இலாரென்சியம்

From Wikipedia, the free encyclopedia

இலாரென்சியம்
Remove ads

இலாரென்சியம் (Lawrencium, உலொரென்சியம்) என்பது ஒரு செயற்கைத் தனிமம் ஆகும். இதன் குறியீடு Lr (முன்னர் Lw), அணு எண் 103. பல செயற்கைக் கதிரியக்கத் தனிமங்களைக் கண்டுபிடிக்க உதவிய சுழற்சியலைவியைக் கண்டுபிடித்த எர்னஸ்ட் லாரன்சு என்பவரின் நினைவாக இத்தனிமத்திற்கு 'இலாரென்சியம்' எனப் பெயரிடப்பட்டது. கதிரியக்க உலோகமான இலாரென்சியம் யுரேனியப் பின் தனிமங்களில் பதினோராவதும், ஆக்டினைடு தொடரின் கடைசித் தனிமமும் ஆகும். 100 இற்கும் மேலான அணுவெண்களைக் கொண்ட அனைத்துத் தனிமங்களைப் போன்றே, இலாரென்சியமும் துகள் முடுக்கிகளில் இலேசான தனிமங்களை மின்னூட்டத் துகள்களுடன் மோத வைப்பதன் மூலம் பெறப்படுகின்றது. இதுவரையில் இலாரென்சியத்தின் பதின்மூன்று ஓரிடத்தான்கள் அறியப்பட்டுள்ளன; இவற்றில் மிகவும் நிலையான ஓரிடத்தான் 266Lr ஆகும், இதன் அரைவாழ்வுக் காலம் 11 மணித்தியாலங்கள் ஆகும். ஆனாலும், குறைந்த காலம் வாழக்கூடிய 260Lr (அரைவாழ்வு 2.7 நிமிடங்கள்) பெருமளவில் உற்பத்தி செய்யக்கூடியதனால், இது வேதியியலில் பரந்த அளவில் பயன்படுத்தப்படுகிறது.

விரைவான உண்மைகள் இலாரென்சியம், தோற்றம் ...

இலாரென்சியம் தனிம அட்டவணையில் இலூட்டீசியத்தின் பாரமான அமைப்புக்கு ஏற்ப செயல்படுவது வேதியியல் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இது மூவிணைதிறன் கொண்ட தனிமம் ஆகும். இதனால், இது தாண்டல் உலோகங்களின் 7-வது அட்டவணையின் முதலாவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இதன் எதிர்மின்னி அமைப்பு தனிம அட்டவணையில் அதன் நிலைக்கு முரண்பாடாக உள்ளது, அதனை ஒத்த இலூட்டீசியத்தின் s2d உள்ளமைவுக்குப் பதிலாக s2p உள்ளமைவைக் கொண்டுள்ளது. இதன் பொருள் இலாரன்சியம் தனிம அட்டவணையில் அதன் நிலைக்கு எதிர்பார்த்ததை விட அதிக நிலையற்ற தன்மையைக் கொண்டுள்ளதாகக் கருதலாம், அத்துடன் ஈயத்துடன் ஒப்பிடக்கூடிய நிலையற்ற தன்மையைக் கொண்டிருக்கலாம்.

1950கள், 1960கள், 1970களில், சோவியத் ஒன்றியம், அமெரிக்க ஆய்வுகூடங்களில் இலாரென்சியம் பெருமளவில் தொகுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், கண்டுபிடிப்பிற்கான முன்னுரிமை மற்றும் தனிமத்திற்குப் பெயரிடுவது சோவியத் மற்றும் அமெரிக்க அறிவியலாளர்களிடையே சர்ச்சைக்குள்ளானது, அதே நேரத்தில் பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (IUPAC) அமெரிக்கா பரிந்துரைத்த இலாரன்சியத்தை அதிகாரப்பூர்வ பெயராக அறிவித்து, அமெரிக்க அணிக்கு அதன் கண்டுபிடிப்புக்கான உரிமையை வழங்கியது. இது 1997 இல் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, இரு அணிகளும் கண்டுபிடிப்பைப் பகிர்ந்து கொண்டன, ஆனாலும், பெயர் மாற்றப்படவில்லை.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads