குப்தப் பேரரசு
பண்டைய இந்தியப் பேரரசு (அண். பொ. ஊ. 3ம் நூற்றாண்டு - பொ. ஊ. 575) From Wikipedia, the free encyclopedia
Remove ads
குப்தப் பேரரசு (Gupta Empire) என்பது ஒரு பண்டைக் கால இந்தியப் பேரரசு ஆகும். இது பொ. ஊ. ஆரம்ப 4-ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஊ. ஆரம்ப 6-ஆம் நூற்றாண்டு வரை நிலைத்திருந்தது. இது அதன் உச்ச பட்ச நிலையின் போது, தோராயமாக பொ. ஊ. 319 முதல் 467 வரை, பெரும்பாலான இந்தியத் துணைக் கண்டத்தை உள்ளடக்கியிருந்தது.[6] பிற வரலாற்றாளர்கள் பின் வரும் இயல்பாக்கத்தை விவாதத்திற்கு உள்ளாக்குகின்ற போதிலும்,[note 1][note 2][9][10] சில வரலாற்றாளர்களால் இக்காலமானது இந்தியாவின் பொற்காலம் என்று கருதப்படுகிறது.[11] பேரரசின் ஆட்சி புரிந்த அரசமரபானது குப்தரால் நிறுவப்பட்டது. அரசமரபின் மிகுந்த குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களாக முதலாம் சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் ஸ்கந்தகுப்தர் ஆகியோர் திகழ்ந்தனர். பொ. ஊ. 5-ஆம் நூற்றாண்டின் சமசுகிருத கவிஞரான காளிதாசன் குப்தர்கள் 21 இராச்சியங்களை, இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியிலும் வென்றுள்ளனர் என்று குறிப்பிடுகிறார். இதில் பாரசீகர்கள், ஊணர்கள், காம்போஜர், ஆக்சசு பள்ளத்தாக்கின் மேற்கு மற்றும் கிழக்கில் அமைந்திருந்த பழங்குடியினங்கள், கிண்ணரர், கிராதர் மற்றும் பிறரும் அடங்குவர்.[12][13][14]
இக்காலத்தின் உயர் நிலைகளாக பெரும் பண்பாட்டு முன்னேற்றங்கள் கருதப்படுகின்றன. இவை முதன்மையாக சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் முதலாம் குமாரகுப்தரின் ஆட்சிக் காலங்களின் போது நடைபெற்றன. மகாபாரதம் மற்றும் இராமாயணம் போன்ற பல இந்து இதிகாசங்கள் மற்றும் இலக்கிய நூல்கள் இக்காலத்தின் போது தான் திருமுறையாக்கப்பட்டன.[15] காளிதாசன்,[16] ஆரியபட்டர், வராகமிகிரர் மற்றும் வாத்சாயனர் போன்ற அறிஞர்களையும் குப்தர் காலமானது உருவாக்கியது. இவர்கள் பல கல்வி சார்ந்த தளங்களில் பெரும் முன்னேற்றங்களை அடைந்தனர்.[17][18][19] குப்தர் சகாப்தத்தின் போது அறிவியல் மற்றும் அரசியல் நிர்வாகமானது புதிய உயரங்களை அடைந்தது.[18] இக்காலமானது சில நேரங்களில் பாக்ஸ் குப்தா என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் குப்த அமைதி என்பதாகும். கட்டடக் கலை, சிற்பக் கலை மற்றும் ஓவியக் கலையில் சாதனைகள் இக்காலத்தில் அடையப்பட்டன. "இந்தியாவில் மட்டுமல்லாது, இந்தியாவின் எல்லைகளைத் தாண்டியும் கலையின் ஒட்டு மொத்த இறுதியான போக்கைத் தீர்மானித்த வடிவம் மற்றும் கலை நய உணர்வுக்குப் புதிய அளவீடுகளை இக்காலமானது அமைத்தது".[20] வலிமையான வணிகத் தொடர்புகள் இப்பகுதியை ஒரு முக்கியமான பண்பாட்டு மையமாக மாற்றினர். இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து அண்டை இராச்சியங்கள் மற்றும் பகுதிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு அடித்தளமாக இப்பகுதியை நிறுவின.[21][நம்பகத்தகுந்த மேற்கோள்?] புராணங்கள் எனப்படும் பல்வேறு ஆய்வுப் பொருட்கள் குறித்த தொடக்க கால நீண்ட பாடல்கள் இக் காலத்தின் போது தான் எழுதப்பட்ட நூல்களாகவும் கூட உருவாயின என்று கருதப்படுகிறது.[20][22] இதன் ஆட்சியாளர்கள் இந்து சமயத்தைப் பின்பற்றினர். குப்தப் பேரரசில் பிராமணர்கள் வளர்ச்சியடைந்து இருந்தனர். ஆனால் குப்தர்கள் பிற நம்பிக்கைகளைக் கொண்ட மக்களிடமும் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டனர்.[23]
பதின்ம எண்முறை, இந்திய எண் முறை மற்றும் பூஜ்ஜியம் குப்தப் பேரரசுக் காலத்துக் கண்டுபிடிப்புக்களே. வரலாற்றாளர்கள், செந்நெறி நாகரிகத்தின் ஒரு மாதிரியாக குப்தப் பேரசை, ஹான் பேரரசு, தாங் பேரரசு மற்றும் ரோமப் பேரரசுடன் ஒன்றாக வைத்து எண்ணுகிறார்கள்.[24][25] மேலும் குப்தர்கள் காலத்தில் அறிவியல், தொழில்நுட்பம், தருக்கம், கணிதம், வானவியல், இந்தியத் தத்துவம், சோதிடம், இந்து தொன்மவியல், இந்து சமயம், பௌத்தம் மற்றும் சமணம் போன்ற சமயங்கள் செழித்ததுடன், இந்துப் பண்பாடு, சமசுகிருத மொழி இலக்கியங்கள் வளர்ந்தது. இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் பண்பாட்டு, நாகரீகம், கலைகள், இலக்கியங்கள் நன்கு வளர்ச்சி அடைந்தன.[26] குப்தர்களின் ஆட்சியில் கவிஞர் காளிதாசன், வானிலை மற்றும் கணித அறிஞர்களான ஆரியபட்டர் மற்றும் வராகமிகிரர், பஞ்சதந்திர நூலை எழுதிய விஷ்ணு குப்தர், காம சூத்திரம் நூலை எழுதிய வாத்சாயனர், ஆயுர்வேத மருத்துவரான சுஸ்ருதர் போன்ற பல்கலை அறிஞர்கள் வாழ்ந்தனர்.[27]
இவர்களது சொந்த முந்தைய நிலப்பிரபுக்கள், மேலும் நடு ஆசியாவைச் சேர்ந்த ஊணர்களின் (கிடாரிகள் மற்றும் அல்கான் ஹூனர்கள்) படையெடுப்புகள் போன்றவற்றால் விளைவிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அளவிலான நிலப்பரப்பு மற்றும் ஏகாதிபத்திய அதிகாரத்தின் இழப்பு போன்ற காரணிகளின் காரணமாக பேரரசானது இறுதியாக வீழ்ச்சியடைந்தது.[28][29] 6-ஆம் நூற்றாண்டில் குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவானது மீண்டும் ஏராளமான மாகாண இராச்சியங்களால் ஆட்சி செய்யப்பட்டது.
