்ச்லின், இந்தித் திரைப்பட நடிகை
- எம். நைட் சியாமளன், ஹாலிவுட் இயக்குநர்
காட்சிக்கூடம்
- அரவிந்தரின் ஆசிரமம்
- மணக்குள விநாயகர் திருக்கோவில்
- மணக்குள விநாயகர் கோவில் யானை
- கடற்கரையில் உள்ள காந்தி சிலை, இரவு நேரத்தில்
- புதுச்சேரி சட்டப்பேரவை
- புதுச்சேரி கடற்கரையின் ஒரு பகுதி
- புதுச்சேரி கடற்கரையின் மற்றோரு பகுதி
- புதுவை பாரதி பூங்கா
- குபேர் மார்க்கெட் மணிக்கூண்டு
- புதுச்சேரி கடற்கரை
- புதுச்சேரி காந்தி சிலை
- புதுச்சேரி கடற்கரை
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads