தாண்டலம் (Tantalum, டாண்டலம்)) என்பது Ta என்ற வேதிக் குறியீட்டையும் 73 என்ற அணு எண்ணையும் கொண்ட ஒரு தனிமம் ஆகும். "தாண்டேலியம்" (tantalium) என முன்னர் அறியப்பட்டிருந்த இத்தனிமத்தின் பெயர் கிரேக்கத் தொன்மவியலில் வரும் "தாண்டலசு" (Tantalus) என்ற வில்லனின் பெயரால் அறியப்படுகிறது.[3] தாண்டலம் ஓர் அரிய, கடினமான, நீல-சாம்பல், சுடர்விடும் தாண்டல் உலோகம் ஆகும். இது அரிப்பைத் தவிர்க்கும் உலோகம் ஆகும். மீவெப்பம் தாங்கும் உலோகங்களில் ஒன்றான இது உலோகக் கலவைகளில் சிறிய கூறுகளாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. தாண்டலத்தின் வேதியியல் செயலற்ற தன்மை ஆய்வக உபகரணங்களுக்கு மதிப்புமிக்க பொருளாகவும், பிளாட்டினத்திற்கு மாற்றாகவும் அமைகிறது. செல்லிடத் தொலைபேசிகள், இறுவட்டு இசைக்கருவிகள், நிகழ்பட ஆட்டக் கருவிகள், மற்றும் கணினிகள் போன்ற மின்னணுக் கருவிகளில் உள்ள மின்தேக்கிகளில் தாண்டலம் பயன்படுத்தப்படுகின்றது. தாண்டலம் வேதியியல் ரீதியாக ஒத்த நையோபியத்துடன் சேர்ந்து, தாண்டலைட்டு, கொலம்பைட்டு, கோல்டான் ஆகிய கனிமக் குழுக்களில் சேர்கிறது.[4] தாண்டலம் தொழில்நுட்ப ரீதியாக ஒரு முக்கியமான உறுப்பு என்று கருதப்படுகிறது.