Remove ads
பூர்வீகம்
குப்தர்களின் பூர்வீக நிலம் எது என்பது தெளிவாகத் தெரியவில்லை.[30] ஒரு கருத்தியல் இவர்கள் தற்கால பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின்[31] கீழ் தோவாப் பகுதியில் தோன்றினர் என்று குறிப்பிடுகிறது. தொடக்க கால குப்த மன்னர்களின் பெரும்பாலான கல்வெட்டுகள் மற்றும் நாணயத் திரள்கள் இங்கு தான் பெறப்பட்டுள்ளன.[32][33] இந்தக் கருத்தியலானது புராணங்களாலும் ஆதரவளிக்கப்படுகிறது. புராணங்கள் தொடக்க கால குப்த மன்னர்களின் நிலப்பரப்புளாக கங்கை ஆற்று வடிநிலத்தின் பிரயாக்ராஜ், சாகேதம், மற்றும் மகதப் பகுதிகளைக் குறிப்பிடுகின்றன.[34][35]
மற்றொரு முக்கியமான கருத்தியலானது குப்தர்களின் பூர்வீக நிலத்தை கங்கை வடி நிலத்தில் உள்ள தற்கால வங்காளப் பகுதியில் குறிப்பிடுகிறது. இதை 7-ஆம் நூற்றாண்டு சீன பௌத்தத் துறவியான யிஜிங்கின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடுகிறது. யிஜிங்கின் கூற்றுப் படி, மன்னன் செ-லி-கி-தோ (இவர் அரசமரபைத் தோற்றுவித்த சிறீ குப்தருடன் அடையாளப்படுத்தப்படுகிறார்) சீனப் புனிதப் பயணிகளுக்காக மி-லி-கியா-சி-கியா-போ-னோ (வெளிப்படையாக தெரிந்த வரையில் இது மிரிக-சிக-வனத்தின் பெயர்ப்பு ஆகும்) என்ற இடத்தில் ஒரு கோயிலைக் கட்டினார். நாளந்தாவிற்குக் கிழக்கே 40 யோசனைகளுக்கும் மேலான தூரத்தில் இக்கோயில் அமைந்திருந்தது என யிஜிங் குறிப்பிடுகிறார். இதன் பொருளானது இது நவீன வங்காளப் பகுதியில் ஏதோ ஓர் இடத்தில் அமைந்திருக்க வேண்டும் என்பதாகும்.[36] மற்றொரு கோட்பாட்டு தொடக்க கால குப்த இராச்சியமானது மேற்கு பிரயகாவில் இருந்து கிழக்கே வடக்கு வங்காளம் வரை பரவியிருந்தது என்கிறது.[37]
குப்தர்களின் பதிவுகள் அரசமரபின் வர்ணத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை.[38] ஏ. எஸ். அல்டேகர் போன்ற சில வரலாற்றாளர்கள் இவர்கள் வைசிய பூர்வீகத்தை உடையவர்கள் என்ற கருத்தியலை முன் வைக்கின்றனர். சில பண்டைக் கால இந்திய நூல்கள் "குப்தா" என்ற பெயரை வைசிய வர்ணத்தின் உறுப்பினர்களுக்குப் பரிந்துரைக்கிறது.[39][40] ரா. ச. சர்மா என்ற வரலாற்றாளர் வணிகத்துடன் பாரம்பரியமாகத் தொடர்புபடுத்தப்படும் வைசியர்கள் முந்தைய ஆட்சியாளர்களால் விதிக்கப்பட்ட ஒடுக்கு முறை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்குப் பிறகு ஆட்சியாளர்களாக மாறியிருக்கலாம் என்று கருதுகிறார். [41]வைசிய பூர்வீக கருத்தியலை விமர்சிப்பவர்கள் குப்தர் காலத்திற்கு முன்னரும், குப்தர் காலத்தின் போதும் பல வைசியர் அல்லாதவர்களின் பெயர்களுக்கும் "குப்தா" என்ற பின்னொட்டு உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.[42] அரசமரபின் பெயரான "குப்தா" என்பது வெறுமனே குடும்பத்தின் முதல் மன்னனான குப்தரின் பெயரில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர்.[43] எஸ். ஆர். கோயல் போன்ற சில அறிஞர்கள், குப்தர்கள் பிராமணர்களுடன் திருமண உறவு முறையைக் கொண்டிருந்ததால், இவர்கள் பிராமணர்கள் என்ற கருத்தை முன் வைக்கின்றனர். ஆனால் பிறர் இந்த ஆதாரத்தை உறுதியான முடிவுக்கு இட்டுச் செல்லாத ஒன்று என்று நிராகரிக்கின்றனர்.[44] குப்த இளவரசி பிரபாவதி குப்தாவின் புனே மற்றும் ரித்தாபூர் கல்வெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு சில அறிஞர்கள் இந்த இளவரசியின் தந்தை வழி கோத்திரத்தின் பெயரானது "தரானா" என்று நம்புகின்றனர். ஆனால், இந்த கல்வெட்டுகளின் மாற்று வாசிப்பானது தரானா என்பது இந்த இளவரசியின் தாய் குபேரநகாவின் கோத்திரம் என்பதைப் பரிந்துரைக்கிறது.[45]
Remove ads
வரலாறு
தொடக்க கால ஆட்சியாளர்கள்









குப்தர் (குப்தர் எழுத்துமுறை: கு-ப்தா, fl. பொ. ஊ. பிந்தைய 3-ஆம் நூற்றாண்டு) என்பவர் அரசமரபின் தொடக்க காலத்தில் அறியப்பட்ட மன்னராக உள்ளார். வேறுபட்ட வரலாற்றாளர்கள் பலவாறாக இவரது ஆட்சியின் தொடக்கத்தை பொ. ஊ. 3-ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி முதல் பிந்தைய பகுதி வரை காலமிடுகின்றனர்.[47][48] குப்தர் குப்தப் பேரரசை அண். பொ. ஊ. 240 – அண். 280-இல் நிறுவினார். இவருக்குக் பிறகு இவரது மகன் கடோத்கஜனும் (அண். பொ. ஊ. 280 – அண். 319), அவருக்குப் பிறகு கடோத்கஜனின் மகன் முதலாம் சந்திரகுப்தரும் (அண். பொ. ஊ. 319 – அண். 335) ஆட்சிக்கு வந்தனர்.[49] "செ-லி-கி-தோ" என்பது 7-ஆம் நூற்றாண்டு சீன பௌத்தத் துறவி யிஜிங்கால் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மன்னனின் பெயர் ஆகும். இது "சிறீ குப்தர்" (சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: சிறீகுப்தா) என்ற பெயரின் ஒரு பெயர்ப்பு என்று நம்பப்படுகிறது. "சிறீ" என்பது மதிப்புக்காக கொடுக்கப்படும் ஒரு முன்னொட்டு ஆகும்.[50] யிஜிங்கின் கூற்றுப் படி, இம்மன்னர் சீன பௌத்த புனிதப் பயணிகளுக்காக ஒரு கோயிலை மி-லி-கியா-சி-கியா-போ-னோவுக்கு (மிரிகசிகவனத்தின் ஒரு பெயர்ப்பு என்று இது நம்பப்படுகிறது) அருகில் கட்டினார்.[51]
அலகாபாத் தூண் கல்வெட்டில் குப்தரும், அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவருமான கடோத்கஜனும் மகாராஜா என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், அடுத்த மன்னனான முதலாம் சந்திரகுப்தர் மகாராஜாதிராஜா என்று குறிப்பிடப்பட்டுள்ளார். பிந்தைய காலத்தில் மகாராஜா என்ற பட்டமானது நிலப்பிரபு நிலையில் உள்ள ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்டது. இது குப்தர் மற்றும் கடோத்கஜன் ஆகியோர் அனேகமாக குசானப் பேரரசுக்கு திறை செலுத்தியவர்கள் என்ற பரிந்துரைகளைக்கு இது இட்டுச் சென்றது.[52] குப்தர் காலத்திற்கு முன்னர் மற்றும் குப்தர் காலத்துக்குப் பிந்தைய காலங்களில் பல இடங்களில் முதன்மையான இறையாண்மையுள்ள ஆட்சியாளர்கள் மகாராஜா என்ற பட்டத்தைப் பயன்படுத்தியுள்ளனர். எனவே, இவர்கள் திறை செலுத்தினார்கள் என்பதை உறுதியாகக் கூற இயலாது. இவ்வாறாக குப்தர் மற்றும் கடோத்கஜன் ஒரு தாழ்ந்த நிலையைக் கொண்டிருந்தனர் மற்றும் முதலாம் சந்திரகுப்தரை விட இவர்கள் சக்தி குறைவானவர்களாக இருந்தனர் என்பதில் சந்தேகமில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.[53]
முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி இளவரசியான குமார தேவியை மணம் புரிந்து கொண்டார். இது இவரது அரசியல் சக்தி மற்றும் ஆட்சிப் பரப்பை விரிவாக்குவதற்கு ஒரு வேளை உதவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏகாதிபத்திய பட்டமான மகா ராஜாதி ராஜா என்பதை இவர் பயன்படுத்துவதற்கு இது வாய்ப்பளித்தது.[54] அரசமரபின் அதிகாரப்பூர்வ பதிவுகளின் படி, இவருக்குப் பிறகு இவரது மகன் சமுத்திரகுப்தர் அரியணைக்கு வந்தார். எனினும், கச்சா என்று பெயரிடப்பட்ட ஒரு குப்த ஆட்சியாளரால் வெளியிடப்பட்ட நாணயங்களின் கண்டுபிடிப்பானது இது குறித்து சில விவாதங்களுக்கு வழி வகுத்தது. ஒரு கருத்தியலின் படி, சமுத்திரகுப்தரின் மற்றொரு பெயர் கச்சாவாகும்; மற்றொரு கருத்தியலின் படி, அரியணைக்கு உரிமை கோரிய ஒரு எதிர்ப்பாளர் கச்சாவாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[55]
சமுத்திரகுப்தர்
சமுத்திரகுப்தர் பொ. ஊ. 335 அல்லது 350 வாக்கில் தனது தந்தைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார். அண். பொ. ஊ. 375 வரை ஆட்சி செய்தார்.[56] இவரது அரசவையைச் சேர்ந்த அரிசேனரால் உருவாக்கப்பட்ட அலகாபாத் தூண் கல்வெட்டானது விரிவான படையெடுப்பு வெற்றிகளை இவர் பெற்றதாக குறிப்பிடுகிறது.[57] ஆரியவர்த்தத்தின் எட்டு மன்னர்கள், நாகர்கள் உள்ளிட்ட வடக்குப் பகுதியினர் ஆகியோரை வேரறுத்ததாக சமுத்திரகுப்தரை பற்றி இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.[58] காட்டுப் பகுதியின் அனைத்து மன்னர்களையும் இவர் அடிபணிய வைத்தார் என்று இக்கல்வெட்டு மேலும் குறிப்பிடுகிறது. இந்த பகுதி பெரும்பாலும் நடு இந்தியாவில் அமைந்திருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[59] தெற்குப் பகுதியான தச்சிணபாதையின் 12 ஆட்சியாளர்களை இவர் தோற்கடித்ததாகவும் கூட இது குறிப்பிடுகிறது. இத்தகைய பல மன்னர்களின் துள்ளியமான அடையாளமானது நவீன அறிஞர்கள் மத்தியில் விவாதத்திற்குரியதாக உள்ளது.[60] ஆனால், இந்த மன்னர்கள் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்திருந்த பகுதிகளை ஆண்டு வந்தனர் என்பது தெளிவாக தெரிகிறது.[61] தெற்கு பல்லவ இராச்சியம் வரை சமுத்திரகுப்தர் முன்னேறினார் என இந்த கல்வெட்டு பரிந்துரைக்கிறது. காஞ்சிபுரத்தில் ஆட்சி செய்து வந்த பல்லவ பிரதிநிதியான விஷ்ணு கோபனை தோற்கடித்ததற்கு பிறகு இவ்வாறு முன்னேறினார். இவரது தெற்கு படையெடுப்பின்போது நடு இந்தியாவின் காட்டுப் பகுதிகள் வழியாக சந்திரகுப்தர் கடந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.[62] தற்கால ஒடிசாவின் கிழக்கு கடற்கரையை இவர் அடைந்தார். பிறகு வங்காள விரிகுடாவின் கடற்கரைக்கு பக்கவாட்டில் தெற்கு நோக்கி அணி வகுத்தார்.[63]
அண்டை அரசியல் அமைப்புகளுடன் காணப்படும் குப்த நிலப்பரப்பின் வளர்ச்சி
பல எல்லைப்புற இராச்சியங்களின் ஆட்சியாளர்கள் மற்றும் பழங்குடியின சிலவர் ஆட்சியாளர்கள் சமுத்திரகுப்தருக்கு திறை செலுத்தியது, இவரின் ஆணைகளின் படி நடந்தது, இவருக்கு முன் அடி பணிந்ததாகவும் அலகாபாத் தூண் கல்வெட்டானது குறிப்பிடுகிறது.[64][14] சமதாதம், தாவகம், காமரூபம், நேபாளம் மற்றும் கருத்திரிபுரம் உள்ளிட்ட எல்லை இராச்சியங்களையும்,[13] மாளவர், அருச்சுனயானர், யௌதேயர், மத்திரகர், மற்றும் அபிரர் மற்றும் பிறர் உள்ளிட்ட பழங்குடியின சிலவர் ஆட்சி அமைப்புகளையும் இது குறிப்பிடுகிறது.[14]
நேரடியாக இவர் இருந்த இடத்திற்கு வந்ததன் மூலம் சமுத்திரகுப்தரின் ஆதரவை பெற பல அயல் நாட்டு மன்னர்கள் முயற்சித்தனர் என இறுதியாக இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவருக்கு தங்களது மகள்களை திருமணம் செய்து வைக்க முன் வந்தனர் அல்லது மற்றொரு புரிதலின் படி கன்னிகளை இவருக்கு அன்பளிப்பாக கொடுத்தனர்,[65] மற்றும் கருடனை சித்தரித்த குப்த முத்திரையை பயன்படுத்துவதன் மூலம் தங்களது சொந்த நிலப்பரப்புகளை நிர்வகிக்க விரும்பினர்.[66] இது ஒரு மிகைப்படுத்தலாக கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக இந்த மன்னர்களில் ஒருவராக சிம்களத்தின் மன்னரையும் இக்கல்வெட்டானது பட்டியலிடுகிறது. சிம்கள மன்னன் மேகவண்ணன் குப்த மன்னருக்கு விலையுயர்ந்த பரிசு பொருட்களை அனுப்பி புத்தகயையில் ஒரு புத்த மடாலயத்தை கட்டுவதற்கு இவரது அனுமதியை வேண்டினான் என்பது சீன ஆதாரங்களிலிருந்து அறியப்படுகிறது. சமுத்திரகுப்தரின் புகழ்ச்சியானது இத்தகைய தூதுச் செயலை அடிபணியும் செயலாக விளக்கியுள்ளதாக தோன்றுகிறது.[67]
சமுத்திரகுப்தர் இந்து சமயத்தின் வைணவப் பிரிவை சேர்ந்தவராக இருந்தார் என்று தோன்றுகிறது. இதற்கு இவரது ஏரண் கல்வெட்டானது ஆதாரமாக உள்ளது.[68][69] இவர் பல பண்டைய வேத சமய விழாக்களை நடத்தினார்.[70] பசுக்கள் மற்றும் தங்கத்தை ஈகை குணத்துடன் நன்கொடை அளித்ததற்காக குப்த பதிவுகள் இவரை குறிப்பிடுகின்றன.[68] இவர் அசுவமேத யாகத்தை நடத்தினார். தங்களது ஏகாதிபத்திய இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்காக பண்டைய இந்திய மன்னர்களால் இந்த யாகம் பயன்படுத்தப்பட்டது. இந்த யாகத்தை குறிப்பதற்காக இவர் தங்க நாணயங்களை வெளியிட்டார்.[71]
அலகாபாத் தூண் கல்வெட்டானது சமுத்திரகுப்தரை ஒரு புத்திசாலி மன்னனாகவும், கண்டிப்பான நிர்வாகியாகவும் குறிப்பிடுகிறது. ஏழைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு கருணையுடன் செயல்பட்டாராகவும் இவரைக் குறிப்பிடுகிறது.[72] ஒரு இசைக் கலைஞர் மற்றும் ஒரு கவிஞராக மன்னரின் திறமைகள் குறித்தும் இது குறிப்பிடுகிறது. சமுத்திரகுப்தரை "கவிஞர்களுக்கெல்லாம் மன்னர்" என்று அழைக்கிறது.[73] இத்தகைய குறிப்புகளை சமுத்திரகுப்தரின் தங்க நாணயங்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன. அவற்றில் இவர் ஒரு வீணையை மீட்டுபவராக காட்டப்பட்டுள்ளார்.[74]
தற்போதைய இந்தியாவில் சிந்து-கங்கைச் சமவெளியின் ஒரு பெரும் பகுதியை இவர் நேரடியாக கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார் என்று தோன்றுகிறது. மேலும், நடு இந்தியாவின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியையும் கட்டுப்படுத்தினார்.[75] இது தவிர, இவரது பேரரசானது வட இந்தியாவைச் சேர்ந்த திறை செலுத்திய முடியாட்சிகள் மற்றும் பழங்குடியின அரசுகளையும், இந்தியாவின் தென் கிழக்கு கடற்கரையில் இருந்த பகுதிகளையும் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளடக்கியிருந்தது.[76][61]
இவரை இந்தியாவின் நெப்போலியன் என வரலாற்று ஆய்வாளர் வின்செண்ட் ஆர்தர் சுமித் அழைத்துள்ளார்.[77]
இராமகுப்தர்

இராமகுப்தர் ஓர் ஆறாம் நூற்றாண்டு நாடகமான தேவிசந்திரகுப்தத்தின் மூலம் அறியப்படுகிறார். இந்த நாடகத்தில் இவர் தன்னுடைய எதிரிகளான சகர்களிடம் தன்னுடைய மனைவியை சரணடைய வைக்கிறார். இவரது சகோதரர் சந்திரகுப்தர் எதிரிகளின் முகாமுக்குள் ஊடுருவி அப்பெண்ணை மீட்கிறார். சகர்களின் மன்னைக் கொல்கிறார். இந்த நிகழ்வுகளின் வரலாற்றுத் தன்மையானது தெளிவாக தெரியவில்லை. ஆனால், துர்சன்பூரில் கண்டெடுக்கப்பட்ட மூன்று சைன சிலைகளின் மூலம் இராமகுப்தரின் நிலையானது உறுதிப்படுத்தப்படுகிறது. அதிலுள்ள கல்வெட்டுக்கள் இவரை மகா ராஜாதி ராஜா என்று குறிப்பிடுகின்றன. ஏரண்-விதிஷா பகுதியில் இவரது தாமிர நாணயங்களில் ஒரு பெரும் எண்ணிக்கையிலானவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை ஐந்து தனித்துவமான வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வகைகளில் கருடன்,[79] கருடத்துவஜன், சிங்கம் மற்றும் எல்லை வடிவங்கள் ஆகியவை அடங்கும். இத்தகைய நாணயங்களின் பிராமி எழுத்து முறை வடிவங்களானவை தொடக்க கால குப்த பாணியில் எழுதப்பட்டுள்ளன.[80]
இரண்டாம் சந்திரகுப்த "விக்கிரமாதித்தன்"
குப்தப் பதிவுகளின் படி, சமுத்திரகுப்தர் தனது மகன்களில் ஒருவரும், தனது ராணி தத்த தேவிக்கு பிறந்தவருமான இளவரசன் இரண்டாம் சந்திரகுப்தரை தனக்கு பிந்தைய ஆட்சியாளராக தேர்ந்தெடுத்தார். இரண்டாம் சந்திரகுப்தர் அல்லது விக்கிரமாதித்தன் (வெற்றி சூரியன்) என்று அழைக்கப்படும் இவர் 375 முதல் 415 வரை ஆட்சி புரிந்தார். குந்தளத்தைச் சேர்ந்த ஒரு கடம்ப இளவரசியும், நாக வழி தோன்றலுமான (நாககுலோத்பான்னா) குபேரநாகாவை இவர் மணம் புரிந்தார். இந்த நாக ராணிக்கு பிறந்த இவரது மகளான பிரபாவதிகுப்தா தக்காணத்தின் வாகாடாக ஆட்சியாளரான இரண்டாம் ருத்திரசேனருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்.[81] இவரது மகன் முதலாம் குமாரகுப்தர் கருநாடக பகுதியின் ஒரு கடம்ப இளவரசியை மணம் புரிந்து கொண்டார். இரண்டாம் சந்திரகுப்தர் தன்னுடைய எல்லைகளை மேற்கு நோக்கி விரிவாக்கினார். மால்வா, குசராத்து மற்றும் சௌராட்டிராவின் மேற்கு சத்திரபதி சகர்களை தோற்கடித்த 409-ஆம் ஆண்டு வரை நீடித்த படையெடுப்புகளை இவர் மேற்கொண்டார். இவரது முதன்மையான எதிரியான மூன்றாம் ருத்திரசிம்மன் 395-இல் தோற்கடிக்கப்பட்டார். வங்காள அரசுகளை இவர் நொறுக்கினார். இது இவரது கட்டுப்பாட்டை இந்தியாவின் கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்கு கடற்கரை வரை நீட்டித்தது. உஜ்ஜைனில் ஒரு இரண்டாம் தலைநகரத்தை இவர் நிறுவினார். பேரரசின் உச்ச நிலையாக இது கருதப்படுகிறது.[சான்று தேவை] குந்தள கல்வெட்டுகள் கருநாடகத்தின் குந்தள பகுதியில் சந்திரகுப்தரின் ஆட்சியை குறிப்பிடுகின்றன.[82] குன்சா கல்வெட்டானது வடமேற்கு இந்திய துணைக்கண்டத்தை சந்திரகுப்தரால் ஆள முடிந்தது என்று குறிப்பிடுகிறது. பல்குவை வெல்ல இவர் முன்னேறினார் என்று குறிப்பிடுகிறது. எனினும், சில அறிஞர்கள் இத்தகைய குப்த மன்னரது அடையாளத்தை விவாதத்திற்கு உள்ளாகின்றனர்.[83][84] சாளுக்கிய ஆட்சியாளரான ஆறாம் விக்கிரமாதித்தன் (ஆட்சி. பொ. ஊ. 1076 - 1126) சந்திரகுப்தரை இவரது பட்டத்துடன் குறிப்பிடுகிறார். மேலும் அவர், "விக்கிரமாதித்தன் மற்றும் நந்தன் போன்ற மன்னர்களின் மேன்மைகள் ஏன் இன்னும் தொடர்ந்து ஒரு தடையாக இருக்க வேண்டும்? இவர் சகர்களின் பெயருடைய சகாப்தத்தை தீர்க்கமாக நீக்கி சாளுக்கியர்களின் பெயருடைய சகாப்தத்தை தொடங்கினார்" என்று குறிப்பிடுகிறார்.[85]

போரின் மூலமாக பேரரசு உருவாக்கப்பட்ட போதும், இவர்களின் ஆட்சிக் காலமானது இந்து கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் அறிவியலின் அதன் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய பாணிக்காக அறியப்படுகிறது. குறிப்பாக, இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தின் போது இது வளர்ச்சியடைந்தது. தியோகரில் உள்ள தசாவதாரக் கோயிலில் உள்ள புடைப்புகள் போன்ற இந்துக் கலையின் சில சிறந்த வேலைப்பாடுகள் குப்தர் கலையின் மேன்மையை காட்டுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, குப்தர் கலைக்கு அதன் தனித்துவமான கருத்துருவை பல காரணிகளின் கூட்டிணைவானது கொடுத்தது. இந்த காலத்தின் போது வளர்ந்து வந்த பௌத்த மற்றும் சைன பண்பாடுகளுக்கும் குப்தர்கள் ஆதரவளித்தனர். இந்த காரணத்திற்காக இந்து சமயம் சாராத குப்தர் கால கலைக்கும் ஒரு நீண்ட வரலாறு கூட உள்ளது. பெரும்பாலான கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் குப்தர் கால பௌத்த கலையானது மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தது. பல முன்னேற்றங்கள் சீன அறிஞர் மற்றும் பயணியான பாசியானால் அவரது நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்டு பின்பு பதிப்பிக்கப்பட்டுள்ளது.
இலக்கிய கலைகளில் சிறந்து விளங்கிய, நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்ட ஒன்பது பேரின் ஒரு குழுவை கொண்டிருந்ததால் சந்திரகுப்தரின் அரசவை மேலும் புகழ் பெற்றிருந்தது. இந்த ஒன்பது பேரில் ஒருவர் காளிதாசன் ஆவார். இவரது வேலைப்பாடுகள் பல பிற இலக்கிய மேதைகளின் வேலைப்பாடுகளை சிறிதாக தோன்றுமாறு ஆக்கியுள்ளது. இது இவரது காலத்தில் மட்டும் இல்லாமல் இவரது காலத்தைத் தாண்டிய காலத்தில் வந்த வேலைப்பாடுகளையும் சிறியதாக ஆக்கியுள்ளது. தன்னுடைய வரிகளில் சிரிங்கார காரணியிலிருந்து மென்னயத்துடன் கூடிய மிகு நலம் பெற்றதற்காக காளிதாசன் முதன்மையாக அறியப்படுகிறார்.
அயல் நாட்டுப் பழங்குடியினங்களுக்கு எதிரான படையெடுப்புகள்

இந்தியாவுக்கு உள் மற்றும் வெளியே சுமார் இருபத்தி ஒரு இராச்சியங்களை வென்றதற்காக சந்திரகுப்த விக்கிரமாதித்தனை 4-ஆம் நூற்றாண்டு சமசுகிருத கவிஞரான காளிதாசன் தனது இரகுவம்சம் எனும் காவியத்தில் போற்றுகிறார். கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் தன்னுடைய படையெடுப்பை முடித்ததற்கு பிறகு, விக்கிரமாதித்தன் (இரண்டாம் சந்திரகுப்தர்) வடக்கு நோக்கி சென்றார். பாரசீகர்களையும், பிறகு ஆமூ தாரியா பள்ளத்தாக்கின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்த முறையை ஊணர் மற்றும் கம்போஜ பழங்குடியினங்களை அடி பணிய வைத்தார். இதற்கு பிறகு கிண்ணரர், கிராதர் போன்ற மலை பழங்குடியினங்களை தோற்கடிப்பதற்காக இமயமலை பகுதிக்குள் மன்னர் முன்னேறினார். மேலும் இந்திய பகுதிகளுக்குள் இருந்தவர்களையும் தோற்கடிக்க முன்னேறினார்.[12][முதன்மையற்ற ஆதாரம் தேவை] தன்னுடைய வேலைப்பாடுகளில் ஒன்றில் காளிதாசன் நாட்டிலிருந்து சகர்களை வெளியேற்றியதற்காக இவரை குறிப்பிடுகிறார். அவர் 'அழகான உஜ்ஜைன் நகரத்திலிருந்து சகர்களை துரத்தியடித்தவர் விக்கிரமாதித்தன் தான் இல்லையா?' என்று குறிப்பிடுகிறார்.[86]
காஷ்மீரி எழுத்தாளர் சேமேந்திரர் தன்னுடைய பிருகத்கதமஞ்சரி நூலில், மன்னன் விக்ரமாதித்தன் (இரண்டாம் சந்திரகுப்தர்) "சகர், மிலேச்சர், காம்போஜர், யவனர், துசாரர், பாரசீகர், ஊணர், மற்றும் பிறர் போன்ற காட்டுமிராண்டிகளை, இந்த பாவம் செய்யும் மிலேச்சர்களை முழுவதுமாகக் கொன்றழித்ததன் மூலம் புனிதமான பூமிக்கு சுமையாக இருந்தவர்களை நீக்கினார்" என்று குறிப்பிடுகிறார்.[87][முதன்மையற்ற ஆதாரம் தேவை][88][89][நம்பகத்தகுந்த மேற்கோள்?]
பாசியான்
குப்தப் பேரரசர் இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தின் போது இந்தியாவுக்கு வருகை புரிந்த புனித பயணிகளில் ஒருவராக சீன பௌத்த துறவியான பாசியான் திகழ்கிறார். பொ. ஊ. 399-இல் சீனாவில் இருந்து தன்னுடைய பயணத்தை அவர் தொடங்கினார். பொ. ஊ. 405-இல் இந்தியாவை அவர் வந்தடைந்தார். பொ. ஊ. 411 வரை இந்தியாவில் அவர் தங்கியிருந்தார். இக்காலத்தில் மதுரா, கன்னோசி, கபிலவஸ்து, குசிநகர், வைசாலி, பாடலிபுத்திரம், காசி, மற்றும் ராஜகிரகம், கன்னோசி ஆகிய இடங்களுக்கு இவர் புனித பயணம் மேற்கொண்டார். பேரரசின் நிலை குறித்து கவனமான குறிப்புகளை இவர் பதிவு செய்தார். நிர்வாகத்தின் மிதமான தன்மை குறித்து பாசியான் மதிப்பு கொண்டார். தண்டனை சட்டமானது மிதமானதாக இருந்தது. குற்றங்களுக்கு தண்டனையாக அபராதங்கள் மட்டுமே விதிக்கப்பட்டன. இவரது குறிப்புகளிலிருந்து குப்த பேரரசின் காலமானது செழிப்பான காலமாக இருந்தது என்று அறிய முடிகிறது. இக்காலத்தின் வரலாறு குறித்த மிகுந்த முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக இவரது குறிப்புகள் உள்ளன.[90]
மதுராவை அடைந்த பாசியான் பின்வருமாறு குறிப்பிடுகிறார்––
"பனி மற்றும் வெப்பம் ஆகியவை சிறந்த முறையில் மிதமாக உள்ளன. பனிக் கட்டிகள் இங்கு இல்லை. மக்கள் ஏராளமான அளவிலும், மகிழ்ச்சியாகவும் உள்ளனர். தங்களது வீடுகளை பதிவு செய்யும் தேவை அவர்களுக்கு இல்லை. அரசனின் நிலத்தை பயிர் செய்பவர்கள் மட்டும் அதற்கான (ஒரு பங்கு) வரியை செலுத்த வேண்டியுள்ளது. அவர்கள் எங்கும் செல்ல விரும்பினால் நிலத்திலிருந்து சென்று விடலாம். அந்த நிலத்திலேயே வாழ விரும்பினால் அங்கேயே வாழலாம். சிரச்சேதம் அல்லது (பிற) மரண தண்டனைகளின்றி மன்னர் ஆட்சி செய்கிறார். சூழ்நிலைகளைப் பொறுத்து குற்றவாளிகளுக்கு வெறுமனே அபராதம் மட்டும் விதிக்கப்படுகிறது. ஆட்சிக்கு எதிரான தீய கலகங்களை தொடர்ந்து முயற்சிப்பவர்களும் கூட வலது கை மட்டுமே துண்டிக்கப்படுகிறது. மன்னரின் பாதுகாவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது. ஒட்டு மொத்த நாடு முழுவதும் மக்கள் எந்த ஓர் உயிரினத்தையும் கொல்வது கிடையாது, மதுபானத்தை குடிப்பது கிடையாது, வெங்காயங்களையோ அல்லது பூண்டையோ உண்பது கிடையாது."[90]
முதலாம் குமாரகுப்தன்

முன்புறம்: பிறைகளுடன் கூடிய மன்னனின் மார்பளவு உருவம், ஒரு சிதிலமடைந்த கிரேக்க எழுத்துக்களுடன் காணப்படுகின்றன.[91][92]
பின்புறம்: விரிந்த இறகுகளுடன் நிற்கும் கருடன். பிராமி எழுத்துக்கள்: பரம-பகவத ராஜாதி ராஜா ஸ்ரீ குமாரகுப்த மகேந்திராதித்தியா. [93]
இரண்டாம் சந்திரகுப்தருக்கு பிறகு அவரது இரண்டாவது மகன் முதலாம் குமாரகுப்தன் பதவிக்கு வந்தார். இவரது தாய் மகாதேவி துருவசுவமினி ஆவார். முதலாம் குமாரகுப்தன் மகேந்திராதித்தன் என்ற பட்டத்தை பெற்றிருந்தார்.[94] இவர் 455-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக் காலத்தின் முடிவின் போது நருமதைப் பள்ளத்தாக்கில் இருந்த ஒரு பழங்குடியினமான புஷ்யமித்திரர்கள் இவரது பேரரசுக்கு அச்சுறுத்தலாக உருவாயினர். முதலாம் குமாரகுப்தனின் ஆட்சியின் முடிவின் போது குப்த பேரரசுக்கு கிடாரிகளும் கூட அநேகமாக அச்சுறுத்தலாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. முதலாம் குமாரகுப்தனின் மகன் ஸ்கந்தகுப்தர் தன்னுடைய பிதாரி தூண் கல்வெட்டில், ஒழுங்கற்று இருந்த நாட்டை மீண்டும் கட்டமைப்பதில் தனது முயற்சிகளை பற்றியும், புஷ்யமித்திரர்கள் மற்றும் ஊணர்களுக்கு எதிராக இராணுவத்தை மீண்டும் ஒருங்கிணைத்து வெற்றிகளை பெற்றதையும் குறிப்பிடுகிறார்.[95]
நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியது இவர் தான். 15 சூலை 2016 அன்று யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய களமாக இது அறிவிக்கப்பட்டது.[96] மேலும், முதலாம் குமாரகுப்தன் கார்த்திகேயனின் ஒரு பக்தன் ஆவான்.
ஸ்கந்தகுப்தர்
முதலாம் குமாரகுப்தனின் மகன் மற்றும் வாரிசான ஸ்கந்தகுப்தர் பொதுவாக பெரும் குப்த ஆட்சியாளர்களில் கடைசியானவராக கருதப்படுகிறார். இவர் விக்கிரமாதித்தன் மற்றும் கிரமாதித்தன் ஆகிய பட்டங்களை பெற்றிருந்தார்.[97] புஷ்யமித்திர அச்சுறுத்தலை இவர் தோற்கடித்தார். ஆனால், பிறகு வடமேற்கில் இருந்து படையெடுத்து வந்த கிடாரிகளை இவர் எதிர் கொள்ள வேண்டியிருந்தது (இந்த கிடாரிகள் சில நேரங்களில் ஹெப்தலைட்டுகள் அல்லது "வெள்ளை ஊணர்கள்" என்று குறிப்பிடப்படுகின்றனர், இந்தியாவில் இவர்கள் சுவேதா ஊணர்கள் என்று அறியப்படுகின்றனர்).
பொ. ஊ. 455 வாக்கில் ஓர் ஊணர் தாக்குதலை இவர் முறியடித்தார். ஆனால், போர்களினால் ஏற்பட்ட செலவினங்கள் இவரது பேரரசின் ஆதாரங்களை வற்ற செய்தன. பேரரசு வீழ்ச்சியடைவதற்கு பங்காற்றின. சந்திரகுப்தருக்கு பின் ஆட்சிக்கு வந்த ஸ்கந்தகுப்தரின் பிதாரி தூண் கல்வெட்டானது கிடாரிகளின் தாக்குதலைத் தொடர்ந்து குப்தப் பேரரசு கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு சென்றதை நினைவு கூறுகிறது.[98] பிறகு, குப்த பேரரசின் மேற்கு பகுதியின் கட்டுப்பாட்டை கிடாரிகள் பெற்றனர் என்று தோன்றுகிறது.[98]
ஸ்கந்தகுப்தர் 467-ஆம் ஆண்டு இறந்தார். இவருக்கு பிறகு இவரது உடன் பிறந்த சகோதரர் புருகுப்தர் ஆட்சிக்கு வந்தார்.[99]
வீழ்ச்சி

ஸ்கந்தகுப்தரின் இறப்பைத் தொடர்ந்து பேரரசானது வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்தது என்பது தெளிவாக தெரிகிறது.[101] 467-469க்கு பிறகு பெரும்பாலான மேற்கு இந்தியா மீதான தங்களது கட்டுப்பாட்டை இவர்கள் இழந்ததை பிந்தைய குப்த நாணய முறையானது காட்டுகிறது.[6] ஸ்கந்தகுப்தருக்கு பிறகு புருகுப்தர் (467–473), இரண்டாம் குமாரகுப்தர் (473–476), புத்தகுப்தர் (476–495), நரசிம்மகுப்தர் (495–530), மூன்றாம் குமாரகுப்தர் (530–540), விஷ்ணுகுப்தர் (540–550), மற்றும் இரு குறைவாக அறியப்பட்ட மன்னர்களான வைன்யகுப்தர் மற்றும் பானுகுப்தர் ஆகியோர் ஆட்சிக்கு வந்தனர்.
490களின் பிந்தைய பகுதியில் தோரமணன் மற்றும் மிகிரகுலன் தலைமையிலான அல்சோன் ஊணர்கள் வடமேற்கில் இருந்த குப்த அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுந்தனர். 500 வாக்கில் வடமேற்கில் இருந்த பேரரசின் பெரும்பாலான பகுதிகளில் ஊணர்கள் பரவினர். தோரமணன் மற்றும் அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த மிகிரகுலனின் தாக்குதலுக்கு கீழ் பேரரசானது சிதைந்தது என சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.[102][103] இவர்களது சக்தியானது பெருமளவுக்கு குறைந்திருந்த போதிலும் ஊணர்களை குப்தர்கள் தொடர்ந்து எதிர்த்து வந்தனர் என்பது கல்வெட்டுகளின் மூலம் நமக்கு தெரிகிறது. 510-இல் பானுகுப்தர் ஊண படையெடுப்பாளர் தோரமணனைத் தோற்கடித்தார்.[104][105] மன்னர் யசோதர்மனால் 528-இல் மல்வாவில் இருந்து ஊணர்கள் தோற்கடிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து துரத்தியடிக்கப்பட்டனர். இதில் குப்தப் பேரரசர் நரசிம்மகுப்தரும் ஒரு வேளை பங்கெடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[106]
இந்த படையெடுப்புகள் வெறும் சில தசாப்தங்களுக்கு மட்டுமே நடந்திருந்தாலும் இந்தியா மீது நீண்ட கால தாக்கத்தை இவை ஏற்படுத்தின. பாரம்பரிய இந்திய நாகரிகத்தின் முடிவுக்கு இவை காரணமாயின.[107] இந்த படையெடுப்புகளை தொடர்ந்து, இந்த படையெடுப்புகளால் ஏற்கனவே பலவீனமடைந்திருந்த குப்தப் பேரரசு மற்றும் யசோதர்மன் போன்ற உள்ளூர் ஆட்சியாளர்களின் எழுச்சிகளும் கூட முடிவுக்கு வந்தன.[108] இந்த படையெடுப்புகளை தொடர்ந்து, வட இந்தியாவானது குழப்பமான சூழ்நிலைக்கு உள்ளானது. குப்தர்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏராளமான சிறிய இந்திய சக்திகள் உருவாயின.[109] ஊண படையெடுப்புகள் ஐரோப்பா மற்றும் நடு ஆசியாவுடனான இந்தியாவின் வணிகத்தை கடுமையாக சேதப்படுத்தின என்று கூறப்படுகிறது.[107] குப்த பேரரசு பெருமளவுக்கு அனுகூலம் பெற்றிருந்த இந்திய-உரோம வர்த்தக உறவுகள் குறிப்பாக சேதமடைந்தன. நாசிக், பைத்தான், பாடலிபுத்திரம், மற்றும் பனாரசு போன்ற மையங்களில் இருந்து பட்டு, தோல் பொருட்கள், உரோமங்கள், இரும்பு பொருட்கள், தந்தம், முத்து, மற்றும் மிளகு போன்ற ஏராளமான ஆடம்பர பொருட்களை குப்தர்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். ஊண படையெடுப்பானது அநேகமாக இந்த வர்த்தக உறவுகளை தடை செய்திருக்கலாம், இதிலிருந்து கிடைக்கப்பட்ட வரி வருவாயின் முடிவிற்கும் காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[110]
மேலும், இந்தியாவின் நகர்ப்புற பண்பாடானது வீழ்ச்சியடையும் நிலைக்கு உள்ளானது. மடாலயங்கள் அழிக்கப்பட்டது மற்றும், சைவ சமயத்தைச் சேர்ந்த மற்றும் தீவிரமான பௌத்த எதிர்ப்பாளரான மிகிரகுலனின் கைகளில் துறவிகள் கொல்லப்பட்டது ஆகியவற்றால் மிகுந்த பலவீனமடைந்த பௌத்தமானது வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.[107] தக்சசீல நகரம் போன்ற பெரும் கல்வி மையங்கள் அழிக்கப்பட்டன. இதனால் பண்பாட்டு வீழ்ச்சி ஏற்பட்டது.[107] தங்களது 60 ஆண்டு கால ஆட்சியின் போது அல்சோன்கள் வட இந்தியாவின் ஆளும் குடும்பங்களின் படி நிலை அமைப்பு மற்றும் இந்திய சாதி அமைப்பை மாற்றினார் என்று கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இராசபுத்திரர்களின் முன்னோர்களாக ஊணர்கள் திகழ்ந்தனர் என்று பொதுவாக கூறப்படுகிறது.[107]
அண். பொ. ஊ. 600 அல்சோன் ஊணர்கள் வடமேற்கு நோக்கிப் பின் வாங்குதல் மற்றும் குப்தப் பேரரசின் முடிவுக்கு பிறகு அண். பொ. ஊ. 600இல் தெற்காசியாவின் அரசுகளின் சிதறல்[111]
6-ஆம் நூற்றாண்டில் குப்தர்களின் நிலை குறித்து முழுவதுமாக தெளிவாக தெரியவில்லை. ஆனால், குப்தர்களின் முதன்மையான மரபின் கடைசி அங்கீகரிக்கப்பட்ட ஆட்சியாளர் விஷ்ணுகுப்தர் ஆவார். இவர் 540 முதல் 550 வரை ஆட்சி புரிந்தார். ஊணர் படையெடுப்புடன், பேரரசின் வீழ்ச்சிக்குப் பங்களித்த காரணிகளில் வாகாடகப் பேரரசிடமிருந்து வந்த போட்டி மற்றும் மால்வாவில் யசோதர்மனின் வளர்ச்சி ஆகியவையும் உள்ளடங்கியுள்ளன.[112]
ஒரு குப்தப் பேரரசரிடமிருந்து வந்ததாக கடைசியாக அறியப்பட்ட கல்வெட்டானது (தாமோதரபுரம் தாமிரத் தட்டு கல்வெட்டு)[113] விஷ்ணுகுப்தரின் ஆட்சிக் காலத்தின் போது உருவாக்கப்பட்டதாகும். பொ. ஊ. 542/543-இல் கோடிவருச பகுதியில் (மேற்கு வங்காளத்தின் பன்கர்க்) ஒரு நிலத்தை தானமாக விஷ்ணுகுப்தர் வழங்கியதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது[114]. இதைத் தொடர்ந்து பெரும்பாலான வடக்கு மற்றும் நடு இந்தியாவானது ஔலிகர ஆட்சியாளரான யசோதர்மனால் அண். பொ. ஊ. 532-இல் ஆக்கிரமிக்கப்பட்டது.[114]
உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் 6-ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி வாக்கில் ஏற்பட்ட ஓர் அழிவை ஏற்படுத்திய வெள்ளமே குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணம் என தொல்லியலாளர் சங்கர் சர்மாவின் ஒரு 2019-ஆம் ஆண்டு ஆய்வானது குறிப்பிடுகிறது.[115]
தொடர்ந்து வந்த அரசமரபுகள்
முந்தைய குப்தப் பேரரசின் மையப் பகுதியான கங்கைச் சமவெளியில் குப்தர்களுக்கு பிறகு மௌகரி மற்றும் புஷ்யபூதி அரசமரபுகள் ஆட்சிக்கு வந்தன.[116] குப்தர்களின் வெள்ளி நாணய வகையை மௌகரியர் மற்றும் புஷ்யபூதியரின் நாணய முறைகள் தொடர்ந்தன. ஆட்சியாளரின் உருவமானது நாணயங்களில் அச்சிடப்பட்டது (எனினும், குப்தர்களுடன் ஒப்பிடும் போது இவர்கள் உருவத்தை வேறு திசையில் திரும்பியவாறு அச்சிட்டனர். குப்தர்களுக்கு எதிரான பகைமை உணர்வின் அனேகமான அடையாளமாக இது கருதப்படுகிறது).[117] நாணயத்தின் பின் பகுதியில் மயில் உருவம் அச்சிடப்பட்டது. ஆட்சியாளரின் பெயரை தவிர்த்து ஏற்கனவே இருந்த பிராமி வரிகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டன.[116]
மேற்கு பகுதிகளில் குப்தர்களுக்கு பிறகு கூர்ஜரர், பிரதிகாரர் மற்றும் பின்னர் சாளுக்கிய-பரமார அரசமரபுகள் ஆட்சிக்கு வந்தன. சாளுக்கிய-பரமார அரசமரபுகள் இந்தோ-சாசானிய நாணய முறை என்று அழைக்கப்பட்ட நாணய முறையை வெளியிட்டனர். இது சாசானியப் பேரரசின் நாணய முறை வடிவத்தை அடிப்படையாக கொண்டிருந்தது. இந்த நாணய முறையை இந்தியாவிற்கு அல்சோன் ஊணர்கள் அறிமுகப்படுத்தினர்.[116]
Remove ads
இராணுவம்

மௌரியப் பேரரசுக்கு மாறாக குப்தர்கள் இந்திய போர் முறையில் பல இராணுவ புதுமைகளை அறிமுகப்படுத்தினர். இதில் முதன்மையானது முற்றுகை எந்திரங்கள், கனரக குதிரை வில்லாளர்கள் மற்றும் கனரக வாள்களையுடைய குதிரைப் படை ஆகியவற்றின் பயன்பாடு ஆகும். கனரக குதிரைப் படையானது குப்த இராணுவத்தின் மையப் பகுதியை அமைத்தது. இதற்கு ஆதரவளிக்க பாரம்பரிய இந்திய இராணுவ காரணிகளான யானைகள் மற்றும் இலகுரக காலாட்படையினர் பயன்படுத்தப்பட்டனர்.[119]
குப்தர் காலத்தில் குதிரை வில்லாளர்களை பயன்படுத்தியதானது இரண்டாம் சந்திரகுப்தர், முதலாம் குமாரகுப்தன் மற்றும் பிரகாசாதித்தன் (இவர் புருகுப்தர் என்று நம்பப்படுகிறார்)[120] ஆகியோரின் நாணய முறைகளை சான்றாகக் கொண்டு அறிந்து கொள்ளப்படுகிறது. இந்த நாணயங்கள் பேரரசர்களை குதிரை வில்லாளர்களாக காட்டின.[121][122]
ஏகாதிபத்திய குப்த இராணுவத்தின் உத்தி ரீதியான நடவடிக்கைகளை விளக்கும் சமகால ஆதாரங்கள் அதிகம் காணப்படவில்லை. கிடைக்கப் பெறும் சிறந்த தகவலானது பாரம்பரிய சமசுகிருதத எழுத்தாளர் மற்றும் நாடகவியலாளர் காளிதாசனால் எழுதப்பட்ட சமசுகிருதத மகா காவியமான இரகு வம்சத்தில் இருந்து வருகிறது. இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக் காலம் முதல் ஸ்கந்தகுப்தரின் ஆட்சிக் காலம் வரை காளிதாசன் வாழ்ந்தார் என்ற பார்வையை பல நவீன அறிஞர்கள் முன் வைக்கின்றனர்.[123][124][125][126] காளிதாசனின் இரகு வம்சத்தின் கதாநாயகனான இரகுவின் படையெடுப்புகள் இரண்டாம் சந்திரகுப்தரை பிரதிபலிப்பதாக உள்ளன. [127]ரகு வம்சத்தின் நான்காவது பிரிவில் மன்னரின் படைகளானவை எவ்வாறு சக்தி வாய்ந்த, குதிரைப் படையை மையமாக கொண்ட பாரசீகர்கள் மற்றும் யவனர்களின் (அனேகமாக ஊணர்கள்) படைகளுக்கு எதிராக வடமேற்கில் மோதின என்பதைக் குறிப்பிடுகிறார். இவ்விடத்தில் இவர் மன்னரின் இராணுவத்தில் குதிரை வில்லாளர்களை பயன்படுத்தியதை முக்கியமாகக் குறிப்பிடுகிறார். கடினமாக போட்டியிடப்பட்ட யுத்தங்களுக்குப் பிறகு குதிரைகளுக்கு ஓய்வு தேவைப்பட்டது என்பதையும் குறிப்பிடுகிறார்.[128] குப்த இராணுவத்தின் ஐந்து பிரிவுகளானவை காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை, யானைப்படை மற்றும் கப்பற்படை ஆகியவையாகும். வைன்யகுப்தரின் குனைகர் தாமிர தட்டு கல்வெட்டானது கப்பல்களை குறிப்பிடுகிறது. ஆனால் தேர்களை குறிப்பிடவில்லை.[129] பொ. ஊ. 6-ஆம் நூற்றாண்டில் இந்திய இராணுவத்தின் இன்றியமையாத பகுதியாக கப்பல்கள் உருவாயின.
Remove ads
சமயம்

குப்தர்கள் பாரம்பரியமாக ஓர் இந்து அரசமரபினர் ஆவர்.[130] இவர்கள் பண்டைய வேத சமயத்திற்கு புரவலர்களாக திகழ்ந்தனர்.[131][132][133][134] பௌத்த மற்றும் சைனத்தை பின்பற்றியவர்களை அவர்களது சமயங்களை பின்பற்ற அனுமதியளித்தனர்.[135] சாஞ்சி தொடர்ந்து பௌத்தத்திற்கான ஒரு முக்கியமான மையமாக திகழ்ந்தது.[135] முதலாம் குமாரகுப்தன் (பொ. ஊ. 455) நாளந்தாவை நிறுவியதாக கூறப்படுகிறது.[135] நவீன மரபணு ஆய்வுகள் இந்திய சாதி குழுக்கள் ஒன்றுடனொன்று திருமண உறவை நிறுத்திக் கொண்டது குப்தர் காலத்தின் போது தான் என்று காட்டுகின்றன (இதற்கு பிறகு அகமணம் செய்ய ஆரம்பித்தன).[136]
எனினும், சில பிந்தைய ஆட்சியாளர்கள் குறிப்பாக பௌத்தத்தை ஊக்குவித்ததாக தோன்றுகிறது. சமகால எழுத்தாளர் பரமார்த்தனின் கூற்றுப் படி, நரசிம்ம குப்த பாலாதித்தன் (அண். 495–?) மகாயன பௌத்த தத்துவவாதியான வசுபந்துவின் தாக்கத்தின் கீழ் இருந்தார் என்று குறிப்பிடப்படுகிறது.[130] இவர் நாளந்தாவில் ஒரு சங்கராமத்தைக் (பௌத்தத் துறவிகளின் தங்குமிடம்) கட்டினார். ஒரு புத்தர் சிலையை கொண்ட ஒரு 300 அடி உயர புத்த விகாரத்தையும் கூட கட்டினார். சுவான்சாங் அதன் உள் அமைப்பானது "போதி மரத்தின் கீழ் கட்டப்பட்ட பெரிய விகாரத்தை" ஒத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மஞ்சுசிறீமுலகல்பத்தின் (அண். 800 CE) படி, மன்னர் நரசிம்ம குப்த பாலாதித்தன் ஒரு பௌத்த துறவியானார்.[130] தியானம் இருந்து இந்த உலகத்தை விட்டு பிரிந்தார். சீன துறவி சுவான்சாங் நரசிம்ம குப்த பாலாதித்தனின் மகனான வஜ்ரனும் ஒரு சங்கராமத்தை நிறுவினான் என்றும், "பௌத்த நம்பிக்கையில் திடமாக இருந்த மனதை கொண்டவனாக இருந்தான்" என்றும் குறிப்பிடுகிறார்.[137]:45[138]:330
Remove ads
நிர்வாகம்
குப்தப் பேரரசின் கல்வெட்டுப் பதிவுகள் குறித்த ஓர் ஆய்வானது மேலிருந்து கீழாக நிர்வாகப் பிரிவுகளில் ஒரு படி நிலை அமைப்பானது இருந்ததைக் காட்டுகிறது. பேரரசானது இராச்சியம், இராட்டிரம், தேசம், மண்டலம், பிரித்திவி மற்றும் அவனி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டது. இது 26 மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. மாகாணங்கள் புக்தி, பிரதேசம் மற்றும் போகம் என்று அழைக்கப்பட்டன. மேலும் மாகாணங்கள் விசயங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. விசயபதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த விசயங்கள் கொடுக்கப்பட்டன. ஒரு விசயபதி விசயத்தை அதிகரணம் எனும் பிரதிநிதிகளின் மன்றத்தின் உதவியுடன் நிர்வகித்தார். அதிகரணமானது நான்கு பிரதிநிதிகளை கொண்டிருந்தது: நகரசுரேசேசுதி, சர்தவகம், பிரதம குலிகம் மற்றும் பிரதம கயத்தா. விசயத்தின் ஒரு பகுதியானது விதி என்று அழைக்கப்பட்டது.[139] குப்தர்கள் சாசானிய மற்றும் பைசாந்திய பேரரசுடன் வணிக தொடர்புகளையும் கொண்டிருந்தனர்.[சான்று தேவை] குப்தர் காலத்தின் கீழ் நான்கு பிரிவுகளை உடைய வர்ண அமைப்பானது பின்பற்றப்பட்டது. ஆனால், சாதி அமைப்பானது நீர்ம இயல்பை உடையதாக இருந்தது. பிராமணர்கள் பிராமணர் சாராத தொழிலையும் செய்தனர். சத்திரியர்கள் வணிகத்திலும் ஈடுபட்டனர். சமூகமானது பெரும்பாலும் தற்சார்பு உடையதாக இருந்தது.[140]
நகரமயமாக்கல்
குப்த நிர்வாகமானது நகர மையங்களின் விரைவான வளர்ச்சிக்கு மிகுந்த சாதகமானதாக இருந்தது என நிரூபிக்கப்பட்டது. சீன எழுத்தாளர் பாசியான் மகதத்தை செழிப்பான பட்டணங்கள் மற்றும் பெரிய மக்கள்தொகையை உடைய ஒரு செழிப்பு மிக்க நாடு என்று குறிப்பிட்டுள்ளார். அயோத்தியானது இரண்டாவது தலைநகரமாக கருதப்பட்டது. உஜ்ஜைனை வென்ற பிறகு அதை ஒரு முதன்மையான பண்பாட்டு மையமாக முன்னேற்றுவதில் சந்திரகுப்த விக்கிரமாதித்தன் தனிப்பட்ட கவனம் கொண்டிருந்தார்.[141]
Remove ads
மரபு
இந்த காலத்தைச் சேர்ந்த அறிஞர்களில் வராகமிகிரர் மற்றும் ஆரியபட்டரும் அடங்குவர். ஆரியபட்டர் பூச்சியத்தை ஒரு தனி எண்ணாக முதன் முதலில் கருதியவராக நம்பப்படுகிறார். புவி அதன் சொந்த அச்சை கொண்டு சுழலுகிறது என்ற கருத்தியலையும் இவர் பரிந்துரைத்தார். சூரிய மற்றும் சந்திர கிரகணங்களையும் ஆய்வு செய்தார். சமசுகிருத இலக்கியத்தின் உச்ச நிலையை குறித்ததாக அறியப்படுகிற சகுந்தலம் போன்ற நாடகங்களை எழுதிய மிகச் சிறந்த நாடக ஆசிரியரான காளிதாசன் இந்த காலத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தின் அனைத்து முதன்மையான கருத்தியல்களையும் கொண்ட, அறுவை சிகிச்சை குறித்த புதுமையான பிரிவுகளையும் கொண்டிருந்த ஒரு சமசுகிருத நூலான சுசுருத சம்மிதமானது குப்தர் காலத்தை சேர்ந்ததாக காலமிடப்படுகிறது.
சதுரங்கம் இக்காலத்தின் போது உருவானது என்று கருதப்படுகிறது.[142] இது 6-ஆம் நூற்றாண்டில் அதன் தொடக்க கால வடிவத்தில் விளையாடப்பட்டது. சதுரங்கம் என்ற சொல்லுக்கு "[இராணுவத்தின்] நான்கு பிரிவுகள்" என்று பொருள். அவை காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை, மற்றும் யானைப் படை ஆகியவையாகும். இவையே சதுரங்கத்தின் நவீன காவலன், குதிரை, மந்திரி மற்றும் யானையாக முறையே உருவாயின. மருத்துவர்கள் பல மருத்துவ உபகரணங்களையும் கூட தயாரித்தனர். அறுவை சிகிச்சைகளையும் கூட செய்தனர். உலகின் முதல் இடஞ்சார் குறியீடு பதின்மம் எண்குறி முறைமையான இந்து-அரபு எண்ணுருக்கள் குப்த இந்தியாவில் உருவானது. இந்து தெய்வங்கள் மற்றும் கிரகங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாரத்தின் ஏழு நாட்களின் பெயர்களானவை குப்தர் காலத்தின் தொடக்கத்தில் தோன்றின.
குப்தர் காலத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க கணிதவியலாளர் மற்றும் வானியலாளரான ஆரியபட்டர் பூமி உருண்டையானது என்றும், அது அதன் சொந்த அச்சை கொண்டு சுழல்கிறது என்ற கருத்தியலையும் பரிந்துரைத்தார். சூரிய ஒளியை பிரதிபலிப்பதால்லேயே நிலவும், பிற கிரகங்களும் ஒளிர்கின்றன என்பதையும் கூட கண்டறிந்தார். ஏற்கனவே இருந்த கருத்தியலான கிரகணங்கள் இராகு மற்றும் கேதுவால் ஏற்படுகின்றன என்ற நம்பிக்கையை தவிர்த்து, பூமியின் நிழல் மற்றொன்றின் மீது விழுவதால் மற்றும் நிழல் பூமியின் மீது விழுவதால் கிரகணங்கள் ஏற்படுகின்றன என்ற அடிப்படையில் இவர் விளக்கம் அளித்தார்.[143]
Remove ads
கலையும், கட்டடக் கலையும்
- மௌரியர் கால அடித் தளத்தைக் கொண்ட ஓர் அரைக் கோள மண்டபத்துக்கு பக்க வாட்டில் நான்கு தூண்களையுடைய குப்தர் கால கோயிலானது சாஞ்சியில் அமைந்துள்ளது. இது பௌத்த மற்றும் இந்து கட்டடக் கலைக்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.[144][not in citation given][145][146] ஆண்டு பொ. ஊ. 5-ஆம் நூற்றாண்டு.
- மகாபோதிக் கோயிலின் தற்போதைய வடிவமானது பொ. ஊ. 5-ஆம் நூற்றாண்டு குப்தர் சகாப்தத்திற்கு காலமிடப்படுகிறது. புத்தர் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் அமைவிடத்தை இது குறிக்கிறது.
- தசாவதாரக் கோயில் என்பது குப்தர் காலத்தின் போது கட்டப்பட்ட ஒரு விஷ்ணு இந்துக் கோயில் ஆகும்.
- பதைனி கோயில் என்பது குப்தர் காலத்தின் போது கட்டப்பட்ட ஒரு சைன கோயிலாகும்.
அனைத்து முதன்மையான சமயக் குழுக்களுக்கும் வட இந்திய கலையின் ஒரு பாரம்பரிய உச்ச நிலையாக குப்தர் காலமானது பொதுவாக கருதப்படுகிறது. ஓவியம் வரைவது என்பது பரவலாக வெளிப்படையாக உள்ள போதும், தற்போது எஞ்சியுள்ள வேலைப்பாடுகளில் கிட்டத்தட்ட அனைத்துமே சமய சிற்பங்களாக உள்ளன. இந்துக் கலையில் புகழ்பெற்றதும், பாறையில் செதுக்கப்பட்டதுமான கடவுள் சிலைகளின் தோற்றத்தை இக்காலமானது கண்டது. மேலும், பௌத்த மற்றும் சைன தீர்த்தங்கரர் சிலைகளும் செதுக்கப்பட்டன. இதில் சைன தீர்த்தங்காரர் சிலைகள் பெரும்பாலும் ஒரு பெரும் அளவில் செதுக்கப்பட்டன. சிற்பங்களுக்கான இரு பெரும் மையங்களாக மதுராவும், காந்தார தேசமும் திகழ்ந்தன. காந்தார தேசமானது கிரேக்க-பௌத்தக் கலையின் மையமாகத் திகழ்ந்தது. இரு மையங்களுமே வட இந்தியாவின் பிற பகுதிகளுக்கு சிற்பங்களை ஏற்றுமதி செய்தன.
ஒரு பரவலான குப்தர் பாணியில் எஞ்சியுள்ள நினைவுச் சின்னங்களில் மிகுந்த பிரபலமானவையாக அஜந்தா, எலிபண்டா மற்றும் எல்லோரா குகைகள் உள்ளன. இவை முறையே பௌத்த, இந்து மற்றும், சைனம் உள்ளிட்ட கலவையான பாரம்பரியங்களை கொண்டவையாக உள்ளன. இவை உண்மையில் பிந்தைய அரசமரபுகளின் காலத்தின் போது உருவாக்கப்பட்டவையாகும். ஆனால், இவை குப்தர் பாணியின் முக்கியத்துவம் மற்றும் சம நிலையை முதன்மையாக பிரதிபலிக்கின்றன. இது மற்றும் இதையொட்டிய காலங்களை சேர்ந்த எஞ்சியுள்ள மிக முக்கியமான ஓவியங்களை அஜந்தா குகை உள்ளடக்கியுள்ளது. இது ஒரு முதிர்ந்த வடிவத்தைக் காட்டுகிறது. அனேகமாக இது ஒரு நீண்ட காலமாக முன்னேற்றப்பட்டு வந்த கலையாக இருந்திருக்கலாம். இவை முதன்மையாக ஓவியங்களையுடைய அரண்மனைகளில் வளர்ச்சி அடைந்திருந்தன.[147] இந்து உதயகிரி குகைகளானவை உண்மையில் அரசமரபு மற்றும் அதன் மந்திரிகளுடனான தொடர்புகளை பதிவு செய்துள்ளன.[148] தியோகரில் உள்ள, முக்கியமான சிற்பங்களைக் கொண்டுள்ள தசாவதாரக் கோயில் ஒரு குறிப்பிடத்தக்க கோயிலாகும். தொடக்க காலத்தில் உருவாக்கப்பட்ட எஞ்சியுள்ளவற்றில் இதுவும் ஒன்றாகும்.[149]
- ஆதிசேஷன் (அனந்தன்) நாகம் மீது சாய்ந்து படுத்திருக்கும் விஷ்ணு, இடம்: தசாவதாரக் கோயில், ஆண்டு: 5-ஆம் நூற்றாண்டு
- சாரநாத்தைச் சேர்ந்த புத்தர் சிலை, ஆண்டு: பொ. ஊ. 5-6-ஆம் நூற்றாண்டு
- எலிபண்டா குகைகளில் உள்ள பிரம்மாண்ட மும்மூர்த்திகள்
- அஜந்தாவின் முதலாம் குகையில் உள்ள அவலோகிதரின் ஓவியம்
- மேற்கு வங்காளத்தின் சிலாபட்டா காட்டிலுள்ள நல்ராஜர் கர்க்கில் காவல் சுவர். குப்தர் காலத்தைச் சேர்ந்த கடைசியாக எஞ்சியுள்ள காவல் சுவர்களில் இதுவும் ஒன்றாகும். இதன் உயரம் தற்போது 5 - 7 மீட்டர் ஆகும்.
- நாளந்தா பல்கலைக்கழகமானது முதன் முதலில் குப்தப் பேரரசின் கீழ் நிறுவப்பட்டது
- குப்தர் காலத்தைச் சேர்ந்த பிதர்கோன் கோயில். உலகின் எந்த ஓர் இடத்திலும் நுனிகளையுடைய கோபுரங்களை கொண்ட தொடக்க கால கட்டட எடுத்துக் காட்டுகளில் ஒன்றாக இவை உள்ளன.
- குப்தர் சகாப்தத்தைச் சேர்ந்த அஜந்தா குகைகள்
- குதிரை அரக்கன் கேசியுடன் சண்டையிடும் கிருட்டிணர், ஆண்டு: 5-ஆம் நூற்றாண்டு
Remove ads
ஆட்சியாளர்களின் பட்டியல்
மேலும் காண்க
குறிப்புகள்
- According to டி. என். ஜா, caste distinctions became more entrenched and rigid during this time, as prosperity and the favour of the law accrued the top of the social scale, while the lower orders were degraded further.[7]
- "Historians once regarded the Gupta period (c.320–540) as the classical age of India [...] It was also thought to have been an age of material prosperity, particularly among the urban elite [...] Some of these assumptions have been questioned by more-extensive studies of the post-Mauryan, pre-Gupta period. Archaeological evidence from the earlier Kushan levels suggests greater material prosperity, to such a degree that some historians argue for an urban decline in the Gupta period."[8]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